தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முடியரசன்

 • 2.1 முடியரசன்


  தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த பெரியகுளம் இவர் பிறந்த ஊர். சுப்பராயலு - சீதாலட்சுமி இவருடைய பெற்றோர். 7-10-1920-இல் பிறந்தார்.

  • பெயர் மாற்றம்

  துரைராசு என்ற தம் பெயரைத் தமிழில் அழகாய் மொழி பெயர்த்து முடியரசன் என்று மாற்றிக்கொண்டார்.


  • கல்வியும் பணியும்

  தமிழைத் தெளிவுடன் கற்றுப் புலவர் பட்டம் பெற்றார். காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றினார். சிறந்த கவிதைகளை இயற்றினார். பல கவி அரங்கங்களில் பங்கு பெற்றுத் தமிழ்நாடு முழுதும் புகழ் பரவப் பெற்றார். 3-12-1998-இல் மறைந்தார். ‘சொல்லிய வண்ணம் செயல் அரியது’ என்றார் வள்ளுவர். தம் கவிதைகளில் சொல்லிய கொள்கை வழியில் இருந்து சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய மிகச்சில தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் முடியரசன்.
   

  • படைப்புகள்

  இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து முடியரசன் கவிதைகள் என்னும் நூலாக, 1954-இல் வெளியிட்டவர் தமிழறிஞர் தமிழண்ணல். இந்நூல் மாநில அரசின் பரிசுபெற்றது. இதில் உள்ள பல கவிதைப் பகுதிகள் சாகித்ய அகாதமியால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

  காவியப் பாவை (1960), கவியரங்கில் முடியரசன் (1964) ஆகிய தொகுதிகளும்; பூங்கொடி (1964), வீரகாவியம் (1966) ஆகிய காவியங்களும் இவர் படைத்துள்ளார். மாநில அரசின் ‘கவியரசு’ விருது பெற்றவர். இவரது பல கவிதைகள் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:21:59(இந்திய நேரம்)