தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுமைப்பித்தனின் நடை

  • 3.4 புதுமைப்பித்தனின் நடை

    புதுமைப்பித்தனின் சிறுகதைப் படைப்புத் திறனில் அவருடைய எழுத்து நடை முக்கியப் பங்கு வகிக்கிறது. கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை நடை அது. அவரது ஆளுமையின் பதிவாகவே மொழிநடை அமைந்துள்ளது. அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் ஏதோவொரு வகையில் அவர் ஆளுமையை உணர்த்தத்தான் செய்கிறது. கருத்து முற்றுப் பெறுவதற்கு முன்னரே இன்னொரு கருத்துத் தொடர்ந்து வருகிறது. முழுமை பெறாத வாக்கிய அமைப்பு அவருடைய ஆவேசமான மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது. தன் நடையைப் பற்றிப் புதுமைப்பித்தன், “கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது” என்று விளக்கியுள்ளார்.

    3.4.1 நகைச்சுவை / எள்ளல்

    புதுமைப்பித்தன் கதைகளில் இடம்பெறும் கிண்டல்கள் வெறும் விகடத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. அவை அவரது விமரிசனப் பாணியாக வெளிப்படுகின்றன. அதாவது, புதுமைப்பித்தனின் சமூக விமரிசனங்கள் எள்ளல், பகடி, அங்கதம், நக்கல் என்ற வடிவங்களில் வெளிப்படுகின்றன.

    “பசி ஐயா பசி! பத்தும் பசி வந்திடப் பறந்துபோம் என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே! அங்கு நீர் ஒரு நாள் இருந்தால், உமக்கு அடி வயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம் தெரியும்” என்று பசிக் கொடுமையைச் சுட்டிக் காட்டுகிறார் புதுமைப்பித்தன். மற்றோர் இடத்தில் இன்னும் எள்ளல் தொனியுடன் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றார். இருட்டில் விபசாரம் நடப்பதைச் சுட்டிக் காட்டி, “நாசுக்காகக் கண்ணை மூட வேண்டாம். நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் ஃப்ரேம் கண்ணாடி எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான்”.

    3.4.2 சொல்லாட்சி

    ஆராய்ந்து, தேர்ந்த சொற்களைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தியுள்ளார். சொற்களைப் பயன்படுத்துகின்ற விதத்தில், அவரது அறிவும் ஆற்றலும், மொழி ஆளுமையும் வெளிப்படுகின்றன. வாடாமல்லிகை என்ற கதையில் விதவைப் பெண் சரசுவை அறிமுகப்படுத்தும் போது அவர் எடுத்தாளும் சொற்கள் மிக அழுத்தமாக அந்தப் பாத்திரத்தை மனத்தில் பதிய வைக்கின்றன.

    “அவள் பெயர் ஸரஸு; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்க வேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது, அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டு விட்டதால். அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?

    “ஸரஸு ஓர் உலாவும் கவிதை. இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம்; காட்டிலே ரோஜா யாருமின்றி உதிர்ந்தால் அதைப் பற்றிப் பிரமாதமாக யாரும் கவலைப் படமாட்டார்கள்!.”

    ஸரஸ்வதி கல்விக் கடவுள். வெள்ளை ஆடையில் இருப்பவள். எனவே பெயருக்கேற்ப ஸரஸுவுக்கும் வெள்ளை ஆடையைச் சமூகம் கொடுத்துவிட்டதாகச் சொல்வதில் சாடலும் இருக்கிறது; எள்ளலும் இருக்கிறது.

    3.4.3 மொழி ஆளுமை

    புதுமைப்பித்தன் எடுத்தாளும் சொற்கள் நறுக்கென்று குத்துவது போல் இருக்கும். சாட்டையடி போல் வலிக்கும். அவரது நடை செறிவான நடை. தேவையற்ற சொல் ஒன்று கூட அதில் இடம் பெறாது. சொற்களைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கிக் கையாள்பவர் அவர்.

    அன்று இரவு என்ற கதையில் பிட்டுக்கு மண் சுமக்கும் சொக்கேசன் முதுகில் அரிமர்த்தன பாண்டியன் பொற்பிரம்பால் அடித்த அடி பற்றிப் புதுமைப்பித்தன் சொல்லும் முறையைப் பாருங்கள்:

    “ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகள் மீது விழுந்தது. கருவூரில் அடைபட்ட உயிர்கள் மீது, மண்ணின் மீது, வானத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன் மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலனின் மீது, கருமத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின் மீது அந்த அடி விழுந்தது.

    காலத்தின் மீது விழுந்தது, தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின்மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது! அங்கயற் கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின் மீது அந்த அடி விழுந்தது.” இந்த அடுக்கு, புதுமைப்பித்தனின் மொழி ஆளுமையைக் காட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:00:08(இந்திய நேரம்)