Primary tabs
-
4.5 பிற மொழிபெயர்ப்புகள்
தேர்ந்தெடுத்த பொருளுக்கும், தன்மைக்கும் ஏற்ப மொழிபெயர்ப்புகளை அமைக்க வேண்டும்.
4.5.1 குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புகள்
குழந்தைகளின் மனத்தில் பதியும் வண்ணம் சொல்லும் கருத்தில் எளிமையும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமை, இனிமை, திண்மை போன்ற பண்புகள் இடம்பெறும் வகையில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் இவ்வகையில் அமையும். கதை, சிறுகதை, பாட்டு என்பன சிறுவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்ட நிலையைக் காணுகிறோம். வை. கோவிந்தன் தொகுத்த ஈசாப் குட்டிக் கதைகள் என்ற நூலைக் குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பின் முன்னோடி எனலாம். மொழிபெயர்ப்புப் பணியிலே தனித்திறன் தேவைப்படுவது குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பில்தான் என்று அறிஞர் கூறுவர்.
4.5.2 அறிவியல் மொழிபெயர்ப்பு
உலகம் முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட அறிவியல் ஒரு சிறந்த ஏணியாக உள்ளது. அந்த அறிவியல் கருத்துகள் எந்த மொழியில் தோன்றினாலும் பிற பல மொழிகளில் மாற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்புள்ள கட்டாயத்துக்குள் உலகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புப் பற்றிய செய்தியைப் பின்னர் விரிவாகக் காணலாம். இது இயந்திர மொழிபெயர்ப்பில் பேரளவும் நிலவுகிறது. இந்த மொழிபெயர்ப்பில் உணர்ச்சி, சந்தம், இசைநயம், ஓசைநயம் போன்ற இலக்கியக் கூறுகளுக்கு இடமில்லை. அதே சமயம் கலைச் சொற்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் அறிவியல் தமிழே தமிழின் ஒரு கிளை மொழியாக இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
4.5.3 திரைப்பட வசன மொழிபெயர்ப்பு
மக்கள் மனத்தில் அதிகமாக இடம் பெறும் பொழுதுபோக்குத் துறை திரைப்படத் துறை எனலாம். பணிப்பளுவினால் சோர்ந்த மனிதமனம் களைப்பு நீங்கி ஓய்வு கொள்ள ஏதுவான ஒன்றாக இது கருதப்படுகிறது. இன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் போன்ற மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் பிறிதொரு மொழித் திரைப்பட வசனத்தை மொழிபெயர்த்து அமைக்கும் நிலையினைக் காணுகின்றோம். அவ்வாறு மொழிபெயர்ப்புச் செய்யப்படும் திரைப்படங்கள் பல பண்பாட்டுச் சிதைவுக்குச் சில நேரங்களில் வழிகோலவும் செய்கின்றன. பல்வேறு மொழி பேசும் மக்களின் பண்பாடுகள் ஒரே மாதிரி அமைவதில்லை. இந்நிலையில் மொழிபெயர்ப்புச் செய்யும் பொழுது, குறிக்கோள் மொழியின் (பெறுமொழியின்) பண்பாட்டு அமைப்பைக் கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும். டப்பிங் முறையில் மொழி மாற்றம் செய்யப்படும் போதும் உச்சரிப்பு நிலையில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
4.5.4 மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பு
ஒருவர் மேடையில் பேசும் போது மற்றொருவர் பிறிதொரு மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யும் பணி சற்றுச்சிக்கலான ஒன்றுதான். இது அரசியல் பேச்சுகள், இலக்கிய மேடைகள், சமயச் சொற்பொழிவுகள், அறிவியல் ஆய்வு மாநாடுகள் போன்ற பல சூழல்களில் அமையும். இதனை ஆங்கிலத்தில் ''Interpretation'' என்று சொல்லுவார்கள். உலகப் பேரவைகளில் இப்பணிக்கு நல்ல வரவேற்பு உண்டு. உள்ளதை உள்ளவாறே சொல்லும் நிலை மிகவும் கவனிக்கப்பட வேண்டும். மொழிபெயர்ப்பாளரின் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடமின்றி மொழிபெயர்க்க வேண்டும்.
4.5.5 மரபுவழி மொழிபெயர்ப்பு
ஒரு மொழிக் கருத்தை மற்றொரு மொழியில் சொல்ல வரும்போது சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் போல் தோன்றினும் இலக்கண நிலைகளில் பெரும்பாலும் மரபு வழி நிற்றல் காணலாம்.
எடுத்துக்காட்டாக:
I spoke - நான் பேசினேன்.
We spoke - நாம் பேசினோம்
You spoke - நீ பேசினாய் / நீங்கள் பேசினீர்கள்
They spoke - அவர்கள் பேசினர், அவை பேசின.
He spoke - அவன் பேசினான்.
It spoke - அது பேசிற்றுஇந்த எடுத்துக்காட்டில் நாம் ஒரு மொழி அடிப்படை நிலையை வேறுபடுத்திக் காண இயலும். அதாவது ''spoke'' என்ற ஆங்கிலச் சொல் ஒரே நிலையில் பேசப்படுகிற நிலையிலும் I, We, You, They, He, It போன்ற எழுவாய் மாற்றங்கள் மொழி மாற்ற நிலையில் தமிழ் மரபு காக்கப் பட்டுள்ளது தெரிகிறது.