தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவல்

  • 2.1 நாவல்

    கதை கூறும் இலக்கிய வகையுள் ஒன்றாக நாவல் அல்லது புதினம் விளங்குகின்றது. பெரிய கதை ஒன்றினை உரைநடையில் கூறும் இலக்கியமாக இது அமையும்.

    இடைக்காலத்தில் ஐரோப்பாவில் வீரர்களின் வீரதீரச் செயல்களையும், அவர்களின் காதலையும் கூறும் கதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால் இக்கதைகளும் கவிதை வடிவிலேயே தோன்றின. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலிக் கலைஞர்கள் நூவேல் என்னும் பெயர் கொண்ட பல கதைக் கொத்துக்களை வெளியிட்டனர். இவை கவிதை வடிவில் வெளிவந்தவை. பிற்காலத்தில் உரைநடையின் வாயிலாகக் கதை சொல்லும் மரபு ஏற்பட்டதும் இதுவே நாவல் எனும் புதிய இலக்கிய வகை தோன்றப் பின்புலமாக அமைந்தது என்பர்.

    இத்தாலியில் தொடக்கத்தில் நாவல்லா (Novella) என்று அழைக்கப்பட்டதே, பின்னர், நாவல் என்று அழைக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆங்கில இலக்கிய அகராதி கூறுகிறது. மேலும் அந்த அகராதி, உரைநடையில் கதை கூறுவதே நாவல் என்றும் கூறுகிறது. கிளாரா ரீவி என்பவர் எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ்க்கையினையும், வாழ்வின் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியம்தான் நாவல் என்று கூறுகிறார். ‘குறிப்பிடத்தக்க ஒரு செய்தியைப் பற்றியதாகவும், மாந்தர்களையும் ஆழ்ந்த நோக்கினையும் அடித்தளமாக உடையதாகவும் உரைநடையில் அமைகின்ற புனைகதை தான் நாவல்’ என்று, சேம்பர் கலைக்களஞ்சியம் (Chamber's Encyclopedia) கூறுகின்றது.

    உரைநடையில் அமைந்த, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட கதையே நாவல் என்றும், அது படிப்பவர்களை ஒரு கற்பனையான உண்மை உலகிற்கு அழைத்துச் செல்கிறது என்றும், படைப்பாளன் உருவாக்கியதால் அந்த உலகம் புதியது என்றும் காதரீன் லீவர் தம்முடைய நாவலும் படிப்பாளியும் என்ற நூலில் கூறுகிறார்.

    தமிழில் முதன் முதலில் நாவல் முயற்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்களும் நாவல் பற்றிய தத்தம் கருத்துகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய தூ.வி.சேஷய்யங்கார் தம் நாவல் முன்னுரையில் ‘இது பொய்ப் பெயர்ப் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ என்று குறிப்பிடுகின்றார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம்முடைய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலின் முன்னுரையில் நாவலை வசன காவியம் (Prosaic Epic) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.

    ஆர்.எஸ்.நாராயணசாமி அய்யர் தாம் எழுதிய மாலினி மாதவம் என்ற நாவலின் முன்னுரையில் நாவல் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்:

    ‘இனிய இயல்பான நடையில், சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம், பிரகிருதியின் இயற்கை அமைப்பையும், அழகையும், அற்புதங்களையும், ஜனசமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ (Thought), வாக்கு (Words), காயம் (Deeds) என்னும் திரிகரணங்களாலும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்யட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதி பிம்பித்துக் காட்டுவதே நாவல் எனப்படும்.’

    ஒரு நல்ல நாவல்தான், நாவல் பற்றி நமக்கு எடுத்துக் கூறும் ஆற்றலும், தன்மையும் உடையதாகும்.

    நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புதுமை என்ற பொருள் இருந்ததால் நாவல் இலக்கியப் பெயரினைத் தமிழில் கூறத் தமிழறிஞர் சிலர் புதினம் என்ற சொல்லை உருவாக்கிப் பயன்பாட்டில் வைத்தனர். ஆயினும் நாவல் என்ற பெயரே தமிழிலும் பயன்பாட்டில் இன்றும் நின்று நிலவுகின்றது.

    எனவே, நாவல் என்பது

    1)
    உரைநடையில் எழுதப்படும் ஒரு படைப்பிலக்கியம்.
    2)
    ஒரு பெருங்கதையை விவரமாக எடுத்துக் கூறும் இலக்கியம்.
    3)
    வாழ்வியலைக் கூறுவது.
    4)

    பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவோ, செயல்பாடுகள் மூலமாகவோ கதை ஓட்டம் நிகழ்த்தப் பெறும் இலக்கியம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:31:36(இந்திய நேரம்)