தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிதைகள்

  • 2.2 கவிதைகள்

    ஒவ்வொரு கவிஞனும் தான் வாழும் காலத்தின் குரலை எழுப்பும் பாட்டுக் குயிலாக இருக்கின்றான். முடியரசன் காலத் தமிழ்நாட்டில் பிறமொழி மோகம் முற்றி இருந்தது. தமிழில் வேற்றுமொழிக் கலப்பு மிகுதியாய் இருந்தது. தமிழ்ப் பண்பாட்டை அயலவர் பண்பாடு அழித்துவிடும் நிலை இருந்தது. இதனால் சமூகத்தில் சாதிப் பிரிவுகள், போலிச் சடங்குகள் வளர்ந்து பெரும் புதராக அடர்ந்தன. தன்னலம் மிகுந்த செல்வர்களால் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டனர். உரிமை இன்றி ஒடுக்கப்பட்டனர். உண்மையும், உழைப்பும், காதலும், நேர்மையும் மதிப்பு இழந்து நின்றன.

    இவ்வகைக் கொடுமைகள் ஒவ்வொன்றும் கவிஞனின் மென்மையான உள்ளத்தை வன்மையாகத் தாக்கும். அவனது விரிந்த நெஞ்சக் கடலின் அலைகளாய்க் கவிதைகள் கொந்தளித்துப் பொங்கும். இழிவை அகற்றி அழிவைத் தடுக்க மக்கள் கூட்டத்தைக் கூவி அழைக்கும் போர்க்குரலாக அவை ஒலிக்கும். பாரதி, பாரதிதாசனின் கவிதைகளில் இந்தப் போக்கைக் காண்கிறோம் அல்லவா?

    முடியரசனின் கவிதைகளும் அதே மரபில் பிறந்து வந்தவைதாம்.

    தாய்மொழியின் நலத்தைப் பாதுகாப்பது தாயைப் பாதுகாப்பது போன்ற கடமை. மொழியின் உணர்வை இழந்தால் வாழ்வின் உணர்வு சாகும். நாட்டில் உரிமைகள் ஒவ்வொன்றாய்ப் பறிபோகும். இத்தகைய உணர்ச்சியும் கருத்துகளுமே மிகுதியும் முடியரசன் கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

    2.2.1 தாய்மொழிப் பற்று

    தமிழ்நாட்டில் தமிழர் தாய்மொழியில் கல்வி கற்றால் இழிவு என்று நினைத்தனர். கல்வி கற்றவர் என்று காட்டிக் கொள்வதற்கு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதும், உயர்ந்த சாதி என்று காட்டிக் கொள்வதற்கு சமஸ்கிருதம் கலந்த தமிழ் பேசுவதும் இவர்களின் வழக்கம் ஆயிற்று. தூய தாய்மொழியில் பேசினாலே இழுக்கு என்று கருதும் அறியாமை இன்று வரை மிகுதியாய் உள்ளது.

    நண்பர்களே ! இன்று அக்கரையில் வாழுகின்ற தமிழர்களாகிய நீங்கள் பேசும், எழுதும் தூய தமிழைக் கண்டு பெருமைப்படுகிறோம். இங்கே தாய்த் தமிழ்நாட்டின் ஊர்ப் புறங்களில் கூடத் தமிழும் ஆங்கிலமும் கலந்து ‘தமிங்கில நடை’யில் பேசித் திரியும் எங்கள் நிலை கண்டு வெட்கப் படுகிறோம். தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி, இதழ்கள் போன்ற தொடர்பு ஊடகங்களிலும் நாள்தோறும் தமிழ்க்கொலை நிகழ்கிறது. இதைக் கண்டு நீங்கள் எவ்வளவு வேதனை கொள்கிறீர்கள் என உணர முடிகிறது. நாம் இன்று படும் இந்த வேதனையை முடியரசன் அன்றே பட்டிருக்கிறார். இந்த இழிநிலை வரும் என்று முன்பே உணர்ந்து எச்சரிக்கை செய்திருக்கிறார்.

    • பிறமொழிக் கலப்பு

    தமிழில் பிறமொழிக் கலப்பின் மிகுதி கண்டு கொதித்திருக்கிறார். மொழியுணர்ச்சி என்ற கவிதையைப் பாருங்கள்.

    ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்
    அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற
    தீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
    தென்படுமோ மொழியுணர்ச்சி ? ஆட்சி மன்றில்
    பாங்குடன்வீற்று இருக்கும்மொழி தமிழே என்று
    பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும்.
    ஈங்குஇதற்காய் என்செய்யப் போகின் றீர்நீர்?
    இளைஞர்இனி விழித்துஎழுந்தால் விடிவு தோன்றும்
    .

    ...........

    மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை
    மாய்க்கின்றோம் ; ‘மொழி’இருக்கப் ‘பாஷை’ என்போம்
    பெறுமகிழ்ச்சி ‘சந்தோஷம்’ ஆகும் ; வேட்டி
    ‘வேஷ்டி’எனப் பெயர்மாறும் ; பதற்றம் என்னோம்
    மறுமொழிபோல் ‘பதஷ்டம்’எனக் குதிப்போம் ;தண்ணீர்
    ‘ஜலம்’ஆகும் ; மறைக்காடு ‘வேதா ரண்யப்’
    பிறமொழியாய் மாறிவிடும் ! மொழியுணர்ச்சி
    பிழைத்திருக்க இடம்உண்டோ? புதைத்து விட்டோம்.

    தமிழில் பிறமொழியைக் கலப்பது மட்டுமன்றித் தமிழ்ச் சொற்களையே (வேட்டி = வேஷ்டி) வேற்று மொழிச் சொல்போல உச்சரிக்கும் இழிநிலையை என்ன சொல்வது!

    • கோயிலும் தமிழும்

    தமிழனின் இயல்பான நடவடிக்கைகளான திருமணம், சாவுச்சடங்கு, இறைவழிபாடு ஆகிய எல்லாவற்றிலும் பிறமொழி நுழைவு கண்டு கொதிக்கிறார் முடியரசன்.

    மணவினையில் தமிழ்உண்டா? பயின்றார் தம்முள்
    வாய்ப்பேச்சில் தமிழ்உண்டா? மாண்ட பின்னர்ப்
    பிணவினையில் தமிழ்உண்டா? ஆவணத்தில்
    பிழையோடு தமிழ்உண்டு. கோயில் சென்றால்
    கணகணஎன்று ஒலியுண்டு ; தமிழைக் கேட்கக்
    கடவுளரும் கூசிடுவர் ; அந்தோ ! அந்தோ !
    அணுஅளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில்
    ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வது எங்கே?

    (நாணுகின்ற = வெட்கப்படுகிற; மனப்போக்கர் = எண்ணம் கொண்டவர்; தென்படுமோ = காணப்படுமோ; பாங்குடன் = முறையோடு; வீற்றிருக்கும் = அமர்ந்து இருக்கும்; ஈங்குஅதற்காய் = இங்கே அதற்காக; மணவினை = திருமணச் சடங்கு; பிணவினை = சாவுச்சடங்கு; ஆவணத்தில் = பதிவு ஏடுகளில்; கூசிடுவர் = தயக்கம் கொள்வார்கள்; ஆத்திகர் = கடவுள் பக்தர்கள்)

    தாய்மொழியில் வழிபாடு செய்யாவிட்டால் கடவுள் பக்தி கூட அழிந்து போகும் என்று எச்சரிக்கை செய்கிறார். தமிழ்காக்கப் போர் செய்ய அழைக்கிறார். அதற்குச் சிங்கம் போன்ற வீரர் வேண்டும்; உணர்வும், மானமும் வேண்டும்; மொழி உரிமைப் போரில் உயிர் கொடுத்த வீரர்களான தாலமுத்து, நடராசன் கொண்டிருந்த துணிவு வேண்டும் என்கிறார்.

    அவளும் நானும என்னும் கவிதையை, கணவன் - மனைவி உரையாடுவதுபோல் அமைத்துள்ளார்.

    “மணநாளில் தமிழ்ஒலியே கேட்கவில்லை. கோயில் உள்ளேயும் தமிழ் ஒலி இல்லை. பிள்ளை பெற்றோம், கிறுக்கரைப்போல் பிறமொழியில் பெயர் வைத்தோம்” என்று மனைவி இடித்து உரைக்கிறாள். கணவர் உணர்ந்து திருந்துகிறார். வஞ்சினம் (சபதம்) உரைக்கிறார்.

    தஞ்சம்என வந்தவரின் சூழ்ச்சி யாலே
    தமிழ்வழங்காக் கோயில்உள்ளே தலையைக் காட்டேன்
    எஞ்சிஉள்ள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன்
    இப்படியே என்வீட்டைத் தமிழ்வீடு ஆக்க
    வஞ்சினமும் கொள்கின்றேன்.........

    மனைவி நகைத்து நல்வழிப் படுத்துகிறாள். “கோயில் உங்கள் சொத்து. நுழையாமல் இருந்தால் தமிழ் பிழைத்துவிடாது. உரிமையை வென்று அடைய வேண்டும். வீண்பேச்சு வேண்டாம். வீரம் இல்லையா?” என்று கேட்கிறாள். அவர் இதை, “தோழர்களே உங்களிடம் சொல்கின்றேன். என்ன செய்யலாம்?” என்று கேட்டுக் கவிதையை முடிக்கிறார்.

    • மரபைக் காத்தல்

    இந்த எல்லையில்லாத மொழிப்பற்றுத்தான், யாப்பு இலக்கண மரபை மீறிப் ‘புதுக்கவிதை’ எழுத முயன்றவர்கள் மீது வெறுப்பாகப் பாய்கிறது. அவர்களை நெருப்பாகச் சுடுகிறார், சொல்லால் !

    வயலுக்கு வரப்புஒன்றும் வேண்டாம் என்றால்,
    வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்
    இயல்மொழிக்கு இலக்கணமும் வேண்டாம் ! .....
    மொழியைக் காக்கும்
    வரம்புஇலையேல் எம்மொழியும் அழிந்து போகும்

    2.2.2 உழைப்பின் மேன்மை

    கருநாடக மாநிலத்தின் மைசூர் பழம்பெருமை வாய்ந்த அந்நாள் தலைநகரம். அங்கு பிருந்தாவனம் என்னும் வண்ண மலர்ப்பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் சென்று கண்டு வருவர். முடியரசனும் சென்று அதன் அழகை வியந்து படைத்தோன் வாழ்க என்னும் கவிதை படைத்தார். இந்தக் கவிதை வாழ்வியல் பற்றிய இவரது கொள்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. பூங்காவின் அழகைக் கண்டு வியப்பில் கவிஞர் வாழ்த்துகிறார் :

    படைத்தோன் வாழி ! படைத்தோன் வாழி !
    என்றேன். நண்பன் “இறைவனோ” என்றான் ;
    “அன்றே” என்றேன் ; “அரசனோ” என்றான்.
    அறியாது உரைத்தனை ஆருயிர் நண்பா !
    உறுதி குலையா உழைப்பினை நல்கிக்
    குருதியை நீராய்க் கொட்டிய ஏழை
    பாரில் இப் பூங்கா படைத்துத் தந்தனன்
    ...................
    இதமுடன் உழைக்கும்அவ் ஏழையை வாழ்த்தினேன்
    வாழிய அவன்குலம் வாழிய நன்றே !

    (அன்றே = இல்லையே; குலையா = தளராத; நல்கி = கொடுத்து, தந்து; பாரில் = உலகில்; இதமுடன் = பொறுமையுடன்)

    தொழிலாளியை அரசனை விட, தெய்வத்தை விட உயர்ந்தவனாய் மதிக்கிறார் முடியரசன்.

    • உழைப்போர் துயரம்

    தம் நூலில் தொழில் உலகம் என்று தனிப் பகுதியே ஒதுக்கி, உழைக்கும் மக்கள் உயர்வைப் பாடும் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கிறான். அவன் உடலில் மூச்சுடன் உயிர்வாழ வழியில்லை. பெருஞ்செல்வர்க்கு இன்பம் தரும் மங்கையர் உடல் முழுக்கத் தங்கநகை அணிந்து உலவுகின்றனர். ஆனால் சுரங்கத்தில் இறங்கித் தங்கத்தைத் தோண்டி எடுத்தவன் அங்கத்தில் அணிய ஒன்றும் இல்லை. ஆடை நெய்கிறான்; அவனுக்கு நல்ல ஆடையில்லை. உழைத்து முதலாளியின் நெல் களஞ்சியத்தை நிரப்புகிறான்; அந்த உழவனுக்கு உணவு இல்லை. முடியரசன் காட்டும் முரண்கள் இவை.

    • தீண்டாமை

    மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத தொழில்களைச் செய்வோரைத் தீண்டத் தகாதவர் என ஒதுக்கி வைக்கும் சமூகக் கொடுமை முடியரசனை வருத்துகிறது.

    ஆடையிலே அழுக்குஅகற்றித் தூய்மை ஆக்கி
    அழகுசெய்து தருகின்றோன் ; பொலிவு குன்றாத்
    தாடையிலே வளரும்அதை வழித்து எறிந்து
    தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன் ;
    கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால்
    கொடுமைஒன்றும் நேராமல் நடப்பதற்குச்
    சோடைஇன்றிச் செருப்புஅளிப்போன் இவர்கள் எல்லாம்
    தொடக்கூடாச் சாதிஎன்றால் தொலைக வையம் !

    (பொலிவுகுன்றா = அழகுகுறையாத; தாடையிலே வளரும் அது = தாடி; சோடை இன்றி = தரம் குறையாமல்; தொடக்கூடாச் சாதி = தீண்டத்தகாத சாதி; வையம் = உலகம்)

    வறுமைக்கும், சாதியைச் சொல்லித் தீண்டாமையை வளர்க்கும் இழிந்த நிலைக்கும் தொடர்பு உள்ளது. இதை எடுத்துக் காட்டுகிறார். சாதிக் கொடுமை இருக்கின்ற இந்த உலகம் அழிந்து ஒழிந்து போகட்டும் என்று கவிச்சாபம் இடுகிறார்.

    • போர்க்குணம்

    ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை மீட்கப் போர்க்குணம் கொள்ள வேண்டும் என்கிறது முடியரசன் கவிதை. குதிரை நினைத்தால் என்னும் கவிதையில் இந்தப் புரட்சிக் குரலைக் கேட்கலாம்.

    குதிரைமீது ஏறிவருகிறான் ஒருவன். விரைவாக, இன்னும் விரைவாகச் செல்ல ஆசை, குதிரையைக் கைச்சவுக்கால் அடிக்கிறான். செருப்பின் ஆணியால் குத்துகிறான். மீண்டும் மீண்டும் அடித்து வதைக்கிறான். குதிரை பொறுமையை இழக்கிறது. துள்ளிக் குதிக்கிறது. அவனை உதறிக் கீழே தள்ளுகிறது. கல்லில் அடிபட்டுத் தலைசிதறிச் சாகின்றான்.

    முடியரசனுக்கு இந்தக் குதிரை பாட்டாளிக் கூட்டத்தின் - உழைக்கும் மக்களின் குறியீடாகத் தெரிகிறது. உணர்ச்சிக் கவிதை படைக்கிறார் :

    மனம்நொந்து பொறுத்திருப்பர். அளவு மீறின்
    காட்டாரோ தம்வலிமை? இங்கு வாழக்
    கருதாரோ தொழிலாளர்? உரிமை கேட்க
    மாட்டாரோ? அவரெல்லாம் உருத்து எழுந்தால்
    மனம்புரவிச் செயல்தன்னைக் காட்டி டாதோ?

    (அளவுமீறின் = அளவைத் தாண்டினால்; காட்டாரோ = காட்ட மாட்டார்களோ; உருத்து எழுந்தால் = சினத்துடன் திரண்டால்; புரவி = குதிரை)

    நண்பர்களே! கொடுமை கண்டு பொங்கும் போர்க்குணம் கொண்டவர் முடியரசன். இதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? அன்பிலும் இனிமையிலும் நெகிழ்ந்து இளகும் ஈர நெஞ்சமும் கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் காட்டுகின்றன. இனி வரும் பாடப் பகுதியில் அதைப்பற்றி அறியலாம்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1)
    முடியரசன் படைத்த காவியங்கள் யாவை?
    2)
    ‘புதுக்கவிதை’ எழுத வந்தவர்கள் மேல் முடியரசன் காட்டியது விருப்பா? வெறுப்பா?
    3)
    “படைத்தோன் வாழி” என்று முடியரசன் வாழ்த்துவது யாரை?
    4)
    ஒடுக்கப்படும் மக்களைச் சுட்டும் குறியீடாகக் கவிஞர் எந்த விலங்கைப் பாடுகிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:06:09(இந்திய நேரம்)