Primary tabs
-
P20232 சமணத் தமிழ்க் காப்பியங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சமணத் தமிழ்க் காப்பியங்கள் எவையெவை என்பதை இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.
ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவையும் பெருங்கதை என்ற கொங்குவேள் மாக்கதையும் சமணசமயக் கோட்பாடுகளை உணர்த்தும் விதங்களைக் குறிப்பிடுகிறது.
சமணம் மேற்கூறிய காப்பியங்களைத் தந்ததின் வாயிலாகத் தமிழ்மொழி வளமடைந்த தன்மையும் சமணச் சான்றோர் சில இலக்கிய வகைகளுக்கு முன்னோடிகளாய் அமைந்து பாதை யமைத்துத் தந்தமையும் விரித்துரைக்கப்படுகிறது.
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தையும் சமணரே தந்தார்கள். ஆயினும் சில முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.
சமணக் காப்பியங்கள் அனைத்திலும் நிலையாமைக் கோட்பாடும், அறமே விழுத்துணையாவதால் அதை இடையறாது செய்ய வேண்டும் என்ற கருத்தும், எல்லாவற்றுக்கும் மேலாகக் கொல்லாமைக் கோட்பாடும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தைப் படிப்பதால் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:
காப்பியங்கள் பலவற்றைத் தமிழுக்கு அளித்த பெருமை சமணச் சான்றோர்களைச் சாரும் என்பதை அடையாளம் காணலாம்.
குடிமக்களைப் பற்றிப் பேசும் காப்பியம் தமிழில் முதன்முதலில் தோன்றியதை இனங்காணலாம்.
சமய உணர்வைக் காப்பியங்கள் வழி மக்களுக்கு உணர்த்திய சமணச் சான்றோரின் சமய ஈடுபாட்டை எடுத்துக்காட்டலாம்.
வடமொழியிலிருந்து கதைகளைப் பெற்றுக் கொண்டாலும் தமிழகப் பண்பாட்டிற்கு ஏற்ப அவை கூறப்பட்டிருப்பதைத் தொகுத்துக் கொள்ளலாம்.
பெருங்காப்பியங்களுள் மூன்றையும் சிறுகாப்பியங்கள் ஐந்தையும் சமணர் தந்துள்ளதை இனம் கண்டு பட்டியலிடலாம்.
காப்பியங்கள் மக்களைப் பற்றியதோ மன்னனைப் பற்றியதோ எதுவாக இருந்தாலும் முறையாக உலக இன்பத்தை அனுபவித்த பின் எல்லாவற்றையும் துறந்து, தவம் செய்ய வேண்டும் என்பதைச் சமணக் காப்பியங்கள் வலியுறுத்துவதைத் தெளிவாகக் காணலாம்.