தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாத்திரப் பகுப்பு

  • 5.3 பாத்திரப் பகுப்பு

    நாவலில் உள்ள பாத்திரங்களை ஆண், பெண், விலங்கினங்கள் என்று எளிதாகப் பகுத்து நாம் படைத்தாலும், ஆண் பாத்திரத்திற்கென்று சில வரையறைகளும், பெண் பாத்திரங்களுக்கு என்று சில வரையறைகளும், விலங்கினங்களுக்கு என்று சில வரையறைகளும் உண்டு. அவற்றைச் சரியாக உணர்ந்து நாவல் படைத்தால்தான் நாவல் சிறப்படையும்.

    மனிதப் பாத்திரங்களை ஆண், பெண் என்று  பிரிப்பது போல், தேவைப்படும் போது விலங்கினங்களையும் பிரித்துக் கொள்ளலாம். கதையில் ஒரு நாய் தேவைப்படும் போது கதை அமைப்பிற்காக ஆண் நாயா, பெண் நாயா எனப் பிரிக்க வேண்டிய தேவை இருப்பின் பிரித்துக் கொள்ளலாம். இல்லையேல் பொதுவாக நாய் என்றே கூறிவிடலாம்.

    நாவல் எழுதும் ஆசிரியர், ஆணாக இருந்தால் பெண் பாத்திரங்களைப் படைப்பதில் அவருக்குப் பல சிக்கல்கள் உண்டாகும். பெண்களின் உணர்வுகளைப் பெண்ணாக இருந்து உணர்வதைவிட ஆணாக இருந்து உணர்வது மிகக் கடினம். அதே போல் பெண் எழுத்தாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.

    இதனால்தான் நாவல் படைப்பாளிகள் ஆண், பெண், விலங்கினங்கள் தொடர்பான மனோ தத்துவத்தைப் படித்துக் கொள்ள வேண்டும் என்பர். பெண் உணர்வினை ஆண் படைப்பாளியும், ஆண் உணர்வினைப் பெண் படைப்பாளியும் பெறுவதற்குக் கூர்ந்து நோக்கும் அறிவும் தேவை.

    ஆண், பெண் என்ற பகுப்புக்கு அடுத்து, வயது அடிப்படையில் பாத்திரங்களைப் பகுத்து உணர்ந்து படைப்பது பருவப் பகுப்பாகும்.

    1.

    ஐந்து வயதுக்கு உட்பட்டோர் - குழந்தைகள்

    2.

    ஐந்து வயது முதல் பதினைந்து வயது முடிய - சிறுவர், சிறுமிகள்

    3.

    பதினாறு வயது முதல் முப்பத்தைந்து வயது முடிய - இளைஞர்கள், இளம்பெண்கள்.

    4.

    முப்பத்தாறு வயது முதல் ஐம்பது வயது முடிய - நடுத்தர வயதினர்

    5.

    ஐம்பது வயது முதல் - முதியவர்.

    நாவலில் ஓர் இளைஞன் ‘வந்தான்’ என்று எழுத வேண்டுமானால் அவன் வயது பதினாறு வயது முதல் முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும். இதனைக் கவனத்தில் கொண்டுதான் நாவல் எழுத வேண்டும்.

    பாத்திரங்களைப் பகுத்து எழுதும் போது, பாத்திரங்களின் பண்பு முழுமையாக விளங்குமாறு எழுத வேண்டும். பழைய கால நாவல்களில் தமிழ்த் திரைப்படக் கதைத் தலைவனைப் போல் முழு நல்லவனைக் காட்டுவார்கள். ஆனால் தற்போது அவ்வாறு எழுதுவது நாவலின் சுவையைக் குறைப்பதாகவும், எதார்த்தம் இல்லாததாகவும் காணப்படுகிறது. எனவே, பாத்திரங்களைப் பொறுத்த வரை முழு நல்லவனோ, முழுக் கெட்டவனோ இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

    நற்குணம் மிகுந்து கெட்ட குணம் குறைந்து காணப்படுபவனைப் படைப்பதும், கெட்ட குணம் மிகுந்து நற்குணம் குறைந்து காணப்படுபவனைப் படைப்பதும் நாவலை எதார்த்த நிலையில் இருக்குமாறு செய்யும்.

    பாத்திரங்களைப் படைக்கும் போது அறிவு நிலைப்பாத்திரம், உணர்வு நிலைப் பாத்திரம் என்ற வகையில் படைக்கலாம். அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் பாத்திரத்தின் செயல்பாடுகள் அறிவுப் பூர்வமாக இருக்குமாறு படைக்கப்பட வேண்டும். உணர்விற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் பாத்திரத்தின் செயல்பாடுகளில், உணர்வு எழுச்சியின் காரணமாக அறிவை முழுமையாகப் பயன்படுத்தாமல் தவறான செயல்களையே பாத்திரங்கள் செய்யுமாறு படைக்க வேண்டும்.

    இதைப் போலவே, நாவலில் குறிக்கோள் பாத்திரம், (Ideal Character), நடப்பியல் பாத்திரம் (Realistic Character) ஆகியவையும் படைக்கலாம். ஒரு குறிக்கோளை நிறைவேற்றும் செயல்பாடுகளே அப்பாத்திரத்தின் செயல்பாடாக இருக்கும். அப்பாத்திரத்தைக் குறிக்கோள் பாத்திரம் எனக் கூறலாம். பொன்னியின் செல்வன் எனும் நாவலில் வந்தியத் தேவன் சோழப் பேரரசிற்கு எவ்வித இடையூறும் வந்து விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் மட்டுமே செயல்படுவான். அவனைப் போன்று பல்வேறு நாவல்களில் குறிக்கோள் பாத்திரங்களைப் படைப்பர்.

    நடப்பியல் பாத்திரம் என்பது, நாவல்களில் மிகச் சாதாரண மனிதர்களின் பண்புகளைக் கொண்டு, நம்பக்கூடிய முறையில் படைக்கப்படும் பாத்திரமாகும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில் வரும் கங்கா எனும் பாத்திரப் படைப்பை நடப்பியல் பாத்திரத்திற்கு ஒரு சான்றாக நாம் கொள்ளலாம். தற்போது நாவல் படைக்கும் படைப்பாளிகள் பெரும்பாலும் நடப்பியல் பாத்திரங்களையே தார்த்தத்துடன் உருவாக்குகின்றனர்.

    சமூகத்திற்கும், பாத்திரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் பகுப்பு சமூக முறைப் பகுப்பாகும். சமூகத்தின் அனைத்து நிலைகளுக்கும் கட்டுப்படுகின்ற பாத்திரம், சமூகத்திற்கு மாறுபட்டு நடந்து முரண்படுகின்ற பாத்திரம், சமூகத்தினின்றும் ஒதுங்கிச் செல்லும் பாத்திரம் என்று இப்பாத்திரங்களை வகைப்படுத்தலாம்.

    சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, இதனால் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை இயல்பாக ஏற்றுக் கொள்கின்ற மனிதர்களைக் காணுகிறோம். நாவல்களில் வரும் சில பாத்திரங்களும் இத்தன்மை கொண்டவைகளாகப் படைக்கப்படுகின்றன.

    சமூகத்திற்கு முரண்படுகின்ற பாத்திரங்களை நோக்கினால், இம்முரண்பாடு சமூகத்தில் காலம் காலமாக இருக்கும் அவலங்களை எதிர்த்தா, இல்லையேல் சமூக நன்மைகளை எதிர்த்தா என்பதைக் கொண்டே பாத்திரத்தின் பண்பினை உணரலாம்.

    சமூகத்தில் இருந்து ஒதுங்கிச் செல்லும் பாத்திரங்களின் பார்வை, சமுதாயத்தின் பார்வையில் இருந்து மாறுபட்டு இருக்கும். 'நமக்கு என்ன என்ற எண்ணத்தோடு, சமூகத் தீமையை எதிர்த்துப் போராடாமலும், நன்மையை ஆதரிக்காமலும், தம் வேலையைப் பார்த்துச் செல்லும் பாத்திரங்களும் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கிச் செல்லும் பாத்திரங்களே ஆகும்.

    நாவலில் கீழ்க்கண்ட முறையில் பாத்திரங்களைக் கதைக்கேற்ற வகையில் பகுக்கலாம்.

    1.
    தலைமைப் பாத்திரம் அல்லது முதன்மைப் பாத்திரம்
    2.
    இன்றியமையாப் பாத்திரம்
    3.
    துணைப் பாத்திரம்
    4.
    சிறு பாத்திரம்

    தலைமைப் பாத்திரங்களைச் சுற்றியே நாவலின் கதை நடைபெறும். இப்பாத்திரங்கள் பெரும்பாலும் கதைத்தலைவன் தலைவியராக இருப்பர். கதையே இவர்களுக்காகப் படைக்கப் பட்டதுதான். சில நாவல்களில் கதைத்தலைவனின் அடுத்த நிலையில் இருக்கும் பாத்திரம் தலைமைப் பண்பைப் பெற்று விடுவதும் உண்டு. அப்போது யாரைத் தலைமைப் பாத்திரமாகக் கொள்வது என ஐயம் ஏற்படலாம். பொன்னியின் செல்வனின் கதைத் தலைவன் அருள்மொழி வர்மனாகிய இராசராச சோழன் என்றாலும், வந்தியத்தேவன் தான் தலைமைப் பாத்திரம் போல் நாவல் முழுவதும் வலம் வருகின்றான்.

    இன்றியமையாப் பாத்திரங்கள் நாவலின் கதைக்கு மிகவும் இன்றியமையாதவர்கள். இவர்கள் இல்லையேல் கதையில் வளர்ச்சியே இருக்காது. இவர்கள் தலைமைப் பாத்திரங்களுக்கு அடுத்துச் சிறப்புப் பெற்றவராவர். பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர் சகோதரர்கள், ஆழ்வார்க்கடியான் போன்றோர் இத்தன்மையுடையோர்.

    துணைப் பாத்திரங்கள் தலைமைப் பாத்திரங்களுக்குத் துணை நிற்போர் ஆவர். கதையில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தாலும்கூட இவர்களைச் சுற்றிக் கதை நிகழாததால் இவர்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.

    சிறு பாத்திரங்கள் நாவலில் எங்கேனும் ஓரிடத்தில் இடம் பெறுவர். இவர்களின் செயல்பாடுகளும், தோற்றமும் இல்லாவிட்டால் நாவலின் கதைக்கோ, கதைப் பின்னலுக்கோ இடர்ப்பாடு வந்துவிடாது.

    இவ்வாறு பாத்திரப் படைப்புகளை உருவாக்கி நாவலை எழுதும்போது நாவல் நல்ல முறையில் அமைய வழி ஏற்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 13:21:03(இந்திய நேரம்)