தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

  • 3.2 புதுமைப்பித்தன் சிறுகதைகள்

    புதுமைப்பித்தன் 1933 முதல் 1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் தம் கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். மேலும் அவர் மக்களிடமிருந்து தூர விலகி நின்று கதை சொல்லாமல் மக்களோடு ஒட்டி நின்றே தம் கதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் தம் கதைகளைப் பற்றி, “பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைத்திருக்கும் இன்ஷுரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்.......” என்றும், “இந்தக் கதைகள் யாவும் கலை உத்தாரணத்திற்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலையை எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது” என்றும், "நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை. ......... தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களில் எல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறியுள்ளார்.

    புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.

    3.2.1 கதைக் கரு

    புதுமைப்பித்தன் காதல், சாவு, வறுமை, காமம், பசி, பயம், சிறுமை, சீரழிவு, சோகம், குழப்பம், கொந்தளிப்பு, மந்திரம், புராணம் என்று பலவற்றைக் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எடுத்தாண்ட கதைக் கருக்களை அடிப்படையாகக் கொண்டு அக்கதைகளை,

    • தனிமனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள்
    • தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள்
    • சமுதாயச் சிக்கலை மையமிட்ட கதைகள்
    • காதலைக் கருவாகக் கொண்டவை
    • நகர வாழ்க்கையின் போலித் தன்மைகளை வெளிக்காட்டும் கதைகள்
    • கேலி, கிண்டல் இவற்றைக் கருவாகக் கொண்டவை.
    • பேய், பிசாசு, வேதாளம் இவற்றை மையமிட்ட கதைகள்
    • வறுமையைக் கருவாகக் கொண்டவை.

    என்று வகைப்படுத்திக் காட்டியுள்ளார் கரு. முத்தையா.

    புதுமைப்பித்தன் கதைகளில், ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தைப் பேசும் பொன்னகரமும், இராமன் கொடுத்த சாபவிமோசனத்தைத் தேவையில்லை என்று தூக்கியெறிந்து விட்டு மீண்டும் தன்னைக் கல்லாக்கிக் கொண்ட அகலிகையைப் பற்றிப் பேசும் சாபவிமோசனமும் பலரால் அதிகம் விமரிசிக்கப்பட்டவையாகும்.

    பொன்னகரத்தில் வாழ்பவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். ‘அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மமும் வேறு’ என்று அந்நகரை விவரிக்கும் புதுமைப்பித்தன், சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருக்கும் முருகேசன், அவன் மனைவி அம்மாளு, முருகேசனின் தாயார், தம்பி, குதிரை ஆக ஐவர் உள்ள ஏழ்மைக் குடும்பத்தை அக்கதையில் காட்டியுள்ளார்.

    ஒரு நாள் குடிபோதையில் அடிபட்டுப் பேச்சு மூச்சின்றிக் கிடக்கிறான் குதிரை வண்டிக்காரன் முருகேசன். அவனுக்கு நினைவு வந்தவுடன் பால் கஞ்சி கேட்கிறான். மில் கூலியான அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. வீட்டில் காசில்லை.

    தண்ணீர் எடுக்கச் செல்கிறாள் அம்மாளு, சந்திற்குப் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் ‘கண்’ வைத்திருப்பவன் - நிற்கிறான். அவனோடு இருளில் மறைகிறாள். “அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்”.

    “என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்” என்று கதையை முடித்துள்ளார் புதுமைப்பித்தன்.

    இக்கதையில், பொன்னகரத்தில் கற்பு படும் பாட்டை எரிமலையாகக் கொட்டுகிறார். ஒருபக்கம், கற்பு, கற்பு என்று கூக்குரலிடும் பணக்காரச் சமுதாயம், மறுபக்கம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நாள்தோறும் வாழ்வுக்குப் போராடும் சமூகம். பொருளாதாரம் என்ற கருவிதான் ‘கற்பை’ நிர்ணயிப்பது. சுகமாக வாழ்பவர்களுக்குக் கற்பு ஒரு பெரிய விஷயம். வறுமையின் பிடியில் இருப்பவர்களுக்குக் கற்பு பெரிய விஷயமல்ல. இதைத்தான் இக்கதை வழி புதுமைப்பித்தன் உணர்த்தியிருக்கிறார். அம்மாளுவின் நிலைமைக்குச் சமூகமே பொறுப்பு எனப் புதுமைப்பித்தன் சூசகமாக உணர்த்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    இன்னொரு விதமாகவும் இக்கதையை விமரிசிக்கலாம். கற்பு என்பது பதிவிரதா தர்மம். இக்கதையில், தன் பதிக்காகத் (கணவருக்காக) தான் அம்மாளு உடலை விற்கிறாள். எனவே இதைக் கற்பு என்று கொண்டாடப் போகிறீர்களா? கற்பு போயிற்று என்று தூற்றப் போகிறீர்களா? என்று சமூகத்தை நோக்கி வினவியுள்ளார், புதுமைப்பித்தன். இந்தக் கண்ணோட்டத்துடனும் ‘என்னவோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே’ என்ற வரிக்கு அர்த்தம் விளங்கிக் கொள்ள இயலும்.

    இப்படி, ஒரே வரியின் மூலம் வாசகர்களுக்குப் பலவிதச் சிந்தனைகளைத் தூண்டியுள்ள கதைதான் பொன்னகரம்.

    சாபவிமோசனம் கதையில், அகலிகையின் புராண வரலாற்றை எடுத்துக் கொண்டு சமுதாய விமரிசனத்தைச் செய்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகை இந்திரனால் உடல் மாசுபட்டாள்; அதற்காகக் கணவன் கௌதமனின் சாபம் பெற்று மனத்தால் பாதிக்கப்பட்டாள்; இராமனின் பாத தூசிபட்டுச் சாப விடைக்குப் பின், அவன் ஒருவனாவது தன்னைப் புரிந்து கொண்டானே என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்கிறாள்; சீதையை இராமன் தீக்குளிக்க வைத்த செய்தி கேட்டதும் துடித்துப் போகிறாள். சீதையின் கற்பை உலகுக்கு நிரூபிக்க விரும்பிய இராமனின் நிலைப்பாடு அவளுக்குப் புரிகிறது. தானே தன்னை மீண்டும் கற்சிலையாக்கிக் கொள்கிறாள். அதாவது, சாபவிமோசனம் பெற்றும் பாவ விமோசனம் பெறாத உலகில் அவள் வாழ விரும்பவில்லை என்பதைக் காட்டுவதுடன் கதை முடிகிறது.

    அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

    அகலிகை மீண்டும் கல்லானாள் மனச்சுமை மடிந்தது.

    புதுமைப்பித்தன் தாமே நுழைந்து இந்தத் தீர்ப்பைத் தருகிறார்.

    3.2.2 கதை மாந்தர்கள்

    புதுமைப்பித்தன் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாம் நிழல்கள் அல்ல; நிஜங்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்; உலக வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவர்கள்; நண்பர்களை நம்பி மோசம் போனவர்கள்; காதலால் தோல்வியடைந்தவர்கள்; வாயில்லாப் பூச்சிகள்; சமூகத்தை எதிர்க்கத் துணிந்தவர்கள்; எதிர்த்துத் தோல்வியடைந்தவர்கள்; எதிர்க்கத் தெம்பில்லாதவர்கள்; சமயப் போர்வையில் உலா வரும் சாத்தான்கள்; மனத்தால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் என்று பலவிதமாக அக்கதைப் பாத்திரங்கள் அமைந்துள்ளன.

    புதுமைப்பித்தன் படைத்த ஓரிரு கதை மாந்தர்களைப் பற்றி இங்குக் காண்போம்.

    கோபால ஐயங்கார் மனைவி என்ற கதையில், கோபால ஐயங்கார் டெப்டி கலெக்டர்; பிராமணர்; அவர் மனைவி மீனாட்சி வீட்டுப் பணிப்பெண்; படிப்பறிவு இல்லாதவள்; இடையர் குலப் பெண். அவளைப் புதுமைப்பித்தன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்.

    “மீனாட்சி பணிப்பெண். அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில் அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம். கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதே அல்லாது அவரிடத்தில் தன்னை மறந்த பாசம், லயம் பிறந்ததே கிடையாது”.   இவ்வாறு மீனாட்சியைப் படைத்துக் காட்டிய புதுமைப்பித்தன் கோபால ஐயங்காரை, “கோபால ஐயங்கார் ஒரு பொம்மைக்குக் காதல் உயிர் எழுப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அதில் தோல்வி இயல்பாகையால் மது என்ற மோகனாங்கியிடம் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது” என்று காட்டுகிறார். மீனாட்சியைப் படித்த பிராமணப் பெண்ணாக மாற்ற முயன்று தோற்ற கோபால ஐயங்கார் மது அருந்துவதுடன், மாமிச உணவையும் உண்ணத் தொடங்குகிறார். இருவரும் சேர்ந்து மது அருந்தத் தொடங்கிய பின்பு, அவர்களுக்கு இடையில் இருந்த சாதிப் பிரச்சினை அகல்கின்றது. மது போதையில், ‘ஏ, பாப்பான்’ என்று கொஞ்சுவாள் மீனாட்சி. ‘என்னடி எடச்சிறுக்கி’ என்று காதல் உரை பகர்வார் அவர்.

    இறுதியில், மீனாட்சி பிராமணத்தி ஆவது போய்க் கோபால ஐயங்கார் இடையர் ஆனார் என்று முடித்துள்ளார் புதுமைப்பித்தன். இக்கதையில் இனம், சாதி, பழக்க வழக்கங்கள் இவற்றால் மாறுபட்ட இரண்டு பாத்திரங்களை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    புதுமைப்பித்தனின் இயற்பெயர் யாது?
    2.
    புதுமைப்பித்தன் எந்தெந்த இதழ்களில் பணியாற்றியுள்ளார்?
    3.
    புதுமைப்பித்தனின் பிற புனை பெயர்கள் யாவை?
    4.
    புதுமைப்பித்தன் எழுதிய மொத்தச் சிறுகதைகள் எத்தனை?
    5.
    புதுமைப்பித்தன் கதைகளில் அதிக விமர்சனத்திற்கு ஆளான கதைகள் இரண்டினைக் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 14:44:08(இந்திய நேரம்)