தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உலக நாவல்கள்

  • 2.4 உலக நாவல்கள்

    உலக முழுதும் ஏற்பட்ட அச்சுத் தொழில் புரட்சி, கல்வி அனைத்து மக்களுக்கும் பரவலாக்கப்பட்ட நிலை, நடுத்தர வர்க்கத்தினரின் விழிப்புணர்வு, மனிதகுலத்தில் எழுந்த சீர்திருத்தங்கள் அனைத்துமே நாவல் என்ற புதிய இலக்கிய வடிவம் தோன்றி வளரக் காரணமாயின.

    மேலை நாடுகளில் ஐரோப்பிய நாடுகள்தாம் நாவல் இலக்கிய வரலாற்றில் முன்னோடியாகத் திகழ்கின்றன. இங்கிலாந்து, முதல் நாவலை வெளியிட்டுப் பெருமை பெற்றது.

  • முதல் நாவல்
  • சாமுவேல் ரிச்சர்ட்சன் 1740ஆம் ஆண்டில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டார். அக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட கற்பனைக் காதல் கடிதங்கள் முறையில் அமைந்த நூல் ஒன்றினை எழுதினார். அது புதுமையாகவும், வாசகர்களால் விரும்பப் பட்டதாகவும் அமைந்தது. அந்நூலுக்கு ரிச்சர்ட்சன் வைத்த பெயர் பமிலா. அந்நூலின் புது மரபைப் பார்த்தவர்கள் நாவல் என்று கூறத் தொடங்கினர். அதே முறையில் பல எழுத்தாளர்கள் இம் முயற்சியில் ஈடுபட நாவல் என்னும் இலக்கிய மரபு வளரத் தொடங்கியது.

  • நாவலில் அங்கதம் (Satire)
  • அதே காலச் சூழலில் தோன்றிய பீல்டிங் என்பார் ஆங்கில நாவல் உலகில் மேலும் ஒரு புரட்சி செய்தார். அங்கதச் சுவையுடைய ஒரு நாவலை எழுதினார். 1740இல் அனைவரும் பமிலா நாவல் பற்றியே பேசிக் கொண்டிருந்த சூழல் பீல்டிங்கிற்கு வியப்பாக இருந்தது. டாம் ஜோன்சின் வரலாறு என்ற பெரிய நாவலை அங்கதச் சுவையுடன் எழுத இதுவே காரணமாயிற்று. இந்நாவலில் மிக அதிகமான கதைமாந்தர்கள் இடம் பெற்றனர். 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தினை இக்கதை படம் பிடித்துக் காட்டிற்று. இவர் அமலியா என்ற நாவலையும் எழுதினார்.

  • பிற நாவல்கள்
  • தாமஸ் ஸ்மோலட் என்பவர் ஆறு நாவல்கள் எழுதி, நாவல் இலக்கியத்தை விரிவடையச் செய்தார்.

    இதே காலச் சூழலில் பிரேவோ பாதிரியார் என்பவர் மானோன் லெஸ்க்கோ என்ற பிரெஞ்சு நாவலை எழுதினார். இது ஒரு கீழ்நிலைப் பெண்ணின் மீது காதல் பித்துக் கொண்ட இளைஞனின் வாழ்க்கைச் சீரழிவை விவரிக்கிறது. இது, காதலால் அழியும் இளைஞனின் கதை. இது வெற்றி பெற்ற ஒரு நாவலாகும்.

    தீதரோ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் வரலாறு, தத்துவம், நாவல் எனப் பல துறைகளில் புகழ் பெற்றார். அவரது ரமோவின் மருமகன் உலகப் புகழ் பெற்றது. அந்நூலை ஜெர்மன் மொழியில் கெதே மொழிபெயர்த்தார்.

    ரூசோவும் நாவல் துறையில் ஈடுபட்டார். புது எலோரஸ் என்ற காதல் நாவலை எழுதினார். எலோ ஈசு, தனக்குக் கல்வி கற்பித்த பாதிரியாரைக் காதலிக்கிறாள். காதலுக்குப் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இருவரும் மறைமுகமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்ற தமது கருத்தை ரூசோ நாவலில் வலியுறுத்துகின்றார்.

    உலகில் நாவல்கள் தோன்றி வளர்ந்த சூழலில் இந்திய மொழிகளான இந்தி, வங்காளம், மராட்டியம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற மொழிகளும் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக்குத் தத்தம் பங்களிப்பைச் செய்தன.

    இந்திய மொழிகளில் நாவல் இலக்கியம் மிகச் சிறப்பாக வளர்ந்தோங்கியது. வங்காள மொழியில் பங்கிம் சந்திரர் எழுதிய துர்க்கேச நந்தினிதான் இந்தியாவின் முதல் நாவல். பங்கிம் சந்திரர், இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திர சட்டர்ஜி போன்றோர் வங்க நாவலைச் சமூகச் சிந்தனையோடும், நாட்டுப் பற்றுடனும் வளர்த்தனர்.

    இரவீந்திரநாத் தாகூர்

    மலையாளத்தில் முதல் நாவலாசிரியர் ஓ.சந்து மேனன். பின்னர், வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை போன்றோர் மலையாள நாவலுலகில் புகழ் பெற்றவர்கள். தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன், ஏணிப்படிகள் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.

    மராட்டியத்தில் காண்டேகர் எழுதிய நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் புகழ் பெற்றவை. பகிர்மோகன் சேனாதிபதி ஒரியா மொழியில் முதல் நாவலாசிரியர். அஸ்ஸாமியில் பெஸ் பருவா, பிரேந்திரகுமார் பட்டாச்சாரியா போன்றவர்களும் புகழ்பெற்றவர்கள்.

    பல்வேறு மொழிகளில் நாவல்களின் தோற்றம் நிகழ்ந்த காலச் சூழலில் ஆங்கிலக் கல்வி கற்ற தமிழ்ப் படைப்பாளிகள் நாவல் துறையில் ஈடுபட விரும்பினர். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டார். அவர் 1879இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், 1887இல் எழுதிய சுகுண சுந்தரி சரித்திரம் என்னும் இரண்டு நாவல்களும் மிகப் புகழ் பெற்றன. தமிழிலக்கியத்தில் உரைநடை வகையைப் பின்பற்றிப் புதிய துறையாகிய நாவல் துறைக்குத் தொடக்கம் செய்தார். வேதநாயகம் பிள்ளை தம்முடைய படைப்பை வசன காவியம் (Prosaic Epic) எனக் கூறினார். பிரதாப முதலியார் சரித்திரத்தில் கதைமாந்தர் வாயிலாக வசன காவியத்தின் சிறப்புகளைக் கூறுகிறார். வசன காவியம் என்று கூறப்படுகின்ற நாவலின் மூலமாகவே மக்களைத் திருத்த முடியும் என்றும், செய்யுட்களின் வாயிலாக இயலாது என்றும் கூறுகிறார்.



    1.

    தமிழில் செய்யுள் வடிவில் கதை கூறும் இலக்கியங்கள் சிலவற்றைக் கூறுக.

    2.
    நாவல் என்ற சொல் தோன்றிய முறை கூறுக.
    3.
    நாவலின் வகைகள் எவையேனும் ஐந்தினைக் கூறுக.
    4.
    உலக நாவலாசிரியர் இருவர் பெயர் கூறுக.
    5.
    இந்தியாவில் முதல் நாவல் எது? எழுதியவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 16:31:00(இந்திய நேரம்)