தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காதலும் அன்பும்

 • 2.3 காதலும் அன்பும்

  காதல், அன்பு இரண்டும் ஒன்றுதான். ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் பால்உணர்ச்சி சார்ந்த அன்பைக் குறிப்பிடும் சொல்லாகக் ‘காதல்’ என்பதை வரையறை செய்து கொண்டோம். அதனால் ‘அன்பு’ பொதுவாக எல்லா உயிர்க்கும் இடையில் தோன்றும் உள்ளப் பற்றைக் குறிக்கிறது. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான். நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. கவிஞன் இதயம் இந்த அழகின் சொர்க்க பூமி.

  2.3.1 காதலும் கவிதையும்

  காதலும் கவிதையும் ஒன்றுக்கு மற்றொன்று ஆதாரமாக அமைந்தவை. காதலால் கவிதை வாழ்கிறது. கவிதையால் காதல் வாழ்கிறது. முடியரசனின் நெஞ்சம் காதலில் தோய்ந்தது. அவரது முதல் காதலியே கவிதைப் பெண்தானாம்; கவிதைப்பெண் என்ற கவிதை சொல்கிறது.

  உணவுக்கும் உடைக்கும் கவலை இல்லாத இளம் பருவத்தில் கடலில், நிலவில், மலரில், வயலில், கதிரில் தணியாத காதலுடன் கவிதைப்பெண் இவரோடு கலந்து இருந்தாளாம். தென்றலாய்ப் பாடுவாளாம். மயிலாக ஆடுவாளாம். புதுமாலைப் பொழுதாக விதவிதமான நிறத்தில் ஆடைகட்டி விளையாடுவாளாம். உயிராகி, உணர்வாகி உள்ளத்தில் கலந்து வாழ்ந்தாளாம்.

  தாலி கட்டிய உரிமையுடன் மனைவி ஒருத்தி வந்த பின்னர், இல்லறக் கடமைகளில் இவர் மூழ்கிப்போனார். வயிறு நிறைப்பதற்காகவே வாழ்வு என்று ஆகிப்போனது. வாழ்வில் சுவை இல்லை.

  ஒருநாள் சலிப்புடன் கடற்கரையில் நின்றார். அவர்முன் கவிதைப் பெண் வந்து நின்றாள். அவளிடம், தன்னை மறத்தல் சரியோ? முறையோ? என்று கேட்டார். அவள் “உன்னை மறக்க மாட்டேன், உண்மை சொல்வேன்” என்று பேசுகிறாள்:

  உன்மனைவி பணிவிடையில் ; உனக்குப் பாவை
  உவந்துஅளிக்கும் இன்பம்அதில் ; மதலை நல்கும்
  இன்அமுத மழலைதனில், விழியில், மெய்யில்,
  இற்கிழத்தி புலந்துஇருக்கும் விழியில், பேச்சில்
  என்¬னஇனிக் காண்புஅரிது ; குடல்வ ளர்க்க
  இரந்துஉண்போர் பொற்கரத்தில், உழைப்பால் ஓங்கும்
  வன்புயத்தில், விதவையர்கண் சிந்தும் நீரில்
  வாழ்கின்றேன் வாஅங்கே என்று சென்றாள்.

  (உவந்து = மகிழ்ந்து; மதலை நல்கும் = குழந்தை தரும்; மழலை = குழந்தை மொழி; மெய் = உடம்பு; இற்கிழத்தி = மனைவி; புலந்து = ஊடல் (பொய்க்கோபம்) கொண்டு; காண்புஅரிது = காணஇயலாது; பொற்கரம் = தங்கக் கை; வன்புயம் = உறுதியான தோள்; விதவையர் = கணவனை இழந்த கைம்பெண்கள்)

  இக்கவிதையை மேலோட்டமாகப் பார்த்தால் இயற்கை அழகுகளில், குடும்ப வாழ்வின் இனிமைகளில் கவிதை இல்லையோ எனத் தோன்றும். கவிதை அடுத்த நிலைக்குப் போயிருக்கிறது; வறுமையால் துன்புறுவோர், உழைப்போர், சமூக ஒடுக்குமுறைகளால் துன்புறுவோர் ஆகியோரிடத்தில் நிற்கிறது. அதாவது கவிதைகளில் அவர்கள் உள்ளடக்கம் ஆகிறார்கள் என்பதையே முடியரசன் உணர்த்துகிறார். காதலைத் தாண்டி அன்பின் பெருவிரிவுக்குச் செல்கிறது கவிதை.

  2.3.2 புதுமைப் பெண்ணின் காதல்

  இவர் படைக்கும் புதுமைப்பெண் தன் காதலின் உறுதியைக் கொண்டு வீட்டார், ஊரார் தடைகளை வெல்கிறாள். தான் விரும்பிய காதலனைக் கைப்பிடிக்கிறாள், "நாம் பெண்கள். வீட்டார், ஊரார் பேச்சுக்கு இடம் வைக்காமல் அடங்கித்தானே போக வேண்டும்?" என்று கேட்கும் தன் தோழியிடம் பேசுகிறாள் ‘புதுமைப்பெண்’ :

  நாட்டார்கள் காதல் நலம்அறியார் புல்லுரைக்கும்
  வீட்டார்கள் சொல்கின்ற வெற்றுஉரைக்கும் நான்
  அஞ்சேன்
  உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டுக்
  கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப்
  பெண்என்றா எண்ணினை நீ..... என்னுளத்தைத்
  தொட்டார்க்கு உரியளாய்த் தோள்தோய்ந்து வாழல்
  அன்றிக்
  கட்டாயக் கல்யாணம் கண்டிப்பாய் நான்வேண்டேன்
  அஞ்சிஅஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில்
  மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக்
  காட்டுகிறேன் !

  (புல்உரை = சிறுமைப்பேச்சு; விழைந்த = விரும்பிய; அரிவையர்கள் = பெண்கள்)

  தோழியிடம் சொல்லியபடியே தன் காதலனைக் கைப்பிடித்தாள் என்கிறார். காதலின் வெற்றியைப் பெருமிதத்துடன் பாராட்டுகிறார்.

  2.3.3 பிள்ளைக்கனி அமுது

  பாரதி குழந்தையைப் பிள்ளைக் கனியமுது என்றார். அவர் பேரனாகத் தம்மைச் சொல்லும் முடியரசன் பிள்ளைச் செல்வத்தின் பெருமையை அன்புத் தமிழில் பேசிப் பேசிக் கனிகிறார்.

  குழந்தை இன்பம் என்னும் கவிதையில் மனைவியுடன் பேசுகிறார்.

  தென்றல் தொடும் இன்பம்; குழல்யாழின் இசை இன்பம்; இயற்கைப் பொருள் எல்லாம் அழகின் வடிவில் தரும் காட்சி இன்பம் இவை எவையுமே குழந்தை தரும் இன்பத்துக்கு இணை ஆகாது என்கிறார். மனைவியிடமே, அவள் தரும் காதல் இன்பம்கூட மழலை தரும் இன்பத்துக்கு இணை இல்லை என்கிறார். அவள் ஊடல் கொள்கிறாள் என்று முடிகிறது கவிதை.

  நண்பர்களே ! இங்கு ஒரு தாய் தன் இன்பத்தைக் குழந்தை இன்பத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறாள். ஊடல் (சிறுகோபம்) கொள்கிறாள். தந்தை முடியரசனோ குழந்தை இன்பமே உயர்ந்தது என்கிறார். தாயைவிடத் தம் குழந்தைமேல் அன்பு கொள்ளும் தந்தையாக இங்கு முடியரசன் உயர்ந்து நிற்கிறார் அல்லவா?

  தோற்றுவிட்டேன் என்னும் கவிதையைத் தமிழ்மொழியில் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று என்றே சொல்லலாம். தம் குழந்தையிடம் பேசுவதுபோல் இக்கவிதையை எழுதியுள்ளார்.

  போர்க்களத்தில் எதிர்நிற்க எவரும் காணேன்
  பூரித்தேன், வீரத்தால் செருக்கும் கொண்டேன்
  தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்
  தளிர்அடியால் நீமிதித்தாய் தோற்று விட்டேன்

  - என்று தொடங்கித் தம் குழந்தையிடம் தாம்பெற்ற தோல்விகளைப் பட்டியல் இடுகிறார்.

  (பூரித்தேன் = பெருமை கொண்டேன்; தார்க்கழுத்து = மாலையணிந்த கழுத்து; வன்புயம் = ஆற்றல் மிக்க தோள்; தளிர்அடி = தளிர் போன்ற காலடி)

  குழந்தையின் மழலையின் முன் தோற்கிறார். கருணையில்லாத கல்நெஞ்சம், குழந்தையின் பார்வையால் உருகித் தோற்கிறது.

  பெரியவர்கள் சொல் கேளாத, பணிவு அற்ற முரட்டுத்தனம் குழந்தை இடும் கட்டளைக்குப் பணிந்து தோற்கிறது. தன் மனைவியின் கண்களுக்கு ஒப்பான அழகு உலகில் எதுவுமில்லை என்று எண்ணியிருந்த கணவனின் இறுமாப்பு, தன் குழந்தையின் கவலை படியாத அழகு மலரான கருவிழியின் முன் தோற்றுவிட்டது.

  இறுதியில் -

  “இலக்கிய, இலக்கண, அகராதிகள் எல்லாம் கற்றிருக்கிறேன். இருந்தும், பேசமுயன்று உன் நா உந்தும் போது வெளியே குதிக்காமல் இதழ் ஓரத்தில் சுழலுமே அந்த மழலை மொழி? அதன் பொருள் உணர முடியாமல் உன்னிடம் தோற்றுவிட்டேன்" என்று பாடுகிறார்.

  ‘தோற்றுவிட்டேன்’ என்று பாடியே ஒரு மிகச்சிறந்த கவிதையைப் படைப்பதில் வென்றுவிட்டார் முடியரசன். நண்பர்களே ! நீங்கள் சொல்லுங்கள் இங்கே வென்றவர் கவிஞர் முடியரசனா? அன்பான தந்தை முடியரசனா?

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:26:57(இந்திய நேரம்)