தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மஹாகவி

  • 6.2 மஹாகவி

    இலங்கை யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்னும் ஊரில் 9.1.1927-இல் பிறந்தார். சிறந்த நாதஸ்வர இசைக்கலைஞர் துரைசாமி இவரது தந்தை. இவர் தம் மகனுக்கு இட்ட பெயர் து. உருத்திரமூர்த்தி.

    • புனை பெயர்கள்

    தம் பதினைந்தாம் வயதிலிருந்தே பண்டிதன், புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி. மகாலட்சுமி, மஹாகவி ஆகிய பல புனை பெயர்களில் கவிதைகள் பல எழுதினார். இறுதியில் மஹாகவி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

    • பணியும் படைப்பும்

    இலங்கை அரசுத் துறையில் பல பதவிகளில் இருந்தார். கவிதை, நாடகம் என்று இவரது ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன.

    • பாடுபொருள்

    மஹாகவி ஈழத்தின் நவீனத் தமிழ்க் கவிதை முன்னோடிகளுள் முதன்மையானவராக மதிக்கப் படுகிறார்.

    • ஆழமான மனிதாபிமானம்
    • வாழ்வின் மீது உறுதியான நம்பிக்கை, வாழ வேண்டும் என்ற முனைப்பு
    • சமூக ஏற்றத் தாழ்வுகள் மீதும், போலி ஆசாரங்கள் மீதும் எதிர்ப்பு

    - இவையே மஹாகவியின் இலக்கியப் படைப்புகள் அனைத்துக்கும் உள்ளடக்கப் பொருளாக உள்ளன. எளிய மக்களின் அன்றாட வாழ்வையே தம் கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர் அவர்.

    பழைய மரபான யாப்பு வடிவங்களைப் பேச்சு æசைப் பாங்கில் எளிமைப் படுத்தினார். இதனால் யாப்புக் கட்டுப்பாட்டை உடைக்காமலே கவிதைக்குப் புதுமை என்னும் நவீனத் தன்மை வந்துவிடும் என்று செயல்படுத்திக் காட்டினார்.

    ‘நவீன உள்ளடக்கங்களை வெளியிட யாப்பு உதவாது’ என்ற புதுக்கவிதையாளரின் கொள்கை ஆதாரம் அற்றது எனக் காட்டியவர் இவர் என்று கூறுகிறார் - மற்றொரு சிறந்த இலக்கியவாதியான எம்.ஏ. நுஃமான்.

    நண்பர்களே ! மஹாகவிக்குத் தம் வாழ்வியல் கொள்கைகளுக்கும், இலக்கியப் படைப்புக் கொள்கைகளுக்கும் ஒத்த பொருத்தமான வடிவமாக லிமரிக் தோன்றியிருக்கிறது. அதனால்தான் நூறு குறும்பாக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று உணர்கிறீர்கள் அல்லவா?

    • மறைவு

    20-06-1971-இல் இதய நோயினால் இறந்தார்.

    6.2.1 குறும்பாக்கள்

    மஹாகவி ‘லிமரிக்’குக்குத் தமிழில் என்ன விதமான வடிவம் தந்திருக்கிறார் என்று அறிவோமா? இந்தக் குறும்பாவைப் பாருங்கள்.


    (1) உத்தேசம் வயதுபதி னேழாம்
    உடல்இளைக்க ஆடல்பயின் றாளாம்

    (2) எத்தேசத்து எவ்அரங்கும்
    ஏறாளாம் ! ஆசிரியர்

    (3) ஒத்தாசை யால்பயிற்சி பாழாம்

    இப்பாடலில் 1,2,3 என எண் இடப்பட்டுள்ளவை அடிகள்.

    உத்தேசம், எத்தேச, ஒத்தாசை - எதுகைகள்

    உத்தேசம் - உடல்
    எத்தேசம் - ஏறாள் - மோனைகள்

    னேழாம், நாளாம், பாழாம் - இயைபுகள்

    ஆங்கில லிமரிக் போலவே தமிழ்க் குறும்பாவையும் ஐந்து வரிகளில்தான் அமைத்திருக்கிறார். ஆனால் வரிகள் ஐந்து என்றாலும் அவை மூன்று அடிகளில் அமைந்து உள்ளன.

    மூன்று அடிகளிலும் முதல் சீர்கள் (சொற்கள்) ஒரே எதுகை கொண்டவை (இரண்டாம் எழுத்து ஒத்ததாக வருவது எதுகை).

    முதல் அடியை இரு வரிகளாகவும், இரண்டாம் அடியை இரு வரிகளாகவும் மடக்கி எழுதுகிறார். முதல் இரு வரிகளிலும், அடுத்த இருவரிகளிலும் முதல் சீர்களில் மோனை வருகிறது (முதல் எழுத்து ஒத்ததாக வருவது மோனை).

    முதல் வரி, இரண்டாம் வரி, ஐந்தாம் வரி இவற்றின் முடிவில் (இறுதியில்) வரும் சீர்களில் ‘ரைம்’ என்னும் இயைபு வருகிறது. ஆங்கில லிமரிக்கில் மூன்றாம் வரியிலும் நான்காம் வரியிலும் ஒரு ‘ரைம்’ வரும். அதை மஹாகவி தவிர்த்து (விட்டு)விட்டார்.

    6.2.2 கவிதைக்கலை

    மஹாகவி குறும்பாக்களைப் படைப்பதில் கையாண்டுள்ள கலை நுணுக்கங்களை இனிக் காணலாம்.

    எந்தப் பொருளிலும் மெய்ப்பொருள் காணும் நுண்ணிய நோக்குக் கொண்டவை கவிஞனின் கண்கள். கண்டதைத் தான் அடைந்த உணர்ச்சியுடன் சேர்த்து நமக்குக் காட்டுபவை அவனது சொற்கள்.

    சமூகத்தின் இழிந்த நிலைகளைக் காணும்போது பொறுப்புள்ள கவிஞன் அதிர்ச்சி அடைகிறான். அவ்வுணர்ச்சியை ஒன்று வருத்தம் அல்லது சினம் பொங்கும் சொற்களால் வடிப்பான். அல்லது எள்ளி நகையாடி, இதயத்தைச் சிந்தனைக்கும் செயலுக்கும் தூண்டுவான். நையாண்டி அல்லது பகடி செய்து குத்திக்காட்டும் முறை கவிதை உத்திகளில் ஒன்றாகும். இது தமிழில் அங்கதம் எனப்படும். ஆங்கிலத்தில் ‘சட்டயர்’(Satire). குத்தலான இந்த வகைக் கவிப்பேச்சுக்கு ஒத்த பொருத்தமான வடிவமாகக் குறும்பா விளங்குகிறது. மஹாகவியின் குறும்பாவில் இப்பேச்சைக் கேட்கலாம்.

    • கற்பித்தலில் கயமை

    நண்பர்களே ! மேலே வடிவ விளக்கத்திற்காகத் தரப்பட்டுள்ள குறும்பாவை மீண்டும் பாருங்கள். கவிதையின் பொருள் விளங்குகிறதா?

    ஒரு பெண், வயது பதினேழு இருக்கலாம். (உத்தேசம் = இருக்கலாம்) உடல் மெலிவதற்காக நாட்டியக் கலையைப் பயின்றாள். ஆனால், இப்போது எந்தத் தேசத்திலும் எந்த மேடையிலும் அரங்கு ஏற முடியாது. ஏன்? ஆசிரியரின் ‘உதவி’யால் அவளது பயிற்சி பாழாகிவிட்டதுதான் காரணம் !

    பயிற்சி முறையாக நடந்து முடிந்திருந்தால், இவளுக்கு உடல் இளைத்து மெலிந்திருக்க வேண்டும். நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் இவள் எந்த மேடையிலும் ஏறக் கூட முடியாதவள் ஆகிவிட்டாள். ஏன்? உடல் மெலியாமல், வயிறு பெருத்து விட்டது. அவள் கரு உற்றுவிட்டாள். அதனால் அதுவரை கற்றுக் கொண்ட பயிற்சியும் வீண் ஆகிவிட்டது. யார் காரணம்?

    நாட்டிய ஆசிரியர்தான் ! ஓர் ஆசிரியருக்கு வேண்டிய ஒழுக்கமும், நேர்மையும், கண்ணியமும் அவரிடம் இல்லை. பருவத்தின் வாசலில் நிற்கும் அந்தப் பெண்ணின் பேதைமை (அறியாமை)யைத் தன் பால்உணர்வு வெறிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். முறையில்லாமல் அவளிடம் ஆசையைத் தூண்டிவிட்டுத் தன் தீய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இவர் ஆசிரியருக்கு உரிய ஒழுக்கத்துடன் அந்த மாணவியிடம் நடந்து கொள்வார் ; ஆடல் கலையைக் கற்றுக் கொடுப்பார் என்று நம்பி அவளது பெற்றோர் அவரிடம் ஒப்படைத்தனர். அவளும் அப்படி நம்பியிருப்பாள். ஆனால் ஆசிரியர் பாழாக்கிவிட்டார். களங்கப்படுத்தி விட்டார். எவற்றை எல்லாம்? ஒழுக்கத்தை ! நம்பிக்கையை ! பண்பாட்டை ! தமிழரின் அரிய கலைச் செல்வமான நாட்டியத்தை! ஒரு பெண்ணின் பெருஞ்செல்வமான கற்பை !

    குறும்பாக்களில் சொற்களைக் கூர்மையாகக் கையாளும் திறனே சிறப்பு இடம் பெறுகிறது. உவமை, உருவகம் போன்ற இலக்கியக் கலைத்திறன்களுக்கு அவற்றில் இடம் இல்லை. காரணம் நேரடியான குத்தலான கேலிப்பேச்சும் அவற்றின் மிகச் சிறிய வடிவமுமே ஆகும்.

    மேலே கண்ட குறும்பாவில் மஹாகவியின் சொல் ஆட்சித் திறனைக் காண்போமா?

    இந்தக் குறும்பாவில் பணக்கார வர்க்கத்தின் செல்வச் செருக்கால் நிகழும் சமூக அவலத்தைத்தான் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.

    • சொல்லாட்சியின் சிறப்பு

    ‘உடல்இளைக்க’ என்ற சொல்லாட்சி இதை உணர்த்துகிறது. எப்படி? இந்தப் பெண் எளிய நடுத்தர வகுப்புப் பெண்ணாக இருந்தால் வேலை செய்வாள். உடல் தானாகவே மெலிந்து இளைக்கும். செல்வச் சீமான் வீட்டுப் பெண் இவள். உணவில் நல்ல ஊட்டம் வேறு ! மெலிவதற்கான உடல் பயிற்சியாகத்தான் ஆடல் கலை பயில்கிறாள். கலை ஆர்வத்தால் அல்ல. இதைப் ‘பயிற்சி’ என்ற சொல்லாட்சி எள்ளல் சுவையோடு சுட்டிக் காட்டுகிறது. ‘எத்தேசத்திலும் எந்த அரங்கிலும் ஏறமாட்டாள்’ என்று சொல்கிறார். ஏன்? இடையும் வயிறும் இளைக்கவில்லை. மாறாக எதிர்விளைவு நிகழ்ந்து விட்டது; பெருத்துவிட்டன. நகைச்சுவை பொங்குகிறது இந்தச் சொற்றொடர் தரும் பொருள் நயத்தில். ஆனால் சிரித்து முடிக்கும்போது நம் கண்களில் நீர் அரும்பி விடுகிறது. கிண்டலாகப் பேசியே ஒரு துயர உணர்வைக் கிண்டிவிடுகிறார் மஹாகவி.

    பெண்மை பாழாகிவிட்டது. இதனால் இந்தப் பெண் இனி நாட்டிய அரங்க மேடையில் மட்டும் அல்ல, எந்தப் பொது அரங்கிலும் பெருமிதத்துடன் ஏற முடியாது. பொது இடங்களில் நடனமாட மட்டும் அல்ல, நடமாடவே இயலாது. இவளுக்குத் திருமணம் எளிதில் நடக்குமா? தடைப்படும். மணமேடையிலும் ஏறமுடியாது. “எத்தேசத்து எவ்அரங்கும் ஏறாளாம்” - என்னும் சொல்லாட்சி, எழுப்பும் எண்ணங்கள் ஏராளம். மாறுபட்ட உணர்வுகளும் ஏராளம்.

    ஆர்வத்தைத் தூண்டிச் சிந்தனையைக் கிளறிவிட்டு முத்தாய்ப்பான இறுதி வரியில் புதிரை விடுவிக்கிறார் :

    “ஆசிரியர் ஒத்தாசையால் பயிற்சி பாழாம்” என்று.

    ஒத்தாசை என்றால் உதவி என்று பொருள். அது இங்கு, கிண்டலாக உதவி என்ற நேர்ப் பொருள் தராமல், ‘துரோகம்’ என்ற எதிர்மறைப் பொருள் தருகிறது. முட்டாளை ‘மகாமேதாவி’ என்று திட்டுகிறோமே அதுபோல ! ஆசையைத் தூண்டிவி்ட்டுத் தன் ‘ஆசை’யைத் தீர்த்துக்கொண்டு விட்டார், என்றும் இந்தச் சொல் குறிப்பாக உணர்த்துகிறது. (ஒத்தாசை = ஒத்த + ஆசை).

    ‘பயிற்சி பாழ்’ என்ற சொல்லாட்சியிலும் - பொருள் நலமும் உணர்ச்சித் தெறிப்பும் சிறப்பாக உள்ளன. இத்தனை நாள் கற்ற ஆடல் பயிற்சியும் பாழாய்ப் போனது என்று மட்டும் பொருள் தரவில்லை. ஆடற் பயிற்சி - நாட்டியக் கலையே, அதன் உயர்வே கெட்டுவிட்டது என்றும் பொருள் தருகிறது. பயிற்சி நின்று விட்டது என்றும் சுட்டுகிறது. இனி எந்தப் பெற்றோரும் ஆசிரியரை நம்பித் தம் பெண்ணுக்குக் கற்பிக்கத் துணிவார்களா? எனவே, அந்த வீட்டில் மட்டுமல்ல ஊரெல்லாம் ஆடற் பயிற்சி பாழ் ஆகிவிட்டது. ‘பயிற்சி பாழாம்’ என்னும் தொடர் ‘பெண் கல்வியே பாழ்’ என்று மேலும் பொருள் விரிக்கிறது. சமூகத்தில் இன்னும் ஓர் அவல நிலைக்கு விதை ஊன்றிவிட்டது இந்த நிகழ்ச்சி.

    இவ்வாறு இந்தக் குறும்பா கலையின் பெயரால் ஏற்பட்டுவிட்ட கறையைச் சுட்டிக் காட்டுகிறது. இது நம் மனத்தை உறுத்துகிறது.

    நண்பர்களே ! “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். அதைப்போல் நூறு குறும்பாக்களில் ஒன்றை மட்டுமே மஹாகவியின் அங்கதக் கவிதைக் கலைத் திறனுக்கும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைக்கும் சான்றாகக் கண்டோம்.

    • இலஞ்சக் கொள்ளை

    சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை நையாண்டி செய்து திருந்த, திருத்த உணர்வைத் தூண்டுவது உயர்ந்த கவிஞனின் சமூகப்பணி. கைக்கூலி, கையூட்டு, இலஞ்சம், மாமூல் என்ற பல பெயர்களில் எங்கும் நிறைந்து கிடக்கிறது ஒரு சமூகப் பெருநோய். இது எந்த அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது, என்பதை ஒரு குறும்பாவில் காட்டுகிறார் மஹாகவி :

    முத்துஎடுக்க மூழ்குகிறான் சீலன்
    முன்னாலே வந்துநின்றான் காலன்
    சத்தம் இன்றி வந்தவனின்
    கைத்தலத்தில் பத்துமுத்தைப்
    பொத்திவைத்தான்,போனான்முச் சூலன் ! (பக் : 53)

    (காலன், முச்சூலன் = எமன்; கைத்தலத்தில் = உள்ளங்கையில்; பொத்திவைத்தான் = மறைவாகத் திணித்தான்)

    தர்மத்தில் தவறாதவன் என்பதால்தான் எமனுக்கு எமதர்மன் என்று பெயர். அவனையே விட்டுவைக்க வில்லை இலஞ்சம். பத்து முத்துக்களை இலஞ்சமாக (கையூட்டு) வாங்கிக் கொண்டு, ஆயுள் முடிந்த சீலனைத் தப்ப விடுகிறானாம் காலன்.

    சீலம் என்றால் ஒழுக்கம், நேர்மை என்று பொருள். ‘சீலன்’ என்ற இவன் பெயர் எதிர்மறையாய் நகைச்சுவையைத் தூண்டுகிறது.

    எமனையே வளைத்துவிடும் இலஞ்சத்தின் வலிமை, நம்மைச் சிரிக்க வைக்கிறது. இந்த நாடும் உலகமும் என்ன ஆகும் என்று கவலையுடன் சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

    • ஏமாறும் பெண்மை

    பெண்களை வெறும் அழகுப் பொருளாக மதித்து, அவர்கள் மனத்திலும் அதே எண்ணத்தை விதைத்து வளர்க்கின்றனர். அவர்களைப் போகப் பொருளாகவும் விளம்பரங்களுக்கான போதைப் பொருளாகவும் ஆக்கி விடுகின்றனர். ஆண் ஆதிக்கத்தின் இந்தச் சூழ்ச்சியை அறியாத பெண்கள் பலர் உலகெங்கிலும் இந்த மாய வலைக்குள் வீழ்கின்றனர். தங்கள் அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் பறிகொடுக்கின்றனர். வெறும் அழகுப் பதுமைகளாக நடமாடுகின்றனர். அழகிப் போட்டிகள் போன்றவை இந்த வகை மனப்போக்கைப் பெண்களிடம் உண்டாக்கும் சீரழிவுகள்தாம்.

    புதிய தமிழில் கவிஞர்கள் பெண்கள் உயர்வை நாடுவதும், விடுதலையை வலியுறுத்துவதும் வேதநாயகம்பிள்ளை காலத்திலிருந்து இன்றுவரை நிகழ்கிறது. பாரதியும் அவன் பரம்பரையும் இந்தக் கொள்கையில் உயர்ந்து நின்றதை அறிவீர்கள் அல்லவா?

    வருணனைகளில் மயங்கி வழி தவறிப் போன ஒரு பெண்ணை மஹாகவியும் காட்டுகிறார்.

    இடையை மிக மெல்லியது என்று சொல்வதும், ‘இல்லை’ என்றே பாடுவதும் பழைய கவிமரபு.

    அல்லையில் வாழும் முல்லை என்பவள் கவிஞர்கள் ‘இல்லை’ என்று கூறும் தன் இடையை ‘இல்லை’ என்று சொல்லாமல் எல்லார்க்கும் தந்தாளாம். அதனால் கரு உற்றாள். இப்போது இடைபெருப்பதால் அதை ‘இல்லை’ என்று சொல்பவர் யாரும் ‘இல்லை’யாம். (பக்கம் : 38) இல்லை என்னும் சொல்லை இப்படி நயமாக ஆளுகிறார். பெண்ணுக்கு உயர்வு அழகில் மட்டும் ‘இல்லை’ என்று உணர்த்துகிறார்.

    • இன்னும் எவ்வளவோ !

    நண்பர்களே ! மஹாகவியின் குறும்பாக்கள் பற்றி மேலும் அதிகமாக விரித்துரைக்க இப்பாடத்தில் இடம் இல்லை. நூலைத் தேடி வாங்கிப் படித்துச் சுவையுங்கள்.

    கலையின் பெயரால் நடக்கும் ஆபாசம், கள்ளக் கடத்தல் நாடகம், பிறமொழி மோகம், பண்டிதரின் போலியான பழம்பெருமை, மனிதரின் கஞ்சத் தனம், இலஞ்சத்தனம், ஏமாற்றுக் காதல், வரதட்சணைக் கொடுமை என்று சமூக வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள சீரழிவுகளைக் கேலி செய்து பாடியிருக்கிறார். கடவுள்கள், புராணப் பாத்திரங்கள் கூட இவரது எள்ளல் அம்புகளுக்குத் தப்பவில்லை. பாலுணர்ச்சி சார்ந்த செய்திகளைப் பண்பாடு கெட்டுவிடாமல் நளினமாய்க் குறிப்புச் சொற்களால் உணர்த்துகிறார்.

    “கவிதை சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்தில் பாயப் பிறப்பது” என்பது மஹாகவியின் கருத்து. இதை அவரது ஒவ்வொரு குறும்பாவும் உறுதிப்படுத்துகிறது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1)
    குறும்பா வடிவத்தின் ஆங்கில மூலம் எது?
    2)
    மஹாகவியின் குறும்பா - நூலில் எத்தனை பாக்கள் உள்ளன?
    3)
    மஹாகவி காட்டும் பெண் எதற்காக ஆடல் கலை பயில்கிறாள்?
    4)
    மஹாகவியின் குறும்பாக்களில் பாடப்பட்டுள்ள சமூகச் சிக்கல்களில் இரண்டைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:42:22(இந்திய நேரம்)