தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இயற்கையின் அழகு

 • 2.4 இயற்கையின் அழகு

  இயற்கையின் அழகை எல்லாம் மேலும் அழகாகப் படைக்கும் முயற்சிதான் கவிஞனின் கலைப்பணி. அவன் சொல்லில் ஓவியம் தீட்டுகிறான். சிலை வடிக்கிறான். உணர்வை ஏற்றி அவற்றை இயங்கவும் வைக்கிறான். வாடி உதிர்ந்து அழிந்து போகும் இயற்கையின் அழகுகளை வாடாமல் காக்கிறான். மொழி என்னும் அமுதத்தை ஊட்டிச் சாகாமல் வாழ வைக்கிறான்.

  இந்த அழகுக் கலையில் முடியரசனும் வல்லவராக விளங்குகிறார்.

  2.4.1 கற்பனை வளம்

  ஆறு கடலை நோக்கி விரைந்து ஓடுகிறது. ஏன் இத்தனை வேகம்?

  ஓடும் நீரில் தாமரை போன்ற நீர்த் தாவரங்கள் முளைப்பது இல்லை. இந்த உண்மையைக் கொண்டு கற்பனை ஒன்று பிறக்கிறது.

  - தன்பால் செந்தா
  மரைஇன்றி முகம்காட்ட முடியா ஆறு
  மாள்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார் !

  என்று பாடுகிறார். முகத்துக்கு உவமையாகும் மலர் செந்தாமரை, ஆற்றுக்கு இந்த முகம் இல்லை. அதனால் மலர்ந்த முகம்காட்ட முடியவில்லை. அவமானமாக இருக்கிறது இது. அதனால் கடலில் குதித்துச் செத்துவிட அவசரமாக ஓடுகிறதாம். ‘தற்குறிப்பு ஏற்ற அணி’ என்று இதைச் சொல்வார்கள்.

  2.4.2 உவமைகள், உருவகங்கள்

  உலகத்தின் படைப்பை எல்லாம் ஒன்றாய்க் காணும் உயர்ந்த உள்ளம் கவிதை உள்ளம். அது ஒவ்வொரு பொருளிலும் ஒப்புமையை, ஒற்றுமையைத் தேடுகிறது. அந்த அழகின் தேடலில் பிறப்பவைதாம் உவமையும், உருவகமும். இந்த உயர்ந்த உள்ளப் பாங்கில் பிறப்பதால்தான், கவிஞனின் சிறப்பை உவமை, உருவகங்கள் கொண்டு மதிப்பீடு செய்கிறது உலகம்.

  • உவமை நலம்

  அழகின் சிரிப்பு என்னும் கவிதையில் கோழிக் குஞ்சுகளைக் “கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சி தரும் குஞ்சுகள்” என்கிறார்.

  சுதமதி இவர் படைத்த குறுங்காவியம். இதில், சோலைக்குள் பூப்பறிக்கச் செல்கிறாள் சுதமதி. ஒரு முல்லைக் கொடி தன் அரும்பால் சிரிக்கிறது. சுதமதி புன்னகை செய்கிறாள். அது முல்லையின் அழகை வெல்கிறது. இதைப் புதுமையாகக் காட்சிப் படுத்துகிறார்.

  ....அவள் இடை
  நிகர்த்தோம் நாம்என நினைத்தஓர் பூங்கொடி
  முகிழ்த்தநல் அரும்பால் நகைத்துச் செருக்கத்
  தருக்கினை நோக்கிய தையல் முறுவலால்
  தருக்கினை அடக்கித் தலைகொய் தனளே

  (இடை நிகர்த்தோம் = இடைக்கு உவமை ஆவோம்; முகிழ்த்த = அரும்பிய; செருக்கு, தருக்கு = தற்பெருமை; தையல் = பெண்; முறுவல் = புன்சிரிப்பு; தலைகொய்தனள் = அரும்பைக் கிள்ளிப் பறித்தாள்)

  கொடியை இடைக்கும், முல்லை அரும்பைப் பற்களுக்கும் உவமை காட்டுவது பழமையான கவிதை மரபு. சொல்லாட்சியின் புதுமையால் இந்தப் பழைய உவமைகளை மெருகேற்றி இருக்கிறார் முடியரசன்.

  நிலவைப் பாடாத கவிஞர் உண்டா? பிறை நிலவை முடியரசன் புதுப்புது உவமைகளால் பாடுகிறார். ஏன் வரவில்லை? என்ற காதல் கவிதையில் :

  விண்இடத்து எறிந்த வெள்ளைப்
  பூசணிக் கீற்றோ என்ன
  எண்ணிடப் பிறக்கும் நல்ல
  இளம்பிறை நிலவே..........

  என்றும்,

  கண்கவர் சிறுவர் சேர்ந்து
  கடுமழைப் புனலில் ஓடப்
  பண்ணிய கப்பல் போலப்
  படர்பிறை நிலவே........

  என்றும்,

  அகத்தியின் குவிபூத் தோற்றம்
  அன்னதோர் பிறைநிலாவே

  என்றும்

  மூன்று புதிய உவமைகளை அடுக்குகிறார். அகத்தி மரத்தின் பெரிய பூ மொட்டு வெள்ளையாய்ப் பிறைநிலவுபோல் இருக்கும்.

  (புனல் = நீர்; குவி பூ = குவிந்த பூ, மொட்டு)

  • உருவக அழகு

  உவமையின் செறிவான வடிவமே உருவகம். இருபொருள்களின் இடையே உள்ள ஒப்புமையை விளக்காமல், இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்று ஒற்றுமைப்படுத்திக் கூறினால் அது உருவகம் ஆகிறது. முடியரசன் அழகிய உருவகங்களைப் படைத்திருக்கிறார்.

  இயற்கைத்தாய் என்னும் கவிதையில் தம்மைக் குழந்தையாகவும் இயற்கையைத் தாயாகவும் உருவகம் செய்து பாடுகிறார். இக்கவிதை முழுதுமே உருவகங்களால் நிறைந்து உள்ளது.

  அழுக்காறாம் எறும்பு ஊரும், பொய்மை என்னும்
  அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும்,
  இழுக்குஏறா நல்அறிவுப் பசிதோன்றும்
  இத்தனையும் தாங்க ஏலாது
  அழுதிடுவேன் ; விரைந்தோடி என்பால்வந்து
  அன்புஎன்னும் முலைசுரந்த
  பழுதுஇல்லா முப்பாலை ஊட்டிடுவாள்
  பார்புரக்கும் தாய்மை வாழ்க !

  (அழுக்காறு = பொறாமை; இழுக்கு ஏறா = குற்றம்இல்லாத; ஏலாது = முடியாமல்; பழுது இல்லா = குறைஇல்லாத; பார்புரக்கும் = உலகத்தைக் காக்கும்)

  மனிதனை வந்து அடைந்து வருத்தம் உண்டாக்கும் பொறாமை, பொய்மை, அறிவுப்பசி இவை மூன்றும், குழந்தையைத் தொல்லை செய்யும் எறும்பு, ஈ, வயிற்றுப்பசி இவையாக உருவகம் செய்யப்படுகின்றன. இவற்றின் தொல்லையால் மனிதன் வருந்துவது குழந்தையின் அழுகையாகக் குறிப்பிடப்படுகிறது. முப்பால் என்னும் திருக்குறள் இந்தத் தொல்லைகளைப் போக்கும். அதையே இயற்கைத்தாய் ஊட்டும் பாலாக உருவகம் செய்கிறார் முடியரசன். மிக அழகான தொடர் உருவகமாக இது விளங்குகிறது.

  இதில் ‘அறுகால்’ என்பது ‘ஆறுகால்களை உடைய’ என்றும், ‘கால்கள் இல்லாத’ என்றும் இருபொருள் தரும். பொய் என்பது கால் இல்லாதது தானே? அது அறுகால் ஈயாகச் சொல்லப்படுகிறது. இங்கு இருபொருள் (சிலேடை) நயத்தையும் சுவைக்கிறோம்.

  இயற்கையின் எழுச்சி என்னும் கவிதையில் இதே இயற்கை அரசியாக உருவகப் படுத்தப் பெறுகிறது. தாயாக இருக்கும்போது உலகை எல்லாம் வாழ வைக்கிறாள் இயற்கைப் பெண். அவளே அரசியாக உலா வரும்போது அழிவுக்குத் தான் வழி அமைக்கிறாள். புயல் மழையை அவளது உலாவாக உருவகம் செய்கிறார் முடியரசன்.

  விளக்கு, தந்திக் கம்பங்கள் வளைந்து தலை வணங்குகின்றன. கம்பிகள் - தோரணங்கள். வீடுகள், மரங்கள் விழுந்து வணங்குகின்றன. குடிசைகளை அரசி காணக் கூடாதென்று பெருமரங்கள் விழுந்து வயிற்றில் மறைத்துக் கொள்கின்றன. காற்றில் பறந்த கூரை ஓடுகள் தூவிய மலர்களாய் உதிர்கின்றன. பறவைகள் வாய்மூடி நிற்கின்றன. பறக்கும் குடிசைகள் வாண வேடிக்கை காட்டுகின்றன. கதிரவனும், நிலவும் ஒளிந்து நின்று பார்க்கின்றன. மூன்று நாட்கள் ஒரே ஆரவாரம். அவள் ஊர்வலம் வந்து சென்ற பின்னும் அவலக் குரல்கள். இழப்பின் துயர ஓலங்கள்!

  இக்கவிதை வெறும் இயற்கை வருணனை அன்று. தனிமனிதனின் அதிகாரத்தையும், தனி உடைமை அரசு அமைப்பையும், அவற்றால் சிதையும் மனித வாழ்க்கையையும் இங்கு இயற்கைக் கொடுமையாக உருவகம் செய்கிறார் முடியரசன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:29:20(இந்திய நேரம்)