தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1 சொல்லாக்கத்தின் தேவை

  • 6.1 சொல்லாக்கத்தின் தேவை

    அறிவியல் தொழில்நுட்பச் சொற்களைத் தமிழில் உருவாக்குவதற்கான முயற்சிகள் பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தமிழர்கள் உலக அளவில் பெரும் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் ஈடுபடவில்லை. மேலை நாட்டாரின் முயற்சி காரணமாகக் கண்டறியப்பட்ட அறிவியல் நுட்பங்கள் ஆங்கிலம், ஜெர்மன், ரஷியன் போன்ற மொழிகளிலேயே உள்ளன. பல்வேறு அறிவியல் துறைகளில் ‘டன்’ கணக்கில் வாரந்தோறும் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்துக் காண்பதே சிரமமான செயலாக உள்ளது. தமிழிலோ, அறிவியல் நூற்கள் / ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடோ மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. அதுவும் நகலெடுப்பது என்ற நிலையில் மொழிபெயர்ப்பினை மட்டும் நம்பும் நிலை. தமிழில் அசலாக எழுதும் ஆய்வறிஞர்கள், ஆய்வாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலை நாட்டு மொழிகளில் வெளியாகும் ஆய்வுகள் போன்று தமிழிலும் வெளியாவதற்கான சூழல் எதுவும் இல்லை. இந்நிலையில் மேலைநாட்டார் தம் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கிய பெயர்களைத் தமிழில் சொல்லாக்கமாக்குவது ஏற்புடையதன்று என்று சிலர் கருதுகின்றனர். அறிவியல் தமிழ் இன்று வளர்ச்சி குன்றியிருப்பினும், மாறிவரும் புதிய சூழலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கு அடிப்படையான சொல்லாக்க முயற்சியில் ஈடுபட வேண்டுமெனப் பலர் குரலெழுப்புகின்றனர். இரு வேறுபட்ட முரணான கருத்துகள் இருப்பினும் ஒவ்வொரு மொழியின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கும் சொல்லாக்கம் தேவையானது என்ற மொழியியலாளரின் கருத்து ஏற்புடையதாகும்.

    6.1.1 சொல்லாக்க முயற்சிகள்

    அறிவியலாளர்களைப் பொறுத்தவரையில் கருத்தினை வெளிப்படுத்துவதற்குரிய கருவியான மொழியானது இரண்டாம் நிலையினதாகக் கருதப்படுகிறது. மூல மொழியில் உள்ள அறிவியல் கலைச் சொற்களை, அப்படியே ஒலிப்பெயர்ப்பாகத் தமிழாக்கிக் கொள்வதே பொருத்தமானது என்று சிலர் வாதிடுகின்றனர். மேலும் இன்று அறிவியல் ரீதியில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சியினைத் தமிழில் கொண்டு வருவதற்கு, சொல்லாக்கம் தடையாக உள்ளது. உலக அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தமிழில் கொண்டுவர வேண்டுமெனில், அறிவியல் மூலச் சொற்களை அப்படியே தமிழாக்குவது உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

    மேற்குறிப்பிட்ட வாதங்களில் ஏற்புடைய உண்மை உள்ளது. எனவே அவற்றை முழுக்கப் புறக்கணிக்கவோ அல்லது அப்படியே ஏற்றிடவோ இயலாது. எனினும் தமிழில் தொடர்ந்து அறிவியல் ஆவணங்கள் வெளியாகும்போது, சொல்லாக்க முயற்சிகளின் விளைவாக, நாளடைவில் அறிவியல் தமிழ் வளம் பெறும்.

    சொல்லாக்க முயற்சியைப் பொறுத்தவரையில் தமிழில் பின்வரும் வழிகளில் முயற்சி மேற்கொள்ளலாம்.

    1)
    அறிவியல் கருத்துகளை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சற்று விரிவான முறையில் சொல்லாக்கம் செய்தல். இம் முயற்சியில் கருத்துக்கு முதன்மையிடம் தரப்படும். இந்நிலையில் உருவாக்கப்படும் சொல்லாக்கம் எதிர்காலத்தில் மாற்றம் பெறக் கூடியது.

    2)
    சுருக்கமாகவும் சொற்செறிவுடனும் அறிவியல் கருத்தினை நுட்பமாக விளக்குவதாகவும் சொல்லாக்கம் அமைதல். இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் துறை சார்ந்த அறிஞர்களுக்கே புலப்படும். இவை நிலைபெறுந் தன்மையுடையனவாகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 13:24:38(இந்திய நேரம்)