தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4

 • 6.4 ஈரோடு தமிழன்பன்

  புதுக்கவிஞர்களுள் குறிப்பிடத் தக்கவர் சிலர். அவருள் ஈரோடு தமிழன்பனும் ஒருவர். மரபுக் கவிதை எழுதிப் புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.

  எதற்கப்பா எதுகை மோனை
  மின்னலைப் பிடித்து
  வைக்கவா சட்டி பானை?

  என்று கேட்கும் குறும்பாக்களையும் படைப்பவர்.

  இவரது சென்னி மலைக் கிளியோப் பாத்ராக்கள் சிறந்த ‘லிமரைக்கூ’ என்னும் புதுவகைக் குறும்பாக்களின் தொகுதி. இதைப்பற்றி இனி வரும் பகுதி விளக்குகிறது.

  • பிறப்பு

  தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் பிறந்தவர். பெற்றோர் : செ.இரா.நடராசன் - வள்ளியம்மாள். பெயர் ; ந.செகதீசன்.

  • புனை பெயர்கள்

  புனை பெயர்கள் : தமிழன்பன், ஈரோடு தமிழன்பன், விடிவெள்ளி.

  • கல்வியும் பணியும்

  தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

  • படைப்புகள்

  சிறந்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர். பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார். நிறைய எழுதி வருகிறார். சிலி நாட்டு மகாகவி பாப்லோ நெருதாவைத் தம் உள்ளத்துள் இருக்கும் நண்பனாகக் கொண்டு கற்பனையில் உரையாடி வருபவர்.

  6.4.1 குறும்பாவில் புதுப்பா
   

  இனிய நண்பர்களே ! ஹைக்கூ என்னும் 5,7,5 அசையுள்ள மூன்றடி ஜப்பானியக் கவிதை வடிவம் பற்றி அறிவீர்கள் அல்லவா? லிமரிக் என்ற ஆங்கில ஐந்துவரிக் கவிதை பற்றியும் இப்பாடத்தில் அறிந்தீர்கள்.

  ஆங்கில மொழியில் இந்த இரு வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

  இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, 138 பாக்களைத் தொகுத்து, ‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன், வெளியிட்டிருக்கிறார்.

  6.4.2 கவிதைக் கலை
   

  லிமரைக்கூ என்பதால், உள்ளடக்கத்தில் லிமரிக், ஹைக்கூ இரண்டின் தன்மைகளும் கொண்ட கவிதைகள் இதில் உள்ளன. இயற்கை சார்ந்த கவிதை வெளிப்பாடுகளுள், சமூக இழிவுகளை நையாண்டி செய்யும் அங்கத இயல்புள்ள கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன. வடிவம் : மூன்று வரிகள். முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபு (ரைம்). சிலவரிகளில், முதற்சொல்லில் மோனை உள்ளன.

  • போலிக் குருமார்கள்

  பரம்பொருள் (இறைவன்) மீது வைக்கும் பற்றுதான் பக்தி. இது தடம்புரண்டு பொன்மீதும், பொருள்மீதும், புகழ்மீதும் வைக்கும் போலிப் பக்தியாய் ஆகிவிட்டது. போலிப் பக்தர்களால் போலிக் குருமார்கள் பெருகிவிட்டனர். மக்கள் மடத்தனத்தைப் பயன்படுத்தி, மடங்கள், மாளிகைகள், பெரும் சொத்துகள் என்று வசதி பெருக்கி வாழ்கின்றனர். இதைச் சாடாத கவிஞர்களே இல்லை. தமிழன்பன் அழகாகக் கேலி செய்கிறார் :

  குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
  கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
  குடியிருக்கப் போனார்கள். (பக்கம் : 30)

  ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இந்த நாட்டுப் பழமொழி. மனிதர்களுக்குத் தெய்வ நம்பிக்கையுள்ள மனிதர்கள் சொன்னது இது. குருக்களின் சுரண்டலும், அதிகார அட்டகாசமும் பொறுக்க முடியாமல், தெய்வங்களே கோயில் இல்லாத ஊர்தேடி ஓடிப்போய் விட்டனவாம். தமிழன்பனின் குறும்பா இதை எவ்வளவு குறும்பாகச் சொல்கிறது பாருங்கள் ! கோயில் உள்ள ஊருக்குப் போனால் அங்கேயும் துரத்தி வந்துவிடுவார்களே, இந்தப் போலிக் குருமார்கள் ! இக்கவிதையை அரசியல் முதலிய பிறதுறைகளுக்கும் கூடப் பொருத்திப் பொருள் கொள்ள முடியும். இன்றைய சமுதாய நிலையின் அழகான படப்பதிவு, இது.

  இதே வகையில் நல்ல பல லிமரைக்கூக்கள் படைத்துள்ளார் தமிழன்பன்.

  • போலிப் பக்தர்கள்

  பாடுவது அருட்பாப் பதிகம்
  அன்றாடம் உணவில் ஆடுகோழி
  மீன் நண்டு வகைகளே அதிகம் (பக்கம் : 28)

  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம் வள்ளலார் இராமலிங்கர் அருள் நெஞ்சம். அவரது பக்தர் நிலை எப்படி? அவர் பாடிய திரு அருட்பாவைத் தினந்தவறாமல் பாடும் ‘வாய்’ வேறு, ‘வயிறு’ வேறாக இருக்கிறது. வழியைப் பின்பற்றாமல் மொழியை இசைப்பதா பக்தி? போலித்தனத்தைக் கிண்டல் செய்யும் கேலித்தனம் சிறப்பாக உள்ளது.

  • கொள்கைவேறு குணம்வேறு

  அரசியலைச் சாக்கடை என்பார்கள். கட்சியின் சின்னத்தைக் கண்டு மயங்கி வாக்களித்தனர் மக்கள். அதாவது கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு வாக்களித்தனர். அக்கட்சி ஆட்சிக்கு வந்தும் அதன் கெட்ட குணமும் போகவில்லை. ஊரும் நன்றாகவில்லை.

  ஊது வத்திச் சின்னம்
  கட்சி வென்று கோட்டை பிடித்தும்
  நாற்றம் போகலை இன்னும்

  (போகலை = போகவில்லை என்பதன் கொச்சை மொழி)

  • சாவில் கிடைக்கும் வாழ்வு

  எதையாவது விற்று எந்த வழியில் வேண்டுமானாலும் பொருளைத் தேடிக் குவிக்க வேண்டும் - இந்தச் சந்தைப் பொருளாதாரம் உயர்ந்த ஒழுக்க நெறிகளையும், வாழ்க்கை மதிப்பீடுகளையும் கருக்கிவிட்டது. இதை அழகாக விமர்சனம் செய்கிறது இந்தக் குறும்பா :

  புகை பிடித்தால் இறப்பாய்
  மது குடித்தால் இறப்பாய்
  இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய் !

  தனி மனிதர் மட்டுமல்ல அரசுகள் கூட இதைப் போன்ற அழிவுப் பொருட்களை மக்களிடம் விற்றுப் பணம் குவிக்கின்றன. இந்த இழிவுப் பாதையை எள்ளி நகையாடிக் கண்டிக்கிறது கவிதை.

  • ‘பாசமு’ம் ‘நேசமு’ம்

  ‘பொருள் ஆதாரம்’ மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. பெற்றோர், பிறந்தோர், சுற்றத்தார் இடையில் கூட எப்படிப் புகுந்து ‘விளையாடுகிறது’ ! பாலைவன நாட்டுக்குப் போய்ப் பாடுபட்டு உழைத்துவிட்டு ஊர்திரும்புகிறான். அவன் மீது உள்ள பாசத்தைவிட, அவன் கொண்டுவரும் பொருள் மீதல்லவா ‘குடும்பப் பாசம்’ பொங்குகிறது! அருமையாய் இதை வெளிப்படுத்துகிறார் தமிழன்பன்.

  துபாயில் அதிகமா வெய்யில் !
  கேள்வி கேட்டோர் கவனம் எல்லாம்
  அவன் இறக்கிவைத்த பையில் !


  • அலைகளின் அழுகை

  இயற்கையில் இழைந்து கரையும் இளகிய மனம் கவிமனம். மனத்தின் இந்த ‘ஹைக்கூ’த் தன்மையே சிறந்த கவிதைகளின் மூலதனம். கடலின் குமுறலுக்குக் காரணம் காண்கிறது, இந்த லிமரைக்கூ :

  அத்தனை மீன்கள் வலைகளில்
  அடுத்தநாள் கடலிலே
  அத்தனை அழுகை அலைகளில் ! (பக்கம் : 29)

  • குழந்தையும் கவிஞனும்

  தாத்தா ஆகும்போது கவிஞன் குழந்தை ஆகிறான். அப்போது பேரக் குழந்தைகளும், அவர்களது பொம்மைகளும் அவனுக்கு விளையாட்டுத் தோழர்கள் ஆகிவிடுகின்றனர். தமிழன்பனின் குறும்பாக்களில் குழந்தைகள், பொம்மைகள் பற்றியவை மிகுதியாய் உள்ளன.

  செடிகொடிகளின் பூக்கள் எல்லாம் என்ன தெரியுமா? குழந்தை உதட்டில் இடம் கிடைக்காமல்போன ‘சிரிப் பூ’க்கள் தானாம் (பக்கம் : 52)

  குழந்தைக்குத் தன் பொம்மை மேல் எவ்வளவு பாசம்! உறங்கும் போதும் அதைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் தாய்க்கே இதைக் கண்டு பொறாமை வருகிறதாம் ! (பக்கம் : 32)

  குழந்தை கைக்குப் போவதற்கு, அதனுடன் விளையாடுவதற்குப் பொம்மைகளுக்குள் போட்டி, பொறாமையாம் :

  குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்
  உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
  கைக்குப் போகத் துடிக்கும் ! (பக்கம் : 42)

  இவ்வளவு பாசம் காட்டும் ஒரு குழந்தை இறந்து போய்விட்டால்...... உயிரற்ற பொம்மையின் உள்ளத்துக்குள் கவிஞர் தம் உயிரைச் செலுத்தி எண்ணிப் பார்க்கிறார் :

  மழலைக்கா இறுதி யாத்திரை?
  பழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்லை

  கேட்கிறது தூக்க மாத்திரை (பக்கம் : 32)

  (இறுதியாத்திரை = சாவு ஊர்வலம்)

  தமிழன்பனின் லிமரைக்கூ - குறும்பாக்கள் சிரிப்பையும் வரவழைக்கின்றன. சிந்தனையையும் எழ வைக்கின்றன. சிலவேளை நம்மை அழவைக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:30:49(இந்திய நேரம்)