Primary tabs
-
6.3 ஈழத்துத் திறனாய்வாளர்கள்
ஈழத்துத் திறனாய்வாளர்களில் பலர் முற்போக்கு இலக்கியப் பார்வை கொண்டவர்கள். மார்க்சிய அடிப்படையில் அமைந்த திறனாய்வுகளோடு எதிரான போக்கிலமைந்த திறனாய்வுகளும் ஈழத்தில் நிலவுகின்றன. அவை குறித்து இப்பகுதியில் காண்போம்.
இலங்கையைச் சேர்ந்த கைலாசபதி, லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் புறநானூற்றை முக்கியமாகக் கொண்டு Tamil Heroic Poetry என்ற தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெற்றவர். கல்வியியல் வழிவந்த சிறந்த திறனாய்வாளராகவும், மார்க்சியத் திறனாய்வு முறையில் ஒரு சாதனையாளராகவும், பல திறனாய்வாளர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கிய கைலாசபதி 1965-68 என்ற காலப்பகுதியில் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், சமூக இயலும் இலக்கியமும், திறனாய்வுப் பிரச்சனைகள், ஒப்பியல் இலக்கியம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. பழைய இலக்கியம் முதல் இன்றைய படைப்பிலக்கியம் வரை ஆராய்ந்துள்ள இவர், அவை பற்றிய சமூக வரலாற்று உள்ளடக்கங்களை ஆழ்ந்து வெளிப்படுத்தினார். சமூகத்தின் வளர்நிலைகளிலுள்ள அவலங்கள் முதலியவற்றை இலக்கியங்கள் எவ்வாறு சித்திரிக்கின்றன என்று காட்டுவதில் அக்கறை கொண்ட இவர், இருப்புக்களும் மாற்றங்களும், காரண- காரியங்களோடு அமைந்திருக்கின்றன என்ற கருதுகோள் கொண்டவர். ஈழத்திலும் தமிழகத்திலும் திறனாய்வாளர்களிடையே அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் கலாநிதி கைலாசபதி.
கைலாசபதியோடு சேர்த்து நினைக்கப்படுகிறவர், கா.சிவத்தம்பி. இவரும் கல்வியாளர் ; மார்க்சிய ஆய்வாளர்; இலக்கியங்களின் நீண்ட வரலாற்றை ஆய்வுத்தளமாகக் கொண்டவர். மேலும், நாடகங்களையும் திரைப்படத் துறையையும் தம்முடைய ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டவர். இலக்கிய வரலாறு எழுதும் முறைகளில் அறிவியல் நிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்று ஏற்பட்டு வரும் நவீனச் சிந்தனை முறைகள் பற்றியும் அவை தமிழ் இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பது பற்றியும் இவர் விரிவாகப் பேசியுள்ளார்.
ஈழத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க இன்னொரு திறனாய்வாளர்கள் எம்.ஏ.நுஃமான். சமூகவியல் ஆய்வில், முன்னர்ச் சொன்ன இருவர் போன்று அக்கறை கொண்ட இவர், இலக்கியத்தில் மொழியியல், நடைச்சிறப்பு, அழகியல் ஆகியவை பற்றிய அக்கறையும் வேண்டும் என வலியுறுத்துகின்றார். எஸ்.பொன்னுத்துரை, சண்முகதாஸ், மௌனகுரு, ந.சுப்பிரமணியம் முதலியோரும் ஈழத்தைச் சேர்ந்த பிற திறனாய்வாளர்கள் ஆவர். ஏ.ஜே.கனகரத்தினா இவர்களுள் நவீனத் திறனாய்வு முறைகள் பற்றித் தீர்க்கமான கருத்துகள் கொண்டவர். மு.தளைய சிங்கம், காந்தியம் - சர்வோதயம் என்ற கருத்து நிலையின் பின்னணியில் இலக்கியத்தையும் பண்பாட்டையும் திறனாய்வு செய்கின்றார். ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் 1956-63 என்ற குறுகிய ஏழாண்டுக் காலப் பகுதியை அளவாகக் கொண்டு, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தையும் திறனாய்வுப் பிரச்சனைகளையும், அரசியல் பண்பாட்டு - நிகழ்வுகளையும் தெளிவுறத் திறனாய்ந்து சொல்கிறார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I4.தமிழில் திறனாய்வாளர்களை அதிகமாகப் பாதித்த / செல்வாக்குச் செலுத்திய ஈழத்துத் திறனாய்வாளர் யார்?
-