Primary tabs
3.3 மொழிபெயர்ப்புப் பணி
மொழிபெயர்ப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ய, "படி! சிறந்த நூல்களைப் படி! மிகச்சிறந்த நூல்களை உருவாக்கும் வகையில் படி!" என்று முறையாகக் கூறலாம். மொழிபெயர்ப்புச் செய்ய ஏன் படிக்க வேண்டும் என்ற விதண்டாவாதக் கேள்வி எழலாம். படிக்கும்போது தான் அறிவுத் தேடல் உருவாகும். அறிவுத் தேடலில்தான் நமது கருத்தாழம் புலனாகும். அப்படிப்பட்ட தேடல் பல நூல்களை அள்ளிப்பருக அடிப்படையாகும். மொழிபெயர்ப்புத் துறையில் முழு ஆர்வம் கொண்ட ஒருவர் படிப்பது என்பது, மூலநூலான தருமொழி நூல்கள், பெறுமொழி நூல்கள் இவை குறித்த எல்லாத் தெளிவும் பெற வேண்டும். மூலநூலிலிருந்து மொழி பெயர்ப்புச் செய்யும் போது சந்தேகம் வந்தால் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது. சோம்பலின் காரணமாக அப்படியே எழுதிவிட்டால் அது படிப்போருக்குத் தயக்கத்தை உருவாக்கும். உதாரணமாக, "கேம்பிரிட்ஜ்" பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் உருவாக்கிய இந்திய வரலாறு என்ற நூலை வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த நூலில் ஓரிடத்தில் ''சீக்கியர்மீது ஆங்கிலேயர் பெற்ற இந்த வெற்றி ''பிரிக்'' பெற்ற'' என்ற தொடரைக் கண்டு அதனால் ''Pyrrhic வெற்றிதான்'' என்று எழுதப்பட்டிருந்ததாம். அதில் ''பிரிக்'' வெற்றி என்ற தொடர் பலருக்கும் புரியாத புதிராக இருந்ததாம். பின்பு அகராதிகளின் துணையோடு ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி, இறுதியில் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் ''pyrrhic'' ‘பெருமுயற்சியால் அடையப் பெற்ற' என்ற தொடரைக் கண்டு அதனால் ''Pyrrhic'' victory என்ற தொடருக்குப் பெருமுயற்சியால் பெற்ற வெற்றி என்ற பொருள் தெரிந்ததாகப் பேராசிரியர் பட்டாபிராமன் தமது ''மொழிபெயர்ப்புக் கலை'' என்ற நூலில் குறித்துச் சொல்கிறார். ஒரு பேராசிரியருக்கே இத்தகைய மொழிபெயர்ப்பு தொல்லை தருமாயின் சாதாரண மாணவன் பாடு என்ன? என்பது சிந்தித்தற்குரியது. எனினும் மொழிபெயர்ப்பு அரியது என்று கூறவோ, ஒதுக்கவோ, எளியது என்று ஏற்று நடக்கவோ இயலாது.
‘Uncle’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாக்கம் தரும் பொழுது பொதுவாக ''மாமா'' என்று எழுதுவது வழக்கம். ஆனால் அந்தச் சொல்லுக்கு, (1) தந்தையுடன் பிறந்த ஆண், (2) தாயுடன் பிறந்தாளின் கணவன், (3) தாயுடன் பிறந்த ஆண், (4) தந்தையுடன் பிறந்தாளின் கணவன் என்ற பலபொருள்கள் இருப்பதால் இடத்துக்கேற்பப் பயன்படுத்த வேண்டும் அப்போது அது பயன்செறிந்த தெளிவான மொழி மாற்றமாகின்றது. எழுதும்போது மூலமொழியின் சமுதாயப் பயில் நிலைகளை உற்றுணர்ந்து, மரபுச் சொல் வழக்குகளை அறிந்து மொழி மாற்றம் செய்வதே சாலச் சிறந்ததாகும். அகராதிகளைப் புரட்டிப் பார்த்து, தகுந்த பொருளை உறுதிப்படுத்திக் கொண்டு, நடைமுறை நிலைக்கு ஏற்பப் பழகுதமிழில் ஆழக் கருத்துரைப்பதே சீரிய மொழிபெயர்ப்பு என்றல் மிகையாகாது.
3.3.1 மூலமொழிபெயர்ப்பும் சரிபார்த்தலும்
மூலமொழியில் உள்ள பெயர்களை மாற்றுவது முறையா என்ற வினா எழுவது இயல்பு. ‘மொழிபெயர்ப்பாளருக்கு அதற்குரியதான உரிமை இல்லை’ என்பதுதான் சரியான விடையாக அமையும். முன்னாள் மத்திய அமைச்சர் S.K. Day பற்றிய செய்தி ஒன்றை மொழிபெயர்க்கும் போது மொழி பெயர்ப்பாளர் ''மத்திய அமைச்சர் S.K. நாள்'' என்று எழுதினால் எத்தனை நகைப்பிற்கிடமானது என்று அறியலாம். Mr. White என்ற பெயரை திரு.வெள்ளையன் என்றோ Mr. Milky என்பதை திரு. பாலையன் என்றோ மாற்றுவது தகுமோ? என்றால் தகாது என்ற பதிலை ஆங்கிலமும் தமிழும் அறிந்த யாவரும் தருவர். மொழி மரபு அறிந்து தான் மொழியாக்கம் செய்யப்படவேண்டும்.
மூலமொழியில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அது அப்படியே பெயர்ப்பு மொழியில் தரப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை அழகு தமிழில் மொழிபெயர்த்த நிலையில் ஏற்பட்ட தவறினைப் பார்க்கலாம்.
''A self addressed envelope stamped to a value of Rs. 4.20'' என்று ஆங்கிலத்தில் வெளியான செய்தி தமிழில் வருகிறபொழுது ‘தன்முகவரி எழுதப்பட்ட ரூ.4.50 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறை ஒன்று'' என்று எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ரூ4.20, தமிழிலோ ரூ4.50 மொழி மாற்றத்தால் 30 காசுகள் மதிப்பு ஏறிற்றோ? இல்லை, இல்லை; அதே போல, ‘அஞ்சல் வில்லை’ என்பதும். அது ‘அஞ்சல் தலை’ என்று இருக்க வேண்டும். மொழிபெயர்ப்போடு மூலத்தைச் சரியாக ஒப்பிட்டுப் பாராததால் ஏற்பட்ட பிழைதான் அது. மொழிபெயர்ப்பில் இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட, ஒப்பிட்டுச் சரிபார்த்தல் அவசியமாகிறது.
3.3.2 தவிர்க்கப்பட வேண்டியவை
மொழிபெயர்ப்பில் முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டியவை மொழிநிலையும், பயன்பாடும்தான். ஏனெனில் கருத்துப் பரிமாற்ற அடிப்படையில் உள்ளது உள்ளபடி கூறும் நிலை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிகளின் சொல், தொடர், வாக்கிய ஆக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை மொழிபெயர்ப்பில் இடறி விழும் கண்ணிகளாக அமைந்துவிடல் கூடாது.
''You are in the good books of the Manager'' என்பதை ''நீ மேலாளரின் நல்ல புத்தகத்தில் இருக்கிறாய்'' என்றும், ''He gave me a warm welcome'' என்பதனை, ''அவன் எனக்குச் சூடான வரவேற்பு நல்கினான்'' என்றும், ''Still water run deep'' என்பதனை ''அமர்ந்த தண்ணீர் ஆழமாக ஓடும்'' என்றும் ''He smelt the rat'' என்பதனை ''அவன் எலியை மோந்தான்'' என்றும் மொழிபெயர்ப்புச் செய்தால் அது எத்தனை நகைப்பிற்கு இடமாகும்! ''நீ மேலாளரின் நன்னம்பிக்கையைப் பெற்றுள்ளாய்'' என்றும், ''அவன் எனக்கு நல்ல மகிழ்ச்சியான வரவேற்பளித்தான்'' என்றும் ''நிறைகுடம் நீர் தளும்பல் இல்'' என்றும் ''அவன் ஐயம் கொண்டான்'' என்றும் தமிழ் மரபு அறிந்த நிலையில் எழுதப்படுமாயின் மொழிபெயர்ப்பு உயிரோட்டமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இவை மொழிபெயர்ப்பில் கவனிக்கப்பட வேண்டிய அடிப்படைகளாகின்றன.