தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மீரா

 • 6.3 மீரா

  தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளிகளாகவும் திகழ்ந்தவர்கள் மிகச் சிலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் மீரா. நடையில் எளிமை, கருத்தில் வலிமை, தமிழ்க் கவிதை மரபில் பழுத்த புலமை, சொல்லுக்குச் சொல் புதுமை, அங்கதம் என்னும் குறும்பு குதிக்கும் தமிழ்நடை, ஆனால் எவரையும் புண்படுத்தாத பண்பாட்டு வரையறை! ஒருவகையில் ஈழத்து மஹாகவியுடன் மீராவை ஒப்பிடலாம். ஆனால் மீரா சிலவகைகளில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறார்.

  • சாதனையாளர்

  மரபிலும், வசன கவிதையிலும், புதுக்கவிதையிலும் சாதனைகள் செய்தவர். சிறந்த உரைநடை எழுதியவர். முன்னணிப் பதிப்பாசிரியராக இருந்து பல இளம் படைப்பாளிகளைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர். இலக்கிய இதழ்களின் ஆசிரியர். ஆசிரியர் சங்கம் மற்றும் உழைக்கும் மக்களின் சங்கத் தலைமைப் பொறுப்பில் இருந்து உரிமைப் போராட்டங்கள் நடத்தியவர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரியவர் மீரா.

  • பிறப்பு

  தமிழ்நாட்டின் இராமநாதபுரம் (இப்போது சிவகங்கை) மாவட்டத்தில் உள்ள சிவகங்கையில் 10-10-1938-இல் பிறந்தார். பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் - இலட்சுமி அம்மாள். இளம்பருவத்தில் பர்மாவில் (மியான்மர்) வளர்ந்தார்.

  • கல்வி

  மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கிய முதுகலைப் பட்டம் பெற்றார். கவிஞர் அப்துல் ரகுமான் இவரது வகுப்புத் தோழர். கவிதை நண்பர்.

  • பணி

  1962 முதல் சிவகங்கை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி தொடங்கினார். முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

  • ஈடுபாடு

  தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த பகுத்தறிவு; அறிஞர் அண்ணாவின் இயக்கம் தந்த தமிழ்மொழிக் காதல்; அறிஞர் காரல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தம் இவை மூன்றின் சங்கமம் கவிஞர் மீரா.

  • படைப்புகள்

  மீ. ராசேந்திரன் என்ற பெயர் கவிதைக்காக மீரா ஆனது. இராசேந்திரன் கவிதைகள் (1965), மூன்றும் ஆறும் (1967), கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் (1971), ஊசிகள் (1974), கோடையும் வசந்தமும் (2002), குக்கூ (2002) ஆகியவை இவரது கவிதை நூல்கள்.

  பல உரைநடை நூல்களும் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்கது வா இந்தப் பக்கம்.

  • விருதுகள்

  சிற்பி கவிதை விருது, கவிக்கோ விருது முதலிய பல விருதுகள் பெற்றார்.

  1-9-2002-இல் மறைந்தார்.

  6.3.1 குறும்பாக்கள்

  மீராவையும் லிமரிக் கவிதை கவர்ந்தது. ஆனால் அந்த வடிவத்தை விட்டுவிட்டு உள்ளடக்கத்தை மட்டும் உள்வாங்கித் தமிழில் எழுதினார். அதனால் இவருடைய ஊசிகள் - நூல் மீராவின் தனித்தன்மை கொண்ட புதுக் குறும்பாத் தொகுப்பாக ஒளி வீசுகிறது.

  • குக்கூ

  ஹைக்கூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை அப்படியே தமிழில் பின்பற்ற முயன்று பலர் எழுதியுள்ளனர். மீரா அதிலும் வடிவத்தைப் பின்பற்றாமல், தம் தனித்தன்மையுடன் எழுதிக் குக்கூ என்ற நூலைப் படைத்தார், இந்தக் கவிதைகளில் பல ‘லிமரிக்’ தன்மையுடன் குறும்பாக்களாக அமைந்துள்ளன. அதாவது லிமரிக்குக்கோ, ஹைக்கூவுக்கோ மிக நெருங்கிப் போகாமல் தனித்தன்மையுடன் உள்ளன. நகைச்சுவை நடை, விமரிசனச் சொடுக்கு, சிந்தனை நறுக்கு இவற்றால் மீராவின் குறும்பாக்களாகவே விளங்குகின்றன. இவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

  6.3.2 கவிதைக்கலை

  மீராவின் ‘ஊசிகள்’ அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிறுமைகளை அழகியலோடு சாடும் (கடுமையாய் விமர்சனம் செய்யும்) அங்கதப் பாக்களால் ஆனது. புதுக்கவிதை வடிவக் குறும்பாத் தொகுதி இது.

  • சுயநல அரசியல்

  பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக் கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது. இதைக் குத்திக் காட்டும் ‘வேகம்’ - ஒரு தரமான எள்ளல் கவிதை.

  எங்கள் ஊர் எம்.எல்.ஏ
  ஏழு மாதத்தில்
  எட்டுத் தடவை
  கட்சி மாறினார்

  மின்னல் வேகம்
  என்ன வேகம்?

  இன்னும் எழுபது
  கட்சி இருந்தால்
  இன்னும் வேகம்
  காட்டி இருப்பார்.....

  என்ன தேசம்
  இந்தத் தேசம்? (ஊசிகள், பக்கம், 13)

  (எம்.எல்.ஏ = சட்டப் பேரவை உறுப்பினர்)

  ‘வேகம்’ என்ற தலைப்பு இகழ்ச்சித் தொனியுடன் அமைந்து உள்ளது. கட்சி மாறுவதில் காட்டிய வேகத்தைத் தன்னைத் தேர்ந்து எடுத்த மக்களுக்குத் தொண்டு செய்வதில் காட்டவில்லை என்று குறிப்பாக இகழ்கிறது. இன்னும் பல கட்சிகளுக்குத் தாவி இருப்பார். அவரது ‘வேகத்துக்கு' ஈடு கொடுக்க இங்குக் கட்சிகள்தாம் போதவில்லையாம் ! என்ன கிண்டல் பாருங்கள் !

  • போலியான மொழிப்பற்று

  “ஜாதி வேண்டும்” என்று சாஸ்திரி சொல்கிறார். தமிழ்ப் பற்றாளர் ஒருவர் “சாதி வேண்டும்” என்று சரியாய்ச் சொல்லும்படி திருத்துகிறார். ‘தமிழ்ப்பற்று’ என்னும் குறும்பா காட்டும் காட்சி இது. (ஊசிகள்: பக்.14) ‘தமிழ்ப் பற்று எப்படி இருக்கிறது? ‘ஜாதி’ கூடாது; ஆனாலும் ‘சாதி’ இருக்கலாம் என்று சொல்கிறது. மொழி, இன ஒற்றுமை பற்றி மேடையில் முழங்குபவன், பிரிவினை வளர்க்கும் சாதிப்பற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். எழுத்தை மட்டும் திருத்தினால் போதுமா? செயல் திருந்த வேண்டாமா? ‘பேச்சில் சீர்திருத்தம், செயலில் பிற்போக்கு’ இந்த இரண்டு நிலைப்பாட்டைச் சுட்டுகிறார். கேலி மொழியால் சுடுகிறார்.

  • கணக்குப் பார்த்த காதல்

  தாய்வழி, தந்தைவழி, முன் அறிமுகம் எந்த வகையிலும் உறவினராய் இல்லாத இருவர் கண்டனர். காதல் பிறந்தது, செம்புலப் பெயல் நீர் போல (உழுது பண்படுத்திய நிலத்தில் பெய்த மழைநீர் போல) அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன. குறுந்தொகை காட்டும் - சங்க காலத்தின் - இயற்கையான காதல் இது. சாதி, சமய, வர்க்க பேதம் பார்க்காத உண்மையான காதல் !

  மீரா தன் ‘குறும்புத்’ தொகையில் காட்டும் ‘நவயுகக் காதல்’- இக்காலக் காதல் - வேறு வகையானது. இது சாதி, மதம், உறவு முறை எல்லாம் ‘பார்த்து’ வருகிறது.

  உனக்கும் எனக்கும்
  ஒரே ஊர் -
  வாசுதேவ நல்லூர் ...
  நீயும் நானும்
  ஒரே மதம்...
  திருநெல்வேலிச்
  சைவப் பிள்ளைமார்
  வகுப்பும் கூட,..
  உன்றன் தந்தையும்
  என்றன் தந்தையும்
  சொந்தக் காரர்கள்...
  மைத்துனன் மார்கள்.
  எனவே
  செம்புலப் பெயல்நீர் போல
  அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

  (ஊசிகள், பக். 48) (வகுப்பு = சாதி)

  இவ்வாறு குத்தலாகச் சமூக இழிநிலைகள் மீது மின்னல் போல் பாய்வதுதான் மீராவின் குறும்பாக்களின் சிறப்பு. ‘ஊசிகள்’ என்ற தலைப்பு நூலுக்கு மிகவும் சிறப்பு. புற்றுநோய் போன்ற இந்தச் சமுதாயச் சீர்கேடுகளில் ‘ஊ’கதிர் ஊசிகள் போல் இவை பாய்ந்து - நோயை அழிக்கும் செயல் புரிகின்றன.

  6.3.3 ‘குக்கூ’ குறும்பாக்கள்

  குக்கூ தொகுதியில் ஒருசில வரிகளில், சின்னப் பூக்கள்போல் மின்னும் அழகிய குறும்பாக்கள் பல படைத்துள்ளார் மீரா. சான்றாகச் சிலவற்றை மட்டும் காணலாம்.

  • உள்ளும் புறமும்

  மேலே மேலே
  பூக்கடை
  கீழே...
  சாக்கடை (குக்கூ : 41)


  (சாக்கடை = கழிவுநீர் வடிகால்)

  ஒரு நகரத்தின் கடைத் தெருவைக் காட்டும் கோட்டு ஓவியம் இது. இதுவே குறியீடாக மனிதனைக் குறிக்கும்போது- வெளியில் பார்த்தால் நல்லவன், உள்ளே நாற்றம் பிடித்தவன்; ஒழுக்கம், நேர்மை அற்றவன் என்று பொருள் தரும்.உலகத்தில் உள்ள பலதுறைகளுக்கும் பொருந்தும் கணிதக் குறியீடுபோல் அமைந்த சிறந்த குறும்பா இது.

  • அனுதாப அரசியல்

  ஒரு சிறந்த குறும்பா. இது எம் நாட்டில் உள்ள அரசியல் சூழல் பற்றியது. மிக மோசமான ஆட்சியைச் செய்யும் ஒரு கட்சி அடுத்த தேர்தல் மூலம் அகற்றப்படலாம். ஆனால், அக்கட்சியின் தலைவர் ஒருவர் ‘திடீர்’ என இறந்துவிட்டால், எம்மக்கள் இரக்கப்பட்டு அக்கட்சிக்கே வாக்குகளை வாரி வழங்கி வெற்றியடையச் செய்து விடுவர். மீண்டும் ஆட்சியில் ஏற்றி வைத்துவிடுவர்.இந்த ‘அனுதாப அலை’ எம் நாட்டின் பரிதாப நிலை:

  செத்த பிணத்தைக்
  கட்டி அழலாம்
  முடிந்தால்
  காட்டி அள்ளலாம் (குக்கூ:91)

  கட்டி அழலாம். இந்தச் சொற்களை நீட்டி அழுத்தி, காட்டி அள்ளலாம் - ஒரு புதுமையான சொற் குறும்பு. புதுமையான பொருள் திருப்பம்:காட்டி அள்ளலாம்:வாக்குகளை; அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை; அதன்வழி, கோடி கோடியாய்ப் பணத்தை.... ‘முடிந்தால்’ - என்ற சொல்லில் அரசியல்வாதியால் எதுவும் முடியும் என்ற கொடிய நிலையைக் காட்டுகிறார்.

  • கும்பல் மனோபாவம்

  உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தது. கூடல் மா நகரில் அறிஞர் பலர் கூடித் தமிழ்மொழியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கினர். அவற்றைக் கேட்டுப் பயன் அடைய மக்கள் கூட்டம் கூடவில்லை. புகழ்பெற்ற திரை நடிகர்கள், அரசியல் தலைவர்களை வேடிக்கை பார்க்கக் கூடியது. அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கப் பெருங் கூட்டம் கூடியது. முத்துக்களைத் தேடாமல் நுரை அள்ளிப் போகும் ‘மேலோட்ட’ மனப்பக்குவமே பொதுவாக எம் மக்களிடம் உள்ளது. இதைக் கண்டு மீராவின் கவி உள்ளம் குமுறுகிறது. அவரது நகைச்சுவை உணர்வு வேதனையை, சிரிப்பூட்டும் குறும்பா ஆக வெளியிடுகிறது:

  கூடல் நகரில்
  கூட்டம்
  கூட்டம் கூட்டம்
  கூட்டம் கூட்டம் கூட்டம்
  கூட்டம் பார்க்க... (குக்கூ:1)

  நகரின் பெயரே கூடல். சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்த நகரம். அங்கே ‘வேடிக்கை’ மனிதர்களின் கூட்டம். எங்குப் பார்த்தாலும் கூட்டம். பத்துச் சொற்கள் கொண்ட இக்குறும்பாவில் ஏழு இடத்தில் ‘கூட்டம்’ என்ற சொல்லே வந்துள்ளது. கண்முன் இந்தக் கூட்டத்தையே காட்டுகிறது. நெரிசலை உணர்த்தும் சொல் ஓவியமாய் நிற்கிறது.

  ஆங்கிலத்தில் இ.இ. கம்மிங்ஸ் (E.E.Cummings), ஜான் அப்டைக் (John Updike) போன்ற கவிஞர்கள் Concrete Poetry (கண்புலன் கவிதை) என்றொரு புதுமை வகையை அறிமுகப் படுத்தினர். தமிழில் சிறந்த கண்புலன் கவிதைக்கு இதுவே சான்று.

  நண்பர்களே! இவற்றைப் போன்ற மிக அழகான குறும்பாக்கள் ‘குக்கூ’வில் உள்ளன.

  இப்பாடப் பகுதியில் மீராவின் குறும்பாக்கள் சிலவற்றைக் கண்டோம். அவரது படைப்பு ஆக்கத் திறனையும் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தையும் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2018 16:13:02(இந்திய நேரம்)