தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாக்க மூலங்கள்

  • 2.1 சொல்லாக்க மூலங்கள்

    சொல்லாக்கம் என்பது ஒரு மொழியின் மரபையறிந்து, தேவைப்படின் மரபை மீறியும், ஏற்கெனவே உள்ள சொல்லைத் திருத்தியோ, புதுக்கியோ புதுச்சொல்லாக உருவாக்குதல் என்று வரையறுக்கலாம். இன்றைய அறிவியல் தொழில் நுட்பமும் பல்வேறு துறைகளும் நாளும் வளர்ந்து வரும் சூழலில், அளவிட இயலாதவாறு புதிய சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடியான சூழல், தமிழில் சொல்லாக்க முயற்சியில் முனைந்திருப்பவர்களுக்குச் சவாலாக உள்ளது. தகவல் வெள்ளத்தில் பெருகிவரும் பல்துறைத் தகவல்களுக்கேற்ப, சொல்லாக்கத்தில் தொடர்ந்து செயற்படும் வல்லுநர்கள், சொற்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். சொற்களின் மூலங்கள் எப்படி அமைந்துள்ளன என்ற புரிதல் சொல்லாக்கத்தினை நுட்பமாகச் செய்திட உதவும்.

    2.1.1 சொற்களும் சமுதாயப் பின்புலமும்

    சமுதாய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மொழிப் பயன்பாட்டிலும் ஒரே மொழி வழங்கும் வட்டாரத்திற்குள்ளும் வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சாதி, சமயம், பால், கல்வி, வயது, வருமானம் போன்றன மொழி வழக்குகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். இளைய தலைமுறையினரின் பேச்சுமொழியும் முதியோரின் பேச்சுமொழியும் வேறுபடுகின்றன; ஒரே சாதியினர் அதிகமாக வாழும் புவியியல் பகுதியில் ஒரு விதமான மொழிவழக்கு உள்ளது. இத்தகைய மொழிப் பயன்பாட்டுச் சூழலினை, சிறப்புச் சூழல், இயல்புச் சூழல், அறிவியல் தொழில்நுட்பச் சூழல் போன்ற வகைகளில் பகுக்கலாம்.

    எழுத்து அல்லது இலக்கிய வழக்கு என்பது பெரும்பாலும் சிறப்புச் சூழலில் பயன்படுவதாகும். தமிழ் போன்று இருநிலைத் தன்மையுடைய மொழிகளில் சிறப்புச் சூழல் என்பது பெரும்பாலும் உயர் வழக்காகவே இருக்கும். ஊடகங்கள் மூலம் முன்னிறுத்தப்படும் தமிழானது பொதுமைத் தன்மையுடையதாக ஏற்கப்படும் சூழல் நிலவும். வகுப்பறை, மேடைப்பேச்சு, நீதிமன்றம் போன்றவற்றில் சிறப்புச் சூழலுக்கேற்ப மொழி கையாளப்படும்.

    இயல்புச் சூழல் என்பது குடும்பம், நட்பு வட்டாரம், கடை வீதி உள்படப் பொது இடங்களில் நிலவும் மொழிப் பயன்பாட்டினைக் குறிக்கும். இங்குப் பெரும்பாலும் பேச்சு வழக்கே முன்னிலைப்படுத்தப்படும்.

    அறிவியல் தொழில்நுட்பச் சூழலில் பயன்படும் மொழி வழக்கில் கருத்தினைப் புலப்படுத்தும் நடைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

    இம்மூன்று சூழல்களிலிருந்தும் சொற்கள் எவ்வாறு மக்களால் வழங்கப்படுகின்றன என்பது முக்கியம். சொல் பற்றிய விழிப்புணர்வுடன், சொல்லின் மூலங்களை நுட்பமாகக் கண்டறிய முயலும் ஆய்வாளர் சொல் பயன்படுத்தப்படும் சமுதாயப் பின்புலம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் பொருண்மை நிலையில் ஒரே சொல் வெவ்வேறு அர்த்தங்களைத் தாங்கி வருவதனைப் புரிந்து கொள்ளவியலும். மேலும் சொல் சேகரிப்பு மூலங்களாக விளங்கும் மக்களின் வாழ்க்கைப் பின்புலத்தினை அறிந்து கொள்வதன் மூலம் மக்களுக்கும் சொல்லுக்குமான உறவினை அறிய முடியும்.

    2.1.2 சொல் வகைகள்

    தமிழில் உள்ள சொற்களை வகைப்படுத்தி அறிந்து கொள்வது இன்றியமையாதது. தமிழ்ச் சொற்களைப் பின்வரும் ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    (1) பெயர்ச்சொல்
    (2) வினைச்சொல்
    (3) பெயரடை
    (4) வினையடை
    (5) இடைச்சொல்

    சொற்கள் இணையும் போது தொடர்கள் உண்டாகின்றன. பொருள் தரும் நிலையிலும் சொற்கள் இணையலாம். தமிழ் இலக்கண மரபில் சொல்லின் இலக்கணத்தை அறிந்து கொண்டால்தான் சொல்லாக்க முயற்சியில் ஈடுபடுவது எளிதாகும்.

    தமிழ்மொழி வேர்ச்சொற்கள் செறிந்தது. அவற்றில் திரிபு, கூட்டு, மாற்றங்கள் செய்வதன் மூலம் புதிய சொற்களை உருவாக்க முடியும். பண்டைத் தமிழ் இன்று வழக்கில் இல்லை. எழுத்து, சொல், தொடர், பொருள் கொள்ளுதல் எனப் பல்வேறு நிலைகளில் பல மாறுதல்களுக்கு உட்பட்டதாக இன்றைய தமிழ் மாறியுள்ளது. எனவே சொல்லாக்கமும் மாறிவரும் சூழலுக்கேற்பப் புதிய போக்குகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 15:09:29(இந்திய நேரம்)