தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற விளைவுகள்

  • 5.6 பிற விளைவுகள்

    மேலும் அறிவியல் சார்ந்த விளைவுகளும், சட்டத்துறை சார்ந்த விளைவுகளும் ஆட்சித்துறை சார்ந்த விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.

    5.6.1 அறிவியல் சார்ந்த விளைவுகள்

    அறிவியல் சார்ந்த விளைவுகளை இரண்டு நிலைகளில் காணலாம். ஆய்வின் போது தருக்க முறையில் தரவுகளைத் தொகுத்து, அணுகும் நேர்மையான அணுகுமுறை ஒன்று; அறிவியல் நூல்களான புவியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்-விலங்கியல், தாவரவியல், கணினியியல் எனப் பல்வேறு அறிவியல், தொழில்நுட்பத் துறையில் மொழிபெயர்ப்பின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவது, மற்றொன்று.

    அறிவியல் துறைகள் பற்றிய நூல்கள் எவையும் தமிழ்நாட்டில் கட்டுரைகளாகவோ தொகுப்பு நூலாகவோ 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இல்லை. ஆங்கிலக் கல்வியின் விளைவாக ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அறிவியல் நூல்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துள்ளன. பிற்காலத்தில் பாடநூல்களாக மொழிபெயர்ப்புகளும் தமிழில் அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய தமிழ் நூல்களும் பெருகுவதற்குக் காரணமாக மொழிபெயர்ப்புகள் உள்ளன.

    தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ்வழி பயில்வோருக்காக, மாணவர்கள் படித்துப் பயன் பெறும் வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை மலிவுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இன்றைய நிலையில் +2 வரையிலான பாடநூல்கள் தமிழில் எழுதப்பட்ட நூல்களாக உள்ளன.

    பல தனியார் புத்தக நிறுவனங்கள் அறிவியலின் இன்றைய வளர்ச்சியான கணினித்துறை சார்ந்த பல்வேறு வகையான நூல்களை மொழிபெயர்த்தும் தனியே தமிழ் நூல்களாகவும் வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் அறிவியல், தொழில்நுட்பம் முதலியன தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான துறைகளாக உள்ளன.

    அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளைத் தமிழில் வழங்குவதற்கு யுனெஸ்கோ கூரியர், கோவையிலிருந்து வெளிவரும் கலைக்கதிர், அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் களஞ்சியம் போன்ற ஏடுகள் துணைபுரிகின்றன. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைசார்ந்த ஆய்வேடுகளில் ஆய்வுச் சுருக்கம் தமிழில் ஓரிரு பக்கங்களில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதும் பாராட்டுக்கு உரியது. தமிழில் எழுதக் கூடிய பலர் அறிவியல் செய்திகளைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றனர். வானியல், விண்கலன் முதலியன பற்றி நெல்லை சு.முத்து, கணினித்துறை சார்ந்து ஆண்டோ பீட்டர் முதலியோர் தொடர்ந்து தமிழில் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.

    5.6.2 சட்டத்துறை சார்ந்த விளைவுகள்

    சட்டத்துறை என்பதும் அறிவியல் சார்ந்த துறையாகும். அதிலும் சொல்லாக்க முறைதான் பெரும்பாலும் செய்யப்பட்டு வருகிறது. சட்டத்துறையைப் பொறுத்த வரையில் கலைச்சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் அமைந்துள்ளன. அவற்றை மொழிபெயர்ப்பது பெரும்பணியாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டங்களை மொழிபெயர்க்கவும், சட்டக் கலைச்சொற்களை உருவாக்கவும் தமிழக அரசு 1965ஆம் ஆண்டு குழு ஒன்றனை அமைத்தது. 1969-இல் சட்டக் கலைச்சொற்கள் தொகுப்பு வெளிவந்தது. இக்கலைச்சொல் அகராதி தமிழுக்குக் கிடைத்த மாபெரும் பயனாகக் கருதப்படுகிறது.

    5.6.3 ஆட்சித்துறை சார்ந்த விளைவுகள்

    இக்காலத்தில் ஆட்சி பலவகையில் விரிவடைந்துள்ளமையால் நம்மிடம் வழக்கில் இல்லாத புதுச்சொற்களும் ஏராளமாகத் தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்து, பேச்சு வழக்கு, இலக்கிய வழக்கு, கல்வெட்டுச் சொற்கள், புதுப்புனைவு எனப் பல்வேறு வகைகளிலிருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

    தமிழ்நாட்டில், தமிழ்மொழி ஆட்சிமொழியாகப் பயன்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மொழியைச் செயற்படுத்தும் பணி, அதிகாரிகள், அலுவலர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

    1960ஆம் ஆண்டு முதல் எல்லா மாவட்டங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கு ஏற்றமுறையில் கல்விமுறையில் கற்பிக்கும் மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும். ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைத் துறைதோறும் அனுபவம் உள்ள அலுவலர்களை வைத்து ஆட்சிச் சொற்களஞ்சியம் தயாரிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது; செயல்படுத்தவும் பட்டது.

    அரசு 1960ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத் துறைச் சொல்லகராதியை வெளியிட்டது. இவை அனைத்தும் ஆட்சித்துறை சார்ந்த மொழிபெயர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகள் எனலாம்.

    5.6.4 இதழியல் சார்ந்த விளைவுகள்

    செய்தித் தொடர்பில் மிக இன்றியமையாத செயல்பாடாக இதழ்கள் விளங்குகின்றன. நாளிதழ், மாத இதழ், வார இதழ், இருமாத இதழ், முத்திங்கள் இதழ், ஆறு திங்கள் இதழ், மாதம் இருமுறை இதழ், ஆண்டு மலர் முதலிய வகைகளிலும் இதழ்கள் வெளிவருகின்றன.

    செய்திகளை வெளியிடுகின்ற பெரும்பணியில் செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியன பெரும்பங்காற்றுகின்றன. அத்துடன் இன்றைய தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாக இணைய இதழ்கள் பல்கிப் பெருகி உள்ளன. செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், கருத்துகளைப் புலப்படுத்துவதும் ஒரு மொழியின் அடிப்படைப் பணிகளாகும். அந்நிலையில் ஒரு மொழியில் கிடைக்கும் செய்திகளை அதே மொழி அறிந்த மக்களுக்குச் சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறுவது முதல்நிலையாகும்.

    ஒரு மொழி பேசும் மக்களிடையே மற்றொரு மொழி பேசும் மக்களின் கருத்துகளை அறியச் செய்கின்ற மொழிபெயர்ப்புப் பணி இரண்டாவது நிலையாகும்.

    மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற சொல்லாக்கப் பணி மூன்றாவது நிலையாகும்.

    புதியனவற்றிற்குப் புதிய சொற்கள் பெயர்ப்பு மொழியில் படைக்க முடியாத நிலையில் அதனை நிறைவடையச் செய்கின்ற ஒலிபெயர்ப்புப் பணி நான்காவது நிலையாகும்.

    பத்திரிகைத்துறை பெருமளவு வளர்ந்திருப்பதோடு, அதற்கிணையாக மொழிபெயர்ப்புத் துறையும் வளர்ந்து, செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொள்ள வகை செய்கிறது.

    மொழிபெயர்ப்புக்கெனவே தனி இதழ்கள், ஒப்பியலுக்கு எனத் தனி இதழ்கள் எனப் பல்வேறு தனித்தனிச் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்க வகையில் இந்திய மொழிகளில் வெளியான கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. அவ்வாறே உலக மொழிகள் பலவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புகளைச் சிற்றிதழ்கள் தாங்கி வருகின்றன. இதழ்கள் பெருகியதும், அவற்றில் மொழிபெயர்ப்புகள் இடம்பெறுவதும் மொழிபெயர்ப்பினால் விளைந்த விளைவே ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:31:13(இந்திய நேரம்)