தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (6)

    பாவாணரின் தொடர் அமைப்பை விளக்குக.
        பாவாணரின் தமிழ்த் தொடர்கள் பெரும்பான்மை நெடிய தொடர்களாக அமைவன. சிலவேளையில் ஒரு தொடரே ஒரு பத்தியாகவும் அமைதல் உண்டு. இவ்வகைத் தொடருக்குப் பாவாணர் உரைநடையில் ஒரு பத்தியை எடுத்துக் காட்டாகக் காணலாம்.

        ‘ஐந்திணைகளும் தோன்றிய பின் முதற்கண் குறிஞ்சியில் வேட்டையாடும் குறவரும், முல்லையில் முந்நிரை வளர்க்கும் இடையரும், மருதத்தில் உழுதொழிலைச் சிறப்பாகச் செய்யும் உழவரும், பாலையில் வழிப்பறித்துக் கொள்ளையடிக்கும் மறவரும், நெய்தலில் மீன்பிடிக்கும் படவரும் ஆகப் பெரும்பாலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருப்பர்.’

        இப்பத்தியில் ஐந்திணை மக்களைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதைப் போன்று இப்பத்தி அமைந்துள்ளது. இத்தொடர் நீண்டதாக இருப்பினும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் பாவாணர் குறவரும், இடையரும், உழவரும், மறவரும், படவரும் என்று ‘உம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

        பாவாணரின் பொழிவுகளில் அமைந்த தொடர்கள் குறுந்தொடர்களாக அமைந்துள்ளன. குறுந்தொடருக்கு எடுத்துக் காட்டு ஒன்றைக் காண்போம்.

        “இந்த நிலையிலே தொல்காப்பியம் ஒரு பழமையான நூல்தான். இருந்தாலும் அது ஆரியம் வந்த பிறகு ஏற்பட்ட நூல். அதிலே வடசொல் சொல்லப் பட்டிருக்கிறது. ஆரியரைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ்நூல் அனைத்தும் அழிந்தன. அழிக்கப்பட்டு விட்டன. அதை அறிய வேண்டும்.”

        இப்பத்தியின் தொடர்கள் படிப்பவரின் உள்ளத்தில் இனிய தமிழின் ஏற்றத்தைப் பதியச் செய்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 12:09:07(இந்திய நேரம்)