தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.3 கவிமணியின் பாடல்களில் பாடுபொருள்

  • கவிமணியின் பாடல்களில் குழந்தைப் பாடல்கள் சிறப்பு வாய்ந்தவை. மேலும், பக்திப் பாடல்களையும், தேசிய உணர்வு மிகுந்த பாடல்களையும், சமுதாயச் சிந்தனை உடைய பாடல்களையும், மொழிப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களையும் பாடியுள்ளார்.

    4.3.1 கவிமணியும் குழந்தையும்

    குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்களில் ஆழமான உணர்ச்சிகள் தேவையில்லை. அறிவு நுட்பமும் தேவையில்லை. உள்ளதை உள்ளவாறு உணர்ச்சியோடும், எதுகை, மோனையோடும் பாடினால் குழந்தைகள் விருப்பத்தோடு பாடுவார்கள். மேலும், மகிழ்ச்சியோடு பாடினால் போதும். குழந்தைகள் மனத்தில் பதிய வைத்துக் கொள்வார்கள். மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.

    ‘முத்தந் தா’ என்ற கவிதையில் குழந்தையைக் கொஞ்சும் பெற்றோர் குழந்தையிடம் முத்தம் கேட்பதை அழகாக எடுத்துரைக்கின்றார். முத்தம் அன்பின் வெளிப்பாடு. தாய் தன் குழந்தைக்கு, தன் அன்பை வெளிப் படுத்தும் ஊடகம். குழந்தையை அள்ளி எடுத்து அரவணைக்கும் போதெல்லாம் தாய் தனது இருப்பை முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றாள். முத்தம் தாய் குழந்தைக்குக் கொடுப்பது மட்டுமில்லை. பல சமயங்களில் குழந்தை தாய்க்கு முத்தம் கொடுப்பதும் உண்டு. குழந்தையே கொடுத்தலன்றித் தாயே கேட்டுப் பெறுவதும் உண்டு.

    கண்ணே ! மணியே ! முத்தந்தா
    கட்டிக் கரும்பே ! முத்தந்தா
    வண்ணக்கிளியே ! முத்தந்தா
    வாசக் கொழுந்தே ! முத்தந்தா

                    (மலரும் மாலையும், 203)

    என்று பாடுகின்றார். இப்பாடல் குழந்தைகளின் மனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றது. மனத்தில் எளிதில் பதிகிறது. மறக்காமல் பாடப்படுகின்றது.

    குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் அவர்களுக்குக் கல்வி கற்பித்தல் வேண்டும். குழந்தைக்குப் பள்ளி என்றால் என்ன? அங்கு என்ன உண்டு என்பதைக் கவிமணி குழந்தைகளுக்கு, குழந்தை மொழியில் உணர்த்துகின்றார்.

    சின்னஞ் சிறு பள்ளியில் - உனக்கொரு
    சிங்காரப் பெஞ்சுமிட்டுத்
    தின்னக் கனியளித்துப் - பாலபாடம்
    செப்புவன் வா கிளியே!

                   (மலரும் மாலையும், 371)

    என்று குழந்தையைப் பள்ளிக்கு அழைக்கின்றார். இப்பாடலைப் பற்றி தே.வேலப்பன் என்பவர் கவிமணியின் பன்முக ஆளுமை எனும் நூலில், “வரிக்கு வரி அன்பு துடிக்கும் இந்த வரிகளை அன்பினுக்காகவே வாழ்பவராகிய பெண்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியரால்தான் பாட முடியும்” என்கிறார்.

    ஒரு குழந்தை இறந்துபடுகிறது. அதன் தாய் துடிக்கின்றாள். அத்தாயின் உணர்ச்சியினையும் கவிமணி படம் பிடித்துக் காட்டுகின்றார்.

    பின்னி முடிச்சிடம்மா !
    பிச்சிப்பூ சூட்டிடம்மா !
    என்னு மொழிகளினி
    எக்காலம் கேட்பனையா
    (ஆசிய ஜோதி, 9.21)

    துக்கத்தில் தோய்ந்து அழுந்திய பெண் உள்ளத்தின் வெளிப்பாடு. இதைப் படிப்பவர்கள் குழந்தையின் கொஞ்சு மொழியையும், தாயின் துயரையும் அறியலாம்.

    4.3.2 கவிமணியும் பக்தியும்

    கவிமணி இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். இறைவனை வழிபடும் முறைகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். மலரும் மாலையும் என்னும் கவிதை நூலில் சரசுவதி துதி, இலக்குமி துதி, தமிழ்நாடு ஒன்றுபட பகவதி வணங்கல், தன்னுடைய நோய் நீங்க முருகனை வணங்குதல் முதலியவற்றை வைத்துள்ளார்.

    கண்ணுக்கினிய கண்டு - மனத்தைக்
    காட்டில் அலையவிட்டு,
    பண்ணிடும் பூசையாலே - தோழி!
    பயனொன்றும் இல்லையடி!

    உள்ளத்தில் உள்ளான் அடி - அதை நீ
    உணர வேண்டும் அடி!
    உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
    உள்ளேயுங் காண்பாய் அடி!

    (மலரும் மாலையும், 43,44)

    இறைவனை வெளியில் தேடுவதை விட்டுவிடு. வெளிக்காட்சிகளில் தேடாதே. உள்ளத்தில் தேடு, அதுவே நிலையானது என்று கூறுகின்றார்.

    4.3.3 கவிமணியும் தேசிய உணர்வும்

    கவிமணி தேசிக விநாயகம் இந்தியநாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் காந்தியத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவர். காந்தியச் சிந்தனையாளர். காந்திய சிந்தனையை உள்ளத்தாலும், உணர்ச்சியாலும் போற்றிப் பாடினார். காந்தியின் சத்தியத்தை விரும்பியவர்; உண்மையைப் பேசவேண்டும் என்ற நெறியை அரிச்சந்திரன் கதை மூலம் அறிந்து கொண்டவர். புத்தர் பெருமான் வாழ்க்கைத் தத்துவத்திலிருந்து அருளோடும், அன்போடும் வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டவர். அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணத்தோடு வாழும் காந்தியை எந்நாளும் சிந்தனை செய்ய வேண்டும் என்று பாடுகின்றார். இதனைக் கூறும் பாடலைக் காணலாமா?

    சத்தியத்தால் மன்அரிச் சந்திரனைத் தண்ணருளால்
    புத்தபெரு மானை யொத்த புண்ணியனை - உத்தமனாம்
    அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு
    சிந்தனைசெய் நெஞ்சே தினம்!

                        (மலரும் மாலையும், 1050)

    இக்கவிதையின் மூலம் கவிமணியின் காந்தியப்பற்று வெளிப்படுகின்றது.

    1921இல் வேல்சு இளவரசர் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். அவர் வருகையின் நோக்கம் அரசியல் சார்ந்தது. ஆனால், கவிமணிக்கோ வேல்சு இளவரசரின் வருகையில் தனிப்பட்ட அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், விருந்தினர் ஒருவரை உபசரிப்பது போலப் பேசுகின்றார்.

    வானோங்கு வளர் இமய மலைகாண லாமே!
    வற்றாத கங்கைநதி வளங்காண லாமே !
    கானோங்கு மரச்சோலைக் கவின்காண லாமே !
    கமலமணித் தடம்நோக்கிக் கண்களிக்க லாமே!

                          (மலரும் மாலையும், 983)

    தேசியத்தின் உணர்வினை ஒவ்வொரு செயலிலும் தான் உணர்ந்தவர். மற்றவர்களுக்கும் உணர்த்தியவர். தொழிலாளர் பிரச்சினைகளைக் கூட அமைதியாகக் கூறியவர். அதனால்தான் பேராசிரியர் சுவாமிநாதன் கவிமணியை ஒரு காந்தியுகக் கவி என்று பாராட்டுகின்றார்.

    4.3.4 கவிமணியும் சமுதாயச் சிந்தனையும்

    சாதி, சமயச் சண்டைகள், தீண்டாமை, மதுவுண்ணல், வஞ்சனை, ஏமாற்று, பொறாமை ஆகியவற்றைக் கடுமையாகச் சாடுகின்றார். சாதி, சமய வேறுபாடுகளை நீக்கி நாட்டுமக்கள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும். இதுவே நாட்டுப்பற்றுக்கு அடிப்படை என்கிறார்.

    சமூகம், தேசியம் என்ற முறையில் கவிமணி பாடியுள்ள பாடல்களுள் அடங்கியுள்ள கருத்துகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    1) சாதி, மத பேதங்களைக் களைதல்.
    2) தீண்டாமையை ஒழித்தல்.
    3) ஆதிதிராவிடர்களின் நல்வாழ்வு சிறக்க நாட்டு மக்கள் செயல்படுதல்.
    4) நாட்டு ஒருமைப்பாட்டின் அடிப்படையில் நின்று இந்தியப் பெரு மக்கள் நாட்டின் உரிமை வாழ்வுக்காகப் போராடுதல்.
    5) கடுமையான உழைப்பினால் அரசியல் விடுதலையோடு பொருளாதார விடுதலையை உருவாக்குதல்.



    தீண்டாதோர் விண்ணப்பம் என்ற தலைப்பில்

    விண்ணப்பம் செய்தோம் - விடையை
    வேண்டிக் கொள்கிறோம்.


    கண்ணப்பன் பூசை கொள்ளும்
    கடவுள் திருக்கோயிலிலே
    நண்ணக் கூடாதோ? நாங்கள்
    நடையில் வரல் ஆகாதோ

    நந்தனுக்குப் பதமளித்த
    நடராசன் கோயிலிலே
    வந்தனைகள் செய்து நாங்கள்
    வழிபடுதல் முறை அலவோ

                  (மலரும் மாலையும், 763,741)

    என்று தன் விண்ணப்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

    வள்ளுவர் என்னும் குடியில் பிறந்தவர் திருவள்ளுவர். அவர் உலகப் பொதுமறையாகிய திருக்குறளைத் தந்திருக்கின்றார். புலையர் குலத்தில் பிறந்தவர் நந்தனார். வேட்டுவக் குடியில் பிறந்த கண்ணப்பன் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். இந்த வரலாறுகளை நினைவுபடுத்தி எச்சாதியாலும், பிறப்பாலும் பெருமை இல்லை. அவன் செய்யும் செயல்களே பெருமையை நிலைநாட்டுகின்றன என்று கூறுகின்றார்.

    நாயனார் வந்த திருக்குலத்தை - உயர்
    நந்தனார் வந்த பெருங்குலத்தை
    தீய குலமெனத் தள்ளுவரேல் - அது
    தெய்வம் பொறுக்குஞ் செயலாமோ?
                         (மலரும் மாலையும், 730)


    காப்பாற்றி நம்மையாளும்
    கடவுளரும் மக்களுள்ளே
    பார்ப்பார்கள் பறையரென்றே
    பகுப்பேதும் வைத்ததுண்டோ?

                        (மலரும் மாலையும்,746)

    சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள், சாதி வேறுபாடுகள் இருத்தல் கூடாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்ற நிலையில் ஒற்றுமையுடன் இருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் அன்பு மட்டுமே அடிப்படையாக இருத்தல் வேண்டும். பூசல்களும் சண்டைகளும் இருத்தல் கூடாது. அப்படிச் சண்டையிடும் மனிதர்களை நோக்கி

    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு - சாதி
    கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு
    பாரதத்தாய் பெற்ற மக்களென்று - நிதம்
    பல்லவி பாடிப் பயனெதுவோ

                    (மலரும் மாலையும்,725)

    என்று கேட்கின்றார்.

    4.3.5 கவிமணியின் மொழிப்பற்று

    கவிமணி மழலையர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மொழியுணர்வால் கவர்ந்தவர். கவிமணியிடம் மொழி உணர்வு, உணர்வோடு உணர்வாகக் கலந்திருந்தது. தன் கருத்தை மொழியால் மட்டும் வெளியிடவில்லை. மொழி உணர்வு கலந்து வெளிப்படுத்தியவர்.

    கவிமணியின் மொழிப்பற்றினைப் பின்வரும் வண்ணங்களில் பிரித்தறியலாம்.

    1) தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த புலவரையும் நன்றியுடன்
      நினைத்துப் போற்றுதல்.
    2) தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிய தவறான கருத்துகளைக் களைந்து உண்மைகளை நிலைநாட்டச் சான்றுகளைத் தேடிச் சேகரித்தல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:12:53(இந்திய நேரம்)