தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

லிமரிக் என்னும் கவிதை வடிவம்

 • 6.1 லிமரிக் என்னும் கவிதை வடிவம்


  லிமரிக் ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை.

  நாம் தமிழில் ‘இயைபுத் தொடை’ என்று சொல்வதை ஆங்கிலத்தில் ‘ரைம்’ என்கின்றனர்.

  செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
  தேன் வந்து பாயுது காதினிலே
  (செந்தமிழ்நாடு, பாரதியார் கவிதைகள்)


  இங்குப் போதினிலே - காதினிலே எனவருவது இயைபுத் தொடை (ரைம்).

  • தன்மை

  லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய ‘ரைம்’களும்; மூன்றாவது நான்காவது வரிகளில் தம்முள் ஒத்த ஓசை உடைய ‘ரைம்’களும் வரும். ஐந்தாவது வரியாக மிகுதியும் முதல் வரியே (திரும்பவும்) வந்திருக்கும்.


  • பாடப்படும் இடங்கள்

  மக்கள் கூடிக் களிக்கும் திருவிழாக்களிலும், விருந்துகளிலும் ‘லிமரிக்’ பாடப்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும், பகடி (கிண்டல்) செய்து பேசிக் கொள்வதும் மக்கள் இயல்பு.

  மகிழ்வதும், மற்றவர்களை மகிழ்விப்பதும் மட்டுமே அங்கு நோக்கமாக இருக்கும். அதனால் நகைச்சுவை உணர்வுதான் முதல் இடத்தில் நிற்கும். பால்உணர்வும், எள்ளல் (கிண்டல்) தன்மையும் கொண்ட ‘லிமரிக்’, நகைச்சுவைக்காக விருந்து, விழா நிகழ்ச்சிகளில் தவறாது இடம் பெற்றது. ஐரோப்பாவில் பலநாடுகளில் பரவி வளர்ந்தது.

  • முதல் தொகுப்பு

  எட்வர்டு லியர் இவ்வகை ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து 1846-இல் புக் ஆப் நான்சென்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். பின்னர் மாரிஸ் பிஷப் என்ற அமெரிக்கக் கவிஞர் லிமரிக்கின் அமைப்பில் சில மாறுதல்களைச் செய்தார். எதிர்பாராத முடிவையும் திடீர்த் திருப்பத்தையும் கொண்டதாகக் கவிதையின் இறுதி வரியை மாற்றி அமைத்தார். இதனால் சுவை கூடியது.

  • பாடுபொருள்

  வாழ்வின் எந்தப் பொருளையும், உள்ளப் பாங்கையும் அக்கவிதைகள் பாடின. புனிதமானவை என்று சமூகம் உயர்த்தி வைத்தவற்றைக் கேலி செய்தன. சொல்லும் தகுதி அற்றவை என்று ஒதுக்கி வைத்தவற்றை உரத்த குரலில் பாடின. சமூகத்தில் உள்ள ஆபாசங்கள், பழங்கதைகள், மனிதரின் போலித் தனங்கள் அனைத்தையும் சுவையோடு எள்ளி நகையாடின.

  மகாகவிஞர்கள் என்று போற்றப்படும் பலரும் ‘லிமரிக்’ எழுதியுள்ளனர்.

  கவர்ச்சி மிகுந்த குறுங்கவிதையாக இருப்பதால் இது உலகம் எங்கும் வரவேற்புப் பெற்றது. மிக விரைவில் பரவியது.

  6.1.1 தமிழில் குறும்பா

  இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பில் இந்து வாலிபர் சங்கம் 30-01-1965-இல் தமிழ்விழா நடத்தியது. அதில் நடந்த கவியரங்கத்தில் தான் மஹாகவி என்ற கவிஞர் இயற்றிய ‘குறும்பா’ முதன்முதலில் படிக்கப்பட்டது. அதன்பின் ‘இளம்பிறை’ என்ற திங்கள் இதழில் சில பாக்கள் வெளிவந்தன. இலங்கையின் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான எம்.ஏ. ரஹ்மான், தம் ‘அரசு வெளியீடு’ சார்பாக, மஹாகவியின் நூறு குறும்பாக்களைத் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். 17-2-1966-இல் மஹாகவியின் குறும்பா என்ற பெயரில் அந்த நூல் வெளிவந்தது.

  நூலின் முகப்புப் பக்கத்தில் ‘தமிழில் முதன்முதலில் லிமரிக்ஸ்’ என்ற குறிப்பு உள்ளது. “சிரிப்புக்கும், சிந்தனைக்கும், கருத்துக்கும், கற்பனைக்கும் பெருவிருந்தாய் 100 குறும்பாக்கள்” என்ற அறிவிப்பும் உள்ளது.

  இதிலிருந்து சிரிக்க வைப்பது, சிந்தனையைத் தூண்டுவது, சீர்திருத்தத்தை வேண்டுவது, சுவைப்புத் திறனை (ரசனை) வளர்ப்பது இவையே குறும்பாவின் நோக்கம் என உணரலாம்.

  • குறும்பா

  குறும்பா என்னும் பெயர் குறுமை + பா = சின்னஞ்சிறு கவிதை என்று அதன் சிறிய வடிவத்தைக் குறிக்கிறது. மேலும், ‘குறும்பு ஆகப் படைக்கப்பட்டது' என்று அதன் உள்ளடக்கத்தையும் நயமாகச் சுட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:24:55(இந்திய நேரம்)