தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுமைப்பித்தனின் சமுதாயப் பார்வை

  • 3.3 புதுமைப்பித்தனின் சமுதாயப் பார்வை

    புதுமைப்பித்தன், தம் கதைகளில் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் ஏழை எளியவர்களையும், சாதாரண மில் கூலிகளையும், குதிரை வண்டிக்காரனையும், எட்டணாக் காசைக் கடன் வாங்கி வருபவனையும், அதையும் அவனிடமிருந்து கடன் வாங்கிச் செல்பவனையும், சமூகத்தால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களையும் படைத்துள்ளார். சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகள், தீண்டாமைப் பிரச்சினைகள் போன்றவற்றையும் தமது கூரிய பார்வைக்கு உட்படுத்தியுள்ளார். “என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி” என்றார் புதுமைப்பித்தன். இது அவரது சொந்த வாழ்க்கையை மட்டும் சம்பந்தப்படுத்திச் சொல்லப்பட்டதன்று. அவருக்கு மனிதனின் மீது நம்பிக்கை இருந்தாலும் அவன் உண்டாக்கிய அர்த்தமற்ற மதிப்பீடுகளில், பொய்யான தர்மங்களில் நம்பிக்கை இல்லை. அவருடைய சமூகப் பார்வை அங்கதமாக இருக்க இதுவே காரணம்.

    3.3.1 தீண்டாமை

    புதிய நந்தன் என்ற கதையில், தீண்டாமைக் கொடுமையை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

    “நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக் கொண்ட பிறகு பறைச்சேரிக்கு என்னமோ கதி மோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான். ஆனால் இப்பொழுது பழைய வேதியரின் வழிவழி வந்த புதிய வேதியரின் ஆள்மூலம் குத்தகை. சேரிக்குப் புறம்பாகவோ அல்லது தீண்டக் கூடாது என்ற கருத்துடனோ, மரியாதையான தூரத்திலே ஒரு முனிசிபல் விளக்கு. அதை ஏற்றுவதைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. சேரிப் பறையர்கள் ஆண்டையின் அடிமைகள். அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத் துரைகளின் அடிமைகள்” என்று காட்டுகின்றார். சேரி வாசிகளை மனிதர்கள் மட்டுமின்றி விளக்குக் கம்பங்களும் கூடத் தீண்டத் தகாதவர்கள் என்று அவர்கள் இடத்தை விட்டு விலகி நிற்கின்றன என்று தமக்கேயுரிய எள்ளல் தொனியில் சோகத்தைக் கலந்து சொல்லியுள்ளார்.

    மேலும், தீண்டாமைப் பிரச்சினையைத் தனி ஒருவனுக்கு, நாசகாரக் கும்பல், துன்பக்கேணி ஆகிய கதைகளிலும் விவரித்துள்ளார். அரிசன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிய சிக்கலைக் கடவுளின் பிரதிநிதி என்ற கதையில் படைத்துள்ளார். இவ்வாறு, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் தீண்டாமைப் பிரச்சினையைத் தம் கதைகளில் பரவலாக எடுத்தாண்டுள்ளார்.

    3.3.2 வறுமை

    வறுமை, புதுமைப்பித்தனின் பல கதைகளில் காணக் கிடக்கும் பிரச்சினை ஆகும். மனிதன் வயிற்றுப்பாட்டுக்கு நடத்தும் போராட்டங்களை அப்படியே படைத்துக் காட்டுவதில் அவர் வல்லவராகத் திகழ்கின்றார்.

    பொன்னகரம் கதையில்,

    “இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால், சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக முனிசிபல் கங்கை - அல்ல. யமுனை தானே கறுப்பாக இருக்கும்? அதுதான். பிறகு ஓர் இரும்புவேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.

    மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள். ஆமாம், வசிப்பதற்குத்தான்.

    தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு. அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?” என்று வறுமையில் வாடுபவர்களின் இருப்பிடத்தை வர்ணிக்கின்றார். மேலும், அவ்விடத்தில் உள்ள ஆரோக்கியக் குறைபாடுகளை, “ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது, பாக்டீரியா விஷக்கிருமிகள். காலரா இத்தியாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப்படுகின்றன! எப்படியாவது உயிர்வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும்” - என்று வறுமையாளர்களின் வாழிடத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

    ‘ஒருநாள் கழிந்தது’ என்ற கதையில், படுக்க வைத்து இருக்கும் கோரைப் பாயினை வர்ணிப்பதன் மூலம் அங்குள்ள ஏழ்மையை நமக்கு உணர்த்தி விடுகிறார் புதுமைப்பித்தன்.

    “கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால், அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து, ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது, அதை விரிப்பது என்றால், முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருந்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலைபெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க, ஒரு துண்டையோ, அல்லது மனைவியின் புடவையையோ, அல்லது குழந்தையின் பாவாடையையோ, எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.” இப்படிப் புதுமைப்பித்தன் தம் கதைகளில் வறுமையின் கோர தாண்டவத்தை எள்ளல் கலந்து காட்டியுள்ளார்.

    3.3.3 பெண்களின் பிரச்சினைகள்

    இந்து சமூகத்தின் பழைய உளுத்துப்போன கட்டுப்பாடுகளின் கைதிகளாகப் பெண்கள் இருந்து வருகிறார்கள். ஆணாதிக்கத்தால் பெண்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உரிய வயதில் திருமணம் ஆகாவிட்டால் பிரச்சினை. திருமணம் ஆகிக் கணவனை இழந்தால் கைம்மை என்ற கொடுமை. கணவன் சரியாகக் குடும்பத்தைப் பேணாவிட்டால் பிரச்சினை. இப்படி, பிரச்சினைகளின் ஒட்டு மொத்த வடிவமாகப் பெண்கள் தவிக்கின்றனர்.

    “ஏழ்மை நிலையிலிருக்கும் பெண்கள் கொஞ்ச காலமாவது கன்னிகையாக இருந்து காலம் தள்ள ஹிந்து சமூகம் இடம் தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலையை விடக் கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோ எனின் அவதூறு, உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள்” என்று கன்னிப் பெண்ணின் நிலையினைச் சங்குத்தேவனின் தர்மம் என்ற கதையில் எடுத்துரைத்துள்ளார்.

    வாடாமல்லிகை என்ற கதையில், ஸரசு என்ற இளம் விதவையின் வாழ்வினை, “நந்தவனத்திலே, மனத்தின் களிப்பில் குலாவக்கூடிய இடத்திலே, தனிமை என்ற விதி ஏற்பட்டால் அதைப் பற்றிப் பரிதவிக்காமல் முடியுமா? இயற்கையின் போக்கைத் தடை செய்து கொண்டு அவள் தியாகம் செய்கிறாள். அவள் பரிசுத்தவதி என்று சமூகம் களித்துக்கொண்டு இருப்பது அதன் ரத்த வெறிதான். அவளுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” என்று விவரிக்கிறார்.

    “ஹிந்துப்பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையோ?” என்ற சீர்திருத்த மனநிலை உடைய இளைஞன் அவளை மறுமணம் செய்து கொள்ள முன் வரும்போது, “கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்...... நான் தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்...... திருமணம் வேண்டாம். பாசம் இருந்தால் போதும்” எனக்கூறி அவனை அதிர வைக்கிறாள். “நீ ஒரு பரத்தை” என அவன் வெடிக்கும்போது, “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்” என்கிறாள். மறுமணத்தை ஏற்க மறுக்கும் சமூகக் கொடுமைக்கு எதிராக ஒரு பெண்ணை இப்படிப் பேசவைத்து அதிர்ச்சியூட்டுகிறார் புதுமைப்பித்தன்.

    வழி என்ற கதையில் “அன்று அவர் இறந்தபின் பதினாறு நாட்களும் இவளைப் பிணம் போல அழும் யந்திரமாகக் கிடத்திச் சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ!” என்று, கணவனை இழந்த பெண்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் அவளை எப்படி உயிரோடு பிணமாக்குகின்றன என்பதைக் காட்டியுள்ளார்.

    கைம்மை என்பது உடன்கட்டை ஏறுவதை விட மிகக் கொடுமையானது என்கிறார். “இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். சதியை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு.......... ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அனுபவிக்க வேண்டியிருக்கிறது! வைதவ்யம் என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்” - என்ற வரிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கைம்மையால் பாதிக்கப்பட்ட ஒருத்தி அக்கொடுமையில் நாளும் சாவதைவிட ஒரேயடியாகச் சாவதே மேல் என்று முடிவு செய்கிறாள். தன்னைத் தானே குத்திக் கொள்கிறாள். பீறிடுகிறது ரத்தம். “நெஞ்சின் பாரம் போகச் சின்ன வாசல்” என்கிறாள். காப்பாற்ற வரும் தன் தந்தையிடம் ”இந்த இரத்தத்தை அந்த பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியை அடைக்காதீர்கள்” என்கிறாள். பெண் படைப்பே துன்பமானது என்று காட்டுவதன் மூலம் மூடப் பழக்கவழக்கங்களைப் போற்றிப் பாதுகாக்கும் சமூகத்தைச் சாடுகிறார் புதுமைப்பித்தன். இவ்வாறு பெண்களின் பிரச்சினைகளைத் தம் கதைகளில் புதுமைப்பித்தன் விரிவாகவே எடுத்தாண்டுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:00:04(இந்திய நேரம்)