தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல் பற்றிய விளக்கம்

  • 1.1 சொல் பற்றிய விளக்கம்

    ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பது தமிழகத்தில் நிலவும் நாட்டார் நம்பிக்கை. சொல் வழியாகப் புனையப்படும் மந்திரமானது அதியற்புதமானது என்ற நம்பிக்கையில் மொழியானது புதிர் வயப்பட்டதாக மாறுகின்றது. இந்நிலையில் சொல் பற்றிய அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகின்றது. ‘சொல் என்பது எழுத்தோடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை’ என்று உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுவது பண்டைத் தமிழரின் இலக்கணப் புலமைக்குச் சான்றாகும். சொல்லின் இலக்கணத்தினை விளக்குவதை விட, சொல்லை இலக்கண முறைமையில் வகைப்படுத்துவதையே மரபு வழிப்பட்ட இலக்கண ஆசிரியர்கள் முதன்மையாகக் கருதினர்.

    சொல்லின் தன்மையை மொழியிலாளர் வரையறுக்க முயன்றுள்ளனர்.

    ''மரபு வழியில் ஒழுங்கமைக்கப்பட்ட வேர்ச் சொற்களின் தொகுதி'' எனவும், ''பொருளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பொருள்களின் மிக அடிப்படையான கூறு'' எனவும் அமைப்பியல் அடிப்படையில் மரியா பை விளக்கியுள்ளார்.

    சொல் என்பதற்கு ''சிந்தனைக்கும் பொருளுக்கும் அடிப்படையான, தனித்தியங்கும் கூறு'' என்றும், ''உருபனியலுக்கும், தொடரியலுக்கும் இடையே அமையும் வேறுபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவதே சொல்'' என்றும், ''சொல் பிரிக்கப்படாத ஒன்று'' என்றும் பல்வேறு விளக்கங்கள் மொழியியல் நோக்கில் தரப்பட்டுள்ளன. எனினும் "எல்லா மொழிகளுக்கும் பொதுவாக அமையும் வகையில், சொல் என்றால் என்னவென்று உறுதியாக வரையறுக்க இயலவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகத் தான் சொல்லினை வரையறை செய்யவேண்டும்" என்று வெலரி ஆம்சு குறிப்பிடுவது ஏற்புடையதாக உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 13:15:24(இந்திய நேரம்)