Primary tabs
-
6.4 மார்க்சியத் திறனாய்வாளர்கள்
முன் பகுதியில் ஈழத்துத் திறனாய்வாளர்களைப் பார்த்தோம். இப்பகுதியில் தமிழ்நாட்டின் சமகால மார்க்சியத் திறனாய்வாளர்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.
இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு என்ற இரண்டும் நெருக்கமாக உறவுடையவை. பல சமயங்களில் இவை வேறுபாடின்றியும் அமைவதுண்டு. ஆராய்ச்சிக்கும் திறனாய்வுக்கும் இடைப்பட்ட நிலையில், தெ.பொ.மீ., எஸ்.வையாபுரிப்பிள்ளை, கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, ரகுநாதன், கோ.கேசவன் முதலியோரைக் காணலாம். இவர்களுள் தொ.மு.சி.1940-களிலிருந்து தொடங்கி, ஒரு ஐம்பதாண்டுகளுக்குமேல், கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு முதலிய பல துறைகளில் ஆழமாக எழுதியவர். மார்க்சிய அறிஞராக விளங்கியவர். இலக்கிய விமரிசனத்திற்கெனத் தனிநூல் எழுதியவர். இலக்கியத்தை வரலாற்றியல் - இயங்கியல் பார்வையில், இலக்கியம் கூறும் செய்திகளும், அவ்வக்காலச் சமுதாயச் சூழமைவுகளும் காரண காரியங்களோடு அமைவன என்று கொண்டு அவர் எழுதினார். பாரதியின் பல கவிதைகளுக்குப் பின்னால் அவருடைய காலத்துச் சமுதாயச் சூழ்நிலைகளும் அவருடைய தனிப்பட்ட சூழ்நிலைகளும் தர்க்கரீதியாகப் பின்னிக்கிடப்பதை, அவருடைய பாரதி- காலமும் கருத்தும் என்ற ஆராய்ச்சி நூல் புலப்படுத்துகிறது.
தொ.மு.சி.ரகுநாதன் போன்றே, மார்க்சியத் தத்துவம் கூறுகின்ற வரலாற்று இயங்கியல் (Historical materialism) முறையில் ஆய்வு செய்தவர் கோ.கேசவன். இவர் கல்வியாளர். அதேபோது இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். சாதி, சமயம், வர்க்கம் முதலியவை பற்றிய ஆழமான கண்ணோட்டம் கொண்ட கேசவன், தமிழ்ச் சமூக வரலாற்றியலை மீட்டுருவாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டு எழுதினார். மண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம் - ஒரு சமூகப்பார்வை, இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை ஆகிய நூல்களை எழுதிய இவர், கலாநிதி கைலாசபதியின் திறனாய்வு பற்றியும் தனியே எழுதியிருக்கிறார். பள்ளு இலக்கியம் என்பது தாழ்த்தப்பட்ட பள்ளர்களின் பெருமையையும் வாழ்க்கையையும் பற்றிக் கூறுவது என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு மாறாகப் பண்ணையார்கள் மற்றும் உயர் சாதிக்காரர்கள் என்ற நிலையிலிருந்து, பண்ணையடிமைகளைப் பற்றி எழுதப்பட்டதே முக்கூடற்பள்ளு முதலிய பள்ளு இலக்கியங்கள் என்று கோ.கேசவன் விளக்குகிறார்.
கலாநிதி கைலாசபதி போன்றே, தமிழகத்தில் மிகச் சிறந்த மார்க்சியத் திறனாய்வாளராக விளங்கியவர் பேராசிரியர் நா.வானமாமலை. நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றை நிறுவிய இவர், பல இளம் திறனாய்வாளர்களை உருவாக்கி வளர்த்தவர். இலக்கியமன்றியும் நாட்டுப்புறவியலிலும் தனியான அக்கறை கொண்ட இவர், அத்துறையைத் தமிழகத்தில் சிறப்புறும்படி வளர்த்தவர். சமயம், தத்துவம், நாட்டுப்புறவியல், இலக்கியம் முதலிய பல்துறைகளும் இணைந்த பல்துறை ஆராய்ச்சியாளர் இவர். தமிழில் 1960-70களில் புதுக்கவிதை எனும் புதுவகை தோன்றுகிறபோது, அதில் கவனம் செலுத்தினார். சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புறம்பாகவுள்ள போக்குகளைப் பிற்போக்கானவை யென்றும், நம்பிக்கைகளையும், சமூக உணர்வுகளையும், மனித நேயங்களையும் கொண்ட போக்குகளை முற்போக்கானவை என்றும் இனங்கண்டறிந்து விமர்சிக்கும் அவருடைய நூல், புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் என்பது. பின்னர், தொடர்ந்து மார்க்சிய அழகியல், உருவம், உள்ளடக்கம் பற்றியும் எழுதினார்.
தற்கால இலக்கியங்களைக் குறிப்பிட்ட சில உருவவியல் மற்றும் சமூகவியல் கொள்கைகளோடு பொருத்தி விரிவாகத் திறனாய்வு செய்தவர்களில் கோவை ஞானி (பழனிச்சாமி), தமிழவன் (கார்லோஸ்), அ.மார்க்ஸ் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இம் மூவரும் கல்வியாளர்கள் ; அதேபோது, இலக்கியச் சிற்றிதழ்கள் நடத்தியவர்கள். சிற்றிதழ்கள் சார்ந்த எழுத்தாளர்களிடையே செல்வாக்கு உடையவர்கள்.
கோவை ஞானி 1970-90-களில் நிறைய எழுதினார். இவருக்குக் கலை-இலக்கியப் பிரச்சனைகள் என்பவை உருவம்- உள்ளடக்கம் என்பவற்றையும் தாண்டி, அப்பால், மனிதனின் ஆன்மீகம் பற்றிய பிரச்சனைகளாகத் தோன்றின. “எப்போதும், சூத்திரங்கள் எனக்குப் போதுமானவையல்ல; சூத்திரங்களினூடேயும் அப்பாலும் உண்மைகளைத் தேடிச் செல்வது என் இயல்பு” என்று இவர் சொல்கிறார். சமூக அக்கறையும் உணர்வும் ஒரு பக்கம் இருக்க, வைதிக சமயங்களின் வழிப்பட்ட ஆன்மீக வாதம் சார்ந்த தத்துவத்தேடல் இவருடைய திறனாய்வின் அம்சமாக உள்ளது. மேலைநாட்டுத் தத்துவங்களில் அந்நியமாதல் (alienation) என்பது இவர் அதிக அக்கறை கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் என்ற நூல்கள் இவர் எழுதியவற்றுள் சில.
தமிழவன், அமைப்பியலைத் (Structuralism) தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒரு முன்னோடி. இருபதில் கவிதை (1971), படைப்பும் படைப்பாளியும் (1989) ஆகியவை இவர் எழுதியவற்றுள் சில. படைப்பிலக்கியத்தின் பன்முகத் தன்மையை அமைப்பியல்தான் சரியாக விளக்க முடியும் என்று நம்பியவர் இவர். இதனடிப்படையில், திருப்பாவை எனும் இலக்கியத்தை அமைப்பியல் விமர்சனம் செய்து விளக்கினார். புதுக்கவிதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொல்காப்பியம் முதற்கொண்ட தொன்மை நூல்களிலும், இவர் தன் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். படைப்பிலக்கியம் போன்று, திறனாய்வுக்கும் முதன்மையான இடம் உண்டு என்ற கொள்கையுடையவர்.
தமிழவன் அமைப்பியல்வாதி என்றால், அ.மார்க்ஸ் பின்னை அமைப்பியல்வாதி (post-structuralism) ஆவார். மேலும், பின்னை நவீனத்துவத்திலும் (post-modernism) ஈடுபாடுடையவர் இவர். அழகும் செய்தியும் வெளியே இல்லை; பனுவலுக்குள்ளேயே (Literary text) இருக்கிறது என்று அமைப்பியல் பேசுகிறது, ஒருமுறை வாசித்தவுடன், கிடைக்கிற பொருள், அதன் பொருள் அல்ல ; மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது, பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும், அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும், அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணைபனுவலைக் (parallel text) கட்டமைக்கின்றன என்றும், பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகிறது என்றும் பின்னை அமைப்பியல் கூறுகின்றது. பனுவலில் அதிகார அரசியல் (politics of power) செயல்படுகிறது என்றும் கூறுகிறது. அ.மார்க்ஸ் இந்த அடிப்படையில் கவிதைகள், நாவல்கள், பல்வேறு பண்பாட்டு- வரலாற்று ஆவணங்கள் முதலியவற்றை ஆராய்கிறார். பெண் விடுதலை, தலித் விடுதலை என்பவற்றிற்கான மூலாதாரங்களில் அக்கறை கொண்ட இவர், படைப்பாளி - வாழ்க்கை - இலக்கியம், மார்க்சிய இலக்கியக் கொள்கை, தலித் அரசியல் - அறிக்கையும் விவாதமும் முதலிய பல நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம், மனிதவுரிமை முதலிய பல தளங்களிலே எழுதியும் இயங்கியும் வருகிற அ.மார்க்ஸ், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் அதிகமான தளங்களில் இயங்கி வருகிற திறனாய்வாளர் என்று சொல்லத்தக்கவர்.
நா.வானமாமலையைத் தொடர்ந்து வந்தவர், எஸ்.தோத்தாத்ரி. இவர் கல்வியாளர். தமிழ் நாவல்கள் பற்றிச் சமூகவியல் அடிப்படையில் நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். மார்க்சிய மெய்ஞ்ஞானம், மார்க்சிய அழகியல், சோசலிச யதார்த்தவாதம் ஆகியவற்றை விளக்குவதில் இவருடைய திறனாய்வு கவனம் செலுத்துகிறது. இவர்களைத் தொடர்ந்து வெ.கிருட்டிணமூர்த்தி, இலக்கியத் திறனாய்வின் மூலம் தமிழ்ப் பண்பாட்டை விளக்குவதில் ஆர்வம் காட்டினார். ஆய்வு வட்டம் என்ற அமைப்பு வழித் தொடர்ந்து கட்டுரைத் தொடர் - தொகுப்பு முயற்சியை இவர் மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து, இன்றுவரை பல திறனாய்வாளர்கள் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களையும் பரிமாணங்களையும் புலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளம்படைப்பாளிகள் பலர், திறனாய்விலும் ஆர்வம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியதாகவுள்ளது.