தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் நாவல்கள் - நேற்றும் இன்றும்

  • 2.5 தமிழ் நாவல்கள் - நேற்றும் இன்றும்

    தொடக்க காலத்தில் தமிழில் தோன்றிய நாவல்களைப் பற்றியும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நாவல்கள் பற்றியும் தற்கால நாவல்கள் பற்றியும் அறியலாம்.

    வேதநாயகம் பிள்ளையை அடுத்து நடேச சாஸ்திரியார் கோமளம் குமரியானது என்ற நாவலை எழுதினார். கோமளம் குமரியானது அற்புத நவிற்சிக் கதையாகும். நடப்பியலை நாவலாக எழுதத் தமிழில் முதன் முதலில் முயன்றவர் ராஜம் அய்யர். இவர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது. விவேக சிந்தாமணியில் தொடர்கதையாக வெளிவந்தது. 19ஆம் நூற்றாண்டில் தமிழக மக்களின் வாழ்வியற் சூழலை இந்நாவல் பதிவு செய்துள்ளது. சிற்றூர் வாழ்க்கையும், மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் விளக்கப்பட்டுள்ளன.

    ராஜம் ஐயரை அடுத்து அ.மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் மிகத் தொன்மையான கதைமாந்தர் படைப்பைக் கொண்டது. அந்நாவலில் அவரின் சமூகச் சீர்திருத்த எண்ணங்கள் வெளிப்படு கின்றன. அ.மாதவய்யா விஜய மார்த்தாண்டம், முத்து மீனாட்சி என்னும் நாவல்களையும் எழுதியுள்ளார். விஜய மார்த்தாண்டம் மறவர் சமுதாய வாழ்க்கையை வெளிப்படுத்துவது. முத்து மீனாட்சி ஓர் இளம் விதவையின் துன்பத்தை வெளிப்படுத்திய நாவலாகும்.

    அ.மாதவய்யாவிற்குப் பிறகு தமிழ் நாவல் துறை வேறுவழியில் போகத் தொடங்கியது. பல வெளிநாட்டுத் துப்பறியும் நாவல்களைப் படித்து அவற்றைப் போலவே தமிழில் எழுத விழைந்த நாவலாசிரியர்கள் தோன்றினர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கோதை நாயகி அம்மையார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்றோர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.

    இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், கிராம முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட கே.எஸ்.வெங்கடரமணியால் முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் ஆகியவை எழுதப்பட்டன.

  • கல்கியின் பங்களிப்பு
  • தமிழில் நகைச்சுவையுடன் ஆனந்தவிகடனில் கட்டுரைகள் எழுதிவந்த சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழில் முன்னோடிப் பத்திரிக்கையாளருமான பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி வரலாற்று நாவல்களைத் தமிழில் எழுதத் தொடங்கினார். பல்லவர் கால வரலாற்று நிகழ்வுகளைப் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்ற நாவல்களாக எழுதினார். பிற்காலச் சோழருள் புகழ்பெற்றவனாகிய இராசராச சோழன் வரலாற்றைப் பொன்னியின் செல்வன் என்ற மிகப் பெரும் நாவலாக எழுதினார். இவை தமிழில் வாசகர் வட்டத்தை மிகுதியும் அதிகப்படுத்தின. நாவல் படிக்கும் பழக்கத்தைச் சாதாரண மக்களிடம் கொண்டு சென்றதில் கல்கிக்குப் பெரும் பங்கு உண்டு. சமகால வரலாற்றைத் தியாகபூமி, மகுடபதி, அலையோசை ஆகிய நாவல்களாக எழுதினார்.

  • நாரண துரைக்கண்ணனின் பங்களிப்பு
  • கல்கியைத் தொடர்ந்து சமகால வரலாற்றை, சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் இயற்றியவர் நாரண துரைக்கண்ணன். அவரின் தியாகத் தழும்பு மிகவும் போற்றத் தக்க நாவலாகும்.

  • அகிலனின் பங்களிப்பு
  • அகிலன் தமிழ் நாவல் உலகில் அடுத்த காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவருள் ஒருவர். அவரின் பாவை விளக்கு மனிதனின் உள் மனப் போராட்டங்களை விவரிக்கிறது. அவரின் சித்திரப்பாவை நாகரிகத்தின் குழப்பத்தையும், பணத்தால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களையும் கூறுகிறது. தமிழில் ஞானபீட விருது பெற்றது இந்நாவலாகும். அகிலனின் பால்மரக் காட்டினிலே மலேசிய ரப்பர்த் தோட்டத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிப்படுத்துகிறது.

    வரலாற்று நாவல்களைப் படைப்பதிலும் அகிலன் முன்னிற்கிறார். இவரின் வேங்கையின் மைந்தன் சோழப் பேரரசு வரலாற்றைக் கூற, கயல்விழி பாண்டியர் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. விஜய நகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்டது அவரது வெற்றித் திருநகர்.

  • பிறரின் பங்களிப்பு
  • கோவி.மணிசேகரன் தமிழில்  பல்வேறு   வரலாற்று நாவல்களையும், சமூக நாவல்களையும் படைத்தவர். அவர் எழுதிய பீலிவளை, செம்பியன் செல்வி போன்றவை புகழ் பெற்றவை.

    சாண்டில்யன் தமிழ் வரலாற்று நாவல் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். தமிழில் வரலாற்றுத் தொடர்கதைகளாக யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், ஜீவபூமி, கன்னிமாடம், பல்லவ திலகம் போன்ற நாவல்களை எழுதிப் புகழ் பெற்றார்.

    நந்திபுரத்து நாயகி என்ற பெயரில் எழுத்தாளர் விக்ரமன் ஒரு வரலாற்று நாவலை எழுதினார். ஜெகசிற்பியன் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை, அருள்மொழி நங்கை, திருச்சிற்றம்பலம் முதலிய நாவல்களை வரலாற்று அடிப்படையில் எழுதினார். அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி மிகச் சிறந்த வரலாற்று நாவல்.

    சமூக நாவலாசிரியர்களில் மிகவும் சிறப்பாகப் போற்றப்பட்டவர் பேரா.மு.வரதராசனார். அவரின் நாவல்கள் ஐம்பதுகளில் கல்லூரி மாணவர்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பினைக் கொண்டிருந்தன. அவரின் கள்ளோ காவியமோ, கரித்துண்டு, கயமை, அகல் விளக்கு, நெஞ்சில் ஒரு முள் போன்றவை மிகச் சிறப்பு வாய்ந்தவை.

    குடும்பச் சூழலைக் கொண்டு நாவல்களைப் படைப்பதில் பி.எம்.கண்ணன், ஆர்.வி., மாயாவி, அநுத்தமா போன்றோர் சிறந்து விளங்கினர். விந்தனின் பாலும் பாவையும் மிகச் சிறந்த சமூக நாவலாகப் போற்றப்படுகிறது.

    தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்கள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நாவல்களில் முக்கியமானவை. எம்.வி.வெங்கட்ராம் கும்பகோணம் சௌராட்டிர இனமக்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய வேள்வித் தீ என்ற நாவல் தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று. அவர் எழுதிய அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், நித்திய கன்னி ஆகியவையும் போற்றத் தகுந்த நாவல்களாகும்.

    நா.பார்த்தசாரதி சமுதாயக் கேடுகளை அச்சமின்றித் தம் நாவலில் சுட்டிக் காட்டியவர். அவருடைய குறிஞ்சிமலர், பொன் விலங்கு ஆகியவை மிகச் சிறந்த சமூக நாவல்களாகப் போற்றப்படுகின்றன. பாண்டிமா தேவி, மணிபல்லவம் என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார்.

    கு.ராசவேலுவின் 1942 எனும் நாவல் விடுதலைப் போராட்டச் செய்திகளைக் கூறும் நாவலாகும். தமிழில் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்த கலைஞர் மு.கருணாநிதி வரலாற்று நாவல்களை இலக்கிய நடையில் எழுதியுள்ளார். அவரின் ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் ஆகிய வரலாற்று நாவல்கள் புகழ் பெற்றவை.

    வீடும் வெளியும் என்ற நாவலைப் படைத்த வல்லிக்கண்ணன், மண்ணில் தெரியுது வானம் எழுதிய ந.சிதம்பர சுப்பிரமணியன், கல்லுக்குள் ஈரம் எழுதிய ர.சு.நல்ல பெருமாள், இன்ப உலகம் வழங்கிய சங்கரராம், தந்திர பூமி எழுதிய இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் தமிழ் நாவல் உலகிற்கு மாபெரும் தொண்டாற்றி உள்ளனர்.

    ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சுந்தர காண்டம், ஜய ஜய சங்கர போன்ற நாவல்கள் தமிழில் மிகவும் போற்றப்பட்டவை ஆகும்.

    பொன்னீலனின் புதிய தரிசனங்கள், பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், மகாநதி ஆகியவை புகழ்பெற்ற நாவல்களாகும்.

    சு.சமுத்திரத்தின் ஊருக்குள் புரட்சி, சோற்றுப் பட்டாளம் போன்றவை சிறந்த நாவல்கள். பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, ரமணிச் சந்திரன் போன்றோர் தமிழ் நாவல் உலகில் சமீப காலத்தில் சாதனை படைத்தவர்கள். இவர்களின் நாவல்களில் பெண் அடிமைத்தனம் பற்றியும், அவற்றைத் தகர்த்து எறியும் தன்மை பற்றியும் நாம் அறிய முடியும்.

    தமிழ் நாவல் வளர்ச்சியில் இலங்கை, மலேயா போன்ற பிற நாட்டு எழுத்தாளர்களின் பங்கும் மிகுதியாக உண்டு. தி.த.சரவண முத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கியும், சீ.வை.சின்னப்பா பிள்ளை எழுதிய வீரசிங்கன் கதையும் தொடக்க காலத் தமிழ் நாவல்களாகும்.

    டானியல் எழுதிய நெடுந்தூரம் என்ற நாவலும் தமிழில் குறிப்பிடத்தக்கது. செ.யோகநாதன் எழுதிய இரவல் தாய்நாடு, செ.கணேசலிங்கத்தின் செவ்வானம், நீண்ட பயணம், சடங்கு போன்ற நாவல்கள் சாதியப் பிரச்சனைகளை முன்வைக்கின்றன.

    தற்காலத் தமிழ் நாவல்கள் பின் நவீனத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெரிதும் படைக்கப்படுகின்றன. நாவல் படைப்பாளிகள் பழைய முறைகளில் கதைகளைச் சொல்லாமல் கதைகளில் மிக ஆழமான செய்திகளையும், யதார்த்தமான நிகழ்வுகளையும் சொல்லுகின்றனர்.

    தற்கால நாவலாசிரியர்களில் தனித்தன்மை பெற்று நிற்பவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் உபபாண்டவம் நாவல்தான் தமிழ் உலகிற்கு அவரை மிகச் சிறந்த நாவலாசிரியராக அடையாளம் காட்டிற்று.

    நாவலுக்கு இதிகாசக் கதையைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிய முறை அல்ல. பல எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஓர் உத்திதான். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் மகாபாரதக் கதையையும், நடப்பியல் கால நிகழ்வையும் ஒருங்கிணைத்து இந்நாவலை ஆக்கியுள்ளார். அவரின் நெடுங்குருதி, உறுபசி ஆகிய நாவல்கள் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவை.

    ஜெயமோகன், தமிழில் புதுமுயற்சிகளில் ஈடுபட்டு, கம்பாநதி, ரெயினீஸ் அய்யர் தெரு என்னும் நாவல்களை எழுதினார். கெ.டி.குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு என்பது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றாகும்.

    திலகவதியின் கல்மரம் கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனைகளையும், பாலமுருகனின் சோளகர் தொட்டி மலைவாழ் மக்களின் துன்பியல் வாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிற நவீன நாவல்கள்.

    தமிழ் நாவல்களைப் பொறுத்தவரை 21ஆம் நூற்றாண்டு ஒரு புதிய முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. எஸ்.இராமகிருஷ்ணன் கூறியிருப்பது போல,

    ‘நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. இது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்று சேர்ந்த முயற்சி. அதாவது நாவல் ஒரு இசைக் கோர்வையைப் போலத் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.’

    தமிழ் நாவல் துறை தற்காலத்தில் வளர்ந்து வருகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 16:37:15(இந்திய நேரம்)