தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேதுப்பிள்ளை உரைநடையில் இலக்கிய நயங்கள்

  • 1.3 சேதுப்பிள்ளை உரைநடையில் இலக்கிய நயங்கள்

    சேதுப்பிள்ளை உரைநடையில் காணப்படும் இலக்கிய நயங்களை விளக்கமாகக் காண்பதற்கு முன்னர், ‘இலக்கிய நயம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா? எனவே அதன் விளக்கத்தைக் காண்போம். ‘உரைநடை’ வடிவம் தமிழுக்கு அறிமுகமாகும் முன்னர் தமிழில் செய்யுள் மட்டுமே இலக்கிய வகைகள் அனைத்திற்கும் வடிவமாக இருந்தது. அப்போது ‘நாவிற்கு ஒத்து வந்தால் பாவிற்கு ஒத்து வரும்’ என்று ஒரு முதுமொழி கூறுவர் ;இன்னும் சிலர், ‘தொடை நயம் சிறந்தால் நடை நயம் சிறக்கும்’ என்றும் உரைப்பர். ‘நாவிற்கு ஒத்து வருதல்’ என்பதற்கு இனிய இசையில் அமைந்திருப்பது என்று பொருள். இது படிப்பதற்குத் தங்குதடையின்றி, அமைதலைக் குறிப்பதாகும். ‘தொடை நயம்’ என்பது, செய்யுளின் உறுப்புகளில் ஒன்றான ‘தொடை’யைச் சுட்டுவதாகும்.

    இந்தத் தொடை என்பது எதுகை, மோனை, இயைபு, முரண் என வருவனவற்றை உள்ளடக்கியதாகும். இவ்வாறு செய்யுளுக்கு உரைக்கப்பட்ட இவ்விரண்டு கூற்றுகளும் ‘உரைநடை’ வடிவத்திற்கும் பொருந்துவனவாகும். எனவே, உயர்ந்த உரைநடை என்பது நாவிற்கு ஒத்து வருவதாகவும், தொடை நயம் மிக்கதாகவும் இருத்தல் வேண்டும். இவ்விரு இலக்கிய நயங்களும் சேதுப்பிள்ளையின் உரைநடையில் பொதிந்திருக்கக் காணலாம்.

    “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்” என்று ‘தமிழ்க் கடல் அலைஓசை பரவும் தமிழர் மாட்சி’ என்னும் தம் நூலில் பேரா.க. அன்பழகனார் குறிப்பிடுகின்றார். இக்கூற்று இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையில் உலவிவரும் இலக்கியக் கூறுகளை வரிசைப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

    அவற்றில் முதலிடம் வகிப்பவை எதுகையும் மோனையும் ஆகும். எனவே இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் எதுகைச் சிறப்பை முதலில் காணலாம்.

    ‘எதுகை’ என்பதைச் செய்யுளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் என்பர். இதற்கு எடுத்துக்காட்டாக,

    கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    (குறள் : 2)

    என்னும் குறளில் வரும்,

    ற்ற நற்றா, என வருவதைக் கூறலாம்.

    இனி, இவ்வாறு அமையும் எதுகை நயத்தைச் சேதுப்பிள்ளையின் உரைநடையில் காண்போம்.

    ‘கடற்கரையிலே’ - என்னும் நூலில் திருவள்ளுவர் தொடங்கிப் பாரதியார் வரை 20 தமிழ்ப் புலவர்தம் பெருமையைச் சேதுப்பிள்ளை புகழ்ந்து உரைத்துள்ளார். அவற்றுள் ‘திருவள்ளுவர்’ பற்றிக் குறிப்பிடும் போது, ‘கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்; கண்ணுக்கடங்காத கடல் ஒரு காட்சி; எண்ணுக்கடங்காத மணல் ஒரு காட்சி;” என வரும் உரைநடைப் பகுதியில் அமைந்த,

    ண்ணுக்கடங்காத - எண்ணுக்கடங்காத

    எனவரும் எதுகையில் இலக்கிய இனிமை பொங்கி நிற்றலைக் காண்கிறோம்.

    ‘உமறுப்புலவர்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,

    "அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. 'கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை அல்லா தந்த நெல்லை - எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் - இதுவன்றோ அறம்?" எனவரும் பத்தியில் அமைந்த,

    நெல்லுடையார் - கல்லுடையார்
    கார்தட்டினால் - மார்தட்டினார்

    எனவரும் எதுகைகள் சேதுப்பிள்ளையின் செந்தமிழ் உரைநடையின் எதுகைச் சிறப்புக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.

    இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையில் அமைந்திருக்கும் மோனை நயத்தை அறியும் முன்னர் ‘மோனை’ என்பதன் பொருளை அறிந்து கொள்வது பொருத்தம் ஆகும். எனவே மாணவர்களே ‘மோனை’ என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

    ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை மோனை என்பர். மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு. இதற்கு,

    ற்க சடறக் ற்பவை ற்றபின் நிற்க அதற்குத் தக

    எனவரும் குறளில் ‘க’ கரம் முதல் அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்தாக வந்திருத்தலை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

    கற்க - நிற்க’ என்பது எதுகை என்பதை முன்னரே கண்டோம். அதனை இங்கும் நினைவில் நிறுத்துவது பொருத்தமாகும்.

    இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையில் மோனை நயம் நிறைந்து சிறக்கிறது.

    ‘தமிழ் விருந்து’ என்னும் நூலில் ‘கலையும் கற்பனையும்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,

    லையிலே ழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; ருவியாய் விழுகின்றது; றாய்ப் பாய்கின்றது”

    எனவரும் தொடர்களில் மோனை நயம் முகிழ்த்திருக்கக் காண்கிறோம்.

    ‘ஊரும்பேரும்’ என்னும் நூலில் ‘நாடும் நகரமும்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் சேதுப்பிள்ளை சென்னை நகரைப் பற்றி எழுதுகிறார்.

    சென்னையில், தியில் அமைந்தது கோயில்; தன்பின்னே எழுந்தது கோட்டை; தைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. னைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகின்றது;

    இங்கு அகரத்தை மோனையாக அமைத்து உரைநடைக்குச் சேதுப்பிள்ளை அழகு சேர்த்துள்ளார்.

    எதுகை மோனைக்கு அடுத்த நிலையில் உரைநடைக்கு அழகும் வனப்பும் வடிவமும் தரவல்லது ‘இயைபு’ ஆகும். செய்யுளில் இறுதி எழுத்தோ அல்லது சீரோ ஒன்றி வர அமைப்பது இயைபு எனப்படும். இது உரைநடைக்கு ஓசை நயம் ஊட்டுகிறது; படிப்பவர் நெஞ்சிலே கருத்தைப் பதிவு செய்வதற்குத் துணையும் செய்கிறது.

    ‘திருவள்ளுவர்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில்,

    ‘கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள் கண்ணுக்கடங்காத கடல் ஒரு காட்ச; எண்ணுக்கடங்காத மணல் ஒரு காட்சி

    இங்குக் ‘காட்சி’ என்னும் இயைபு வந்து நிற்றல் காண்கிறோம்.

    ‘உமறுப்புலவர்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில்,

    பாண்டி நாட்டில் ருவமழை பெய்யாது ஒழிந்தது ஞ்சம் வந்தது; சி நோயும் மிகுந்தது

    இங்கு ‘ஒழிந்தது; வந்தது; மிகுந்தது’ என்பன இயைபு நயத்திற்கு எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன. மேற்காணும் எடுத்துக்காட்டில் ‘பகரம்’ மோனையாக அமைந்திருப்பதையும் கருத்தில் பதித்துக் கொள்வது இன்பம் தரும் அல்லவா? எனவே அதனையும் இணைத்தே சேதுப்பிள்ளையின் உரைநடைச் சிறப்பை உணரத் தொடங்குவோம்.

    தொடை நயங்களுள் ‘முரண்’ என்பதும் ஒன்றாகும். முரண்பட்ட இரு சொற்களை அருகருகே அடுக்கிச் சொல்வதை முரண் என்பர். ‘இரவுபகலாக’ உழைத்தான்; ‘நாடும்காடும் அலைந்தான்’, எனவரும் தொடர்களில் ‘இரவுபகல்; நாடுகாடு’ என்பன முரண்களாக அமைகின்றன. இத்தகைய முரண் நயமும் சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படுகின்றது. இதற்கு எடுத்துக் காட்டுகள் பல இருந்தாலும் ஒன்றை மட்டும் இங்குக் காண்போம்.

    ஊரும் பேரும் என்னும் நூலில் ‘நாடும் நகரமும்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் பின்வரும் பத்தி காணப்படுகின்றது.

    வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன.

    மேலே கண்ட பத்தியில் வாழ்வும் தாழ்வும் என்பது முரணுக்கான எடுத்துக்காட்டாகும். இத்துடன் சீரும் சிறப்பும் என்பதற்கு முரணாக, புகைபடிந்த என்பதும் முரணாக அமைந்துள்ளது.

    உவமைகள் ஒரு கருத்தை எளிமையாக விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுவன: புதிய செய்தியொன்றை நெஞ்சில் நிறுத்துவதற்கும் அவை துணை செய்கின்றன. கவிதைக்கு மட்டுமன்றி உரைநடைக்கும் ‘உவமை நயம்’ இன்றியமையாத ஒன்றாகும். சேதுப்பிள்ளையின் எடுப்பான உரைநடையில் தொடுக்கப்பட்டிருக்கும் உவமைகள் எண்ணிக்கையில் மிகுதி. அவற்றின் அழகை எல்லாம் மாணவர்களே! நீங்கள் அந்தந்த நூல்களில் கண்டு மகிழலாம். இங்கு ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டுக்காகக் காண்போம்.

    ‘தமிழ் விருந்து’ என்னும் நூலில் ‘கலையும் கற்பனையும்’ என்னும் தலைப்பில் வரும் உரைநடையைப் பாருங்கள்.

    ‘மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது, ஆறாய்ப் பாய்கின்றது. ஆற்றுநீர் கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர்பச்சைகளையும் செடி கொடிகளையும் வளர்க்கின்றது. இளம் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும்பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நதியாகும்”. எனவரும் பகுதியில், “ஆற்றை அன்பு நிறைந்த தாயாகவும் பயிர்களைப் பச்சிளம் குழந்தைகளாகவும்” உவமையாக்கி உரைத்திருப்பதைக் காணலாம்.

    உரைநடை ஆசிரியர்களுக்கு மேற்கோள்கள் கைவரப் பெறுவது உரைநடையின் உயிர்ப்புத் தன்மையை உயர்த்திவிடும். சேதுப்பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியங்கள் முதல் பாரதியின் பாடல்கள் வரையில் நன்கு தோய்ந்தவர். திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்னும் இம்முப்பெரும் இலக்கியங்களிலும் மூழ்கி முத்தெடுத்தவர். எனவே அவரது உரைநடையில் இலக்கிய மேற்கோள்கள் எங்கும் காண்பதில் வியப்பில்லை. அத்தகைய மேற்கோள்களில் ஒன்றினைக் காண்போம்.

    ‘தமிழகம் அலையும் கலையும்’ என்னும் நூலில், சென்னை விலங்கக நூற்றாண்டு விழாவில் இரா.பி. சேதுப்பிள்ளை ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது. அதில்,

    ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. முற்காலத்தில் பாலைவனங்களில் பயங்கரமான ஒருவகைப் பாம்பு இருந்தது என்று கவிஞர்கள் கூறுகின்றனர். ‘திட்டிவிடம்’ என்பது அதன் பெயர். அந்தப் பாம்புக்குக் கண்ணிலே நஞ்சுண்டு; அதன் பார்வையிலே அகப்பட்ட உயிர்கள் எல்லாம் நஞ்சுண்டு இறந்துபடும்; மாசிலாக் கற்புடைய மங்கையரை அப்பாம்பிற்கு ஒப்பாகக் கூறுவதுண்டு. சீதைக்குத் தவறிழைத்த இராவணனை நோக்கி,

    திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ, இது விதியின் வண்ணமே

    என்று கும்பகர்ணன் கேட்பதாக அமைகின்ற கம்பராமாயணப் பாடல் அடிகளை இரா.பி. சேதுப்பிள்ளை மேற்கோளாகக் காட்டியிருப்பது மிகுந்த பொருத்தத்துடன் அமைந்திருக்கக் காண்கிறோம். இங்கு சேதுப்பிள்ளையின் உரைநடை மேற்கோள்களை ஆளுவதிலும் சிறப்புற்று விளங்குவதை அறிகிறோம்.

    இனி, தன்மதிப்பீட்டு வினாக்களைக் கண்டபின்பு, தொடர்ந்து சேதுப்பிள்ளையின் உரைநடையின் தனித்தன்மையை பார்ப்போம்.



    1.
    இரா.பி. சேதுப்பிள்ளை பணியாற்றிய இரு பல்கலைக் கழகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
    2.
    இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து நூல்களின் பெயர்களை எழுதுக.
    3.
    இரா.பி. சேதுப்பிள்ளைக்குச் சாகித்ய அக்காதமி விருது பெற்றுத் தந்த நூலின் பெயர் யாது?
    4.
    இரா.பி. சேதுப்பிள்ளையின் எதுகை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
    5.
    இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகைச் சுட்டுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 16:54:27(இந்திய நேரம்)