தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துறைகள் சார்ந்த விளைவுகள்

  • 5.2 துறைகள் சார்ந்த விளைவுகள்

    மொழிபெயர்ப்பு என்பது ஏதேனும் ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தும். இந்தத் தாக்கம் இல்லாமல் எந்த நூலையோ அல்லது கருத்தாக்கங்களையோ மொழிபெயர்க்க எவரும் முற்படுவதில்லை.

    வேறு ஒரு மொழியில் ஒரு நூலைப் படிக்கிற போது அந்தப் படிப்பாளிக்கு ஏற்பட்ட தாக்கம் காரணமாக, அந்த மொழியையும், அமைப்பையும் நன்கு அறிந்தவராக இருந்தால், அவரே மொழிபெயர்க்க முயற்சி செய்யலாம். ஆக மொழிபெயர்ப்பு என்பதே மூலமொழிப் படைப்பு, ஒரு படிப்பாளியின்பால் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உருவாவதாகும். இதுவே சமூக மறுமலர்ச்சிக்கோ அல்லது ஓர் இனத்தின் மேம்பாட்டிற்கோ மூலமொழியின் கருத்தாக்கங்கள் பயன்படுமேயானால், அந்த மொழிபெயர்ப்புப் பயனுடையதாகும். அந்தக் கருத்தாக்கத்தின் தாக்கத்தால் எதிர்பார்த்த விளைவை அடைவதற்காகவும் அம்மொழிபெயர்ப்புப் பயன்படலாம்.

    5.2.1 அறிவியல் துறை

    ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து ஆங்கில இலக்கியங்கள் மட்டுமன்றி, ஏனைய அறிவியல் பாடங்களான புவியியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்றவையும் ஆங்கிலம் வழியே தமிழக மாணவர்கள் கற்க வேண்டும் என்ற நிலை இருந்தது. பாரதியார், அவற்றை எல்லாம் மொழிபெயர்த்துத் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறியிருப்பது இங்குக் குறிப்பிட வேண்டியதாகும்.

    ''அன்னிய ராஜாங்கமாக இருப்பதால் இங்கிலீஷ் பாஷையிலே நம்மவர் தேர்ச்சி பெறவேண்டும் என்பதை நாம் மறுத்துப் பேசவில்லை. ஆனால், பூலோக சாத்திரம், உலக சாஸ்திரம், ரஸாயனம், வான சாஸ்திரம், கணிதம் என்பனவற்றைச் சுதேசி பாஷைகளிலேயே கற்றறிந்து கொள்ளுதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்... இங்கிலீஷ் பாஷை பயிற்ற வேண்டுவது அவசியமாயினும், மற்றப் பாடங்களைக் கூட தேச பாஷையில் நடத்த வேண்டும்'' என்று பாரதி (பாரதி தரிசனம், சுதேசிய கல்விமுறை) கூறியிருப்பது மொழிபெயர்ப்புக்கு முன்மொழியப்பட்ட நிகழ்ச்சியாக நாம் கொள்ளலாம்.

    5.2.2 ஆட்சித்துறையும் சட்டத்துறையும்

    இந்தியத் துணைக்கண்டத்தைப் பொருத்த வரையில் முஸ்லீம்களின் ஆட்சி முழுமையாகப் பரவியிருந்தது எனலாம். அவர்கள் வருவாய்த்துறைக்கு வழங்கிய சொற்கள் மிகுதி.

    வசூல், இலாக்கா, தாக்கீது, தவாலி, மகால், ஆஜர், இரிசால், முகாம், லாயக்கு, ரத்து, ஜப்தி, ஜாமீன், தணிக்கை, மகசூல், ஜில்லா போன்ற அரபுச் சொற்களும்,

    டபேதார், திவான், ரவாணா, ரஸ்தா, ஜாகீர், சர்தார், ஹவல்தார், அங்கூர், சால்வை, சிப்பந்தி, ரசீது, மாலீசு, சுமார், தயார் போன்ற பாரசீகச் சொற்களும்,

    அசல், அமுல், அம்பாரம், அலக்காக, அலாதி,. அமீன், இந்துஸ்தான், ராஜினாமா, ராத்தல், இனாம், கச்சேரி, கஜானா, அஸ்திவாரம், இஸ்திரி, கம்மி, குத்தகை, சந்தா, சராசரி, அயன், உருமால், கவாத்து, சர்பத், சரிகை, கிராக்கி போன்ற உருதுச் சொற்களும் தமிழாகிப் போயின. இவற்றுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கும் முயற்சி நடந்த வண்ணம் உள்ளது.

    ஆட்சித்துறையும் சட்டத்துறையும் இன்றைய அமைப்புக்கு வடிவமைக்கப்பட்ட காலம் ஆங்கிலேயருக்கு உரியது. அவர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய பலவற்றைச் சிற்சில மாற்றங்களுடன் ஜனநாயக நெறிமுறைக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக மேற்கண்ட இருதுறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்கி, சொற்சீர்திருத்தம் மேற்கொண்டனர். இதற்கிடையில் தமிழ்மொழியில் தூய்மை கருதி, மறைமலை அடிகளார் முதலியோர் தனித்தமிழ் என்ற கொள்கையை முன் வைத்து மொழிச் சீர்திருத்தம் மேற்கொண்டனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-07-2018 17:32:39(இந்திய நேரம்)