தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாத்திரப் படைப்பின் உத்திகளும், முறைகளும்

  • 5.2 பாத்திரப் படைப்பின் உத்திகளும் முறைகளும்

    பாத்திரங்களை உருவாக்குவதில் நாவலாசிரியர் எந்த அளவுக்குத் தனித்தன்மையான திறமை கொண்டிருக்கிறாரோ, அவ்வளவுக்கு நாவல் இலக்கியத்தில் வெற்றி பெறுவதாகக் கொள்ளப்படும்.

    பாத்திரங்களின் சிறப்பு, நாவலாசிரியர் சொல்லுகின்ற முறையில் வெளிப்படும். எனவே, நாவலாசிரியர் பாத்திரங்களைப் படைப்பதில் சில உத்திகளைப் (Techniques) பயன்படுத்துவார்.

  • நேரடி முறையும் நாடக முறையும்
  • பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது ‘நேரடிமுறை’ என்றும், பாத்திரங்களின் செயல்களின் மூலம் நாம் உய்த்தறியுமாறு செய்வது ‘நாடகமுறை’ என்றும் கூறுவார் மா. இராமலிங்கம்.

    ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரையும் கூறி, பாத்திரங்களின் பண்பினையும் விளக்கி ஆசிரியரே நமக்குப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நேரடி முறையை நாவலாசிரியர் சிலர் பின்பற்றுவர். கல்கி, பொன்னியின் செல்வன் எனும் நாவலில் வந்தியத்தேவனைக் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறார்.

    ‘ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள். முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ் பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்’

    இந்த அறிமுகத்தில் வீர நாராயண ஏரிக்கரையில் வாலிபனாகவும், வீரனாகவும், வாணர் குலத்தைச் சேர்ந்தவனாகவும் உள்ள வந்தியத்தேவன் வந்து கொண்டிருக்கிறான் என்று அறிமுகப் படுத்துவதால் நமக்கு முழு அறிமுகம் கிடைக்கிறது.

    நாடக முறையில் பாத்திரப் படைப்பை நாவலாசிரியர் விளக்குவது இல்லை. பாத்திரங்களது நடவடிக்கையாலும், பேச்சாலும், ஏனைய பாத்திரங்களோடு நிகழ்த்தும் உரையாடலாலும் ஏனைய பாத்திரங்கள் அளிக்கும் திறனாய்வாலும் இவர்களை உணரலாம். நெடுங்குருதி எனும் நாவலில் எஸ். ராமகிருஷ்ணன், நாவலின் கதைத் தலைவன் நாகுவிற்கு வயது பதினொன்று என்று கூறுவதுடன் சரி. அவனுடைய பண்பு, அவனைப் பற்றிய பிற செய்திகள் எல்லாம் அவனது நடவடிக்கையாலும், பேச்சாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுகின்றன.

    நாவலாசிரியரே குறுக்கிட்டு அறிமுகப்படுத்துவதைவிட, நாமே நாவலில் பாத்திரங்களின் பண்புகளை உணர்ந்து கொள்ளும் இம்முறை திறனாய்வாளர்களால் போற்றப்படுகிறது.

    ஒரு நாவலில் பாத்திரங்களின் எண்ணிக்கை, நாவலின் அளவையும், கதை நிகழும் பின்னணியையும், கால அளவையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். வரலாற்று நாவல்களில் பாத்திர எண்ணிக்கை மிகுதியாகவும், சமூக நாவல்களில் குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு. நாவலின் பக்க அளவு அதிகமாக அதிகமாகப் பாத்திர எண்ணிக்கை கூடலாம். தொடர் கதையாக ஆண்டுக் கணக்கில் எழுதப் படுகின்ற நாவல்களும் மிகுதியான பாத்திரங்களைக் கொண்டிருக்கும்.

    க.நா. சுப்பிரமணியன் எழுதிய ஒரு நாள் என்ற நாவல், கதைத்தலைவன் ஒருநாளில் சந்தித்த, மனத்தில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பத்துப் பேரை மட்டுமே பாத்திரங்களாகக் கொண்டுள்ளது.

    ஒரு தீவில் சிக்கிக் கொண்ட தனிமனிதனுக்கு நிகழ்ந்த நிகழ்வுகளைக் கதையாகக் கூறவேண்டுமானால், அவன் ஒருவனே மனிதப்பாத்திரமாகவும், அங்கு எவையேனும் விலங்குகளோ, பறவைகளோ கதை நிகழ்வில் பங்கெடுக்குமானால் அவையும் சிறுபாத்திரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

    நாவலில் பாத்திரங்களைப் படைக்கும் நாவலாசிரியர்கள் பாத்திர முன்மாதிரியாகச் சிலரை நினைத்துக்கொண்டுதான் படைப்பர். மு.வரதராசனார், தாம் படைத்த இறுதி நாவலாகிய மண் குடிசையில் தம்முடைய குருநாதர் மௌன சாமி அவர்களை மெய் கண்டார் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கியுள்ளார். தி. ஜானகிராமன் தம்முடைய நண்பரும் எழுத்தாளருமாகிய எம்.வி.வெங்கட்ராமை, மோகமுள் நாவலில் வெங்கட்ராம் என்ற பெயரிலேயே பாத்திரமாக அமைத்துள்ளார்.

    எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய காதுகள் எனும் நாவலில் மகாலிங்கம் என்ற பெயரில் தம்மையே கதைத் தலைவனாக ஆக்கிக் கொண்டார்.

    ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில் தம்மையே எழுத்தாளர் பாத்திரமாகக் கொண்டு கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஜெயகாந்தன், தான் முன்பெழுதிய கதையில் வந்த ‘கங்கா’ என்ற பாத்திரத்தைச் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலிலும் கதைத் தலைவியாக்கி, பிறகு கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலிலும் கதைத்தலைவி ஆக்கியுள்ளார்.

    நாவல் படைக்க எண்ணும் இளம் எழுத்தாளர்கள், தாம், தம் வாழ்வில் கண்ட மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு நாவல் எழுதினால் எழுதுவது சுலபமாயிருக்கும். படிப்பதற்கும் சுவையாக இருக்கும். பேராசிரியர் மா. இராமலிங்கம் பாத்திர முன்மாதிரி என்பது பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    ‘யாராவது ஒருவனை முன்மாதிரியாக மனத்தில் கொண்டுதான் நாவலாசிரியர் பாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறார்; என்றாலும் கடைசியில் அவர் கண்ட நகல் முற்றிலும் புதியதாகவே அமைகிறது. நிஜ மனிதர்களோடு சில வகைகளில் ஒன்றியும் சில வகைகளில் ஒன்றாமலும் கதாபாத்திரம் மாறிவிடுகிறது.’


    பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதில் நாவலாசிரியர் சில உத்திகளைக் கையாள்வர். மு.வரதராசனார் தம்முடைய நாவல்களில் பாத்திரங்களில் பண்பு நலனை உடனே இனம் காணும் முறையில் பெயரிடும் தன்மை கொண்டிருந்தார். நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு அருளப்பர், அறவாழி, அறிவன், மங்கை நல்லாள் போன்ற பெயர்களையும், தீய உள்ளம் கொண்டவர்களுக்கு ஆணவர், அகோர், சிந்திரா போன்ற பெயர்களையும் இடுகிறார். பிறந்த குழந்தையின் பிற்காலப் பண்பு நலன் எவ்வாறு இருக்கும் என்பதை அறியாமலே பெயரிடுவர். ஆனால் நாவலைப் படைக்கும் போதே நாவலாசிரியர் மனத்தில் அப்பாத்திரத்தின் முழுப் பண்பும் விளங்கியிருக்கும். எனவே பண்பை விளங்கிக் கொள்ளும் வண்ணம் பெயரிடுவது நாவலாசிரியருக்கு எளிதானதாகும். ஆதலால் குறியீட்டுப் பெயர்களை வைத்துப் பாத்திரங்களின் பண்பை விளங்குமாறும் செய்வர்.

    எனவே, நாவல் எழுதத் தொடங்கும் புதிய நாவல் படைப்பாளிகள் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களுக்குப் பெயர் இடுவதற்கு முன்பு கதையில் பாத்திரத்தின் பண்புகளை உணர்ந்து, பெயரை முடிவு செய்தால் நன்றாக அமையும்.

    நாவலில் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது சில முறைகளைப் பின்பற்றலாம்.

    (1)

    பாத்திரத்தை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நேரடியாக அறிமுகப்படுத்துதல்.

    (2)

    பாத்திரத்தைப் பற்றி, இன்னொரு பாத்திரமோ, நாவலாசிரியரோ முன்னால் கூறிவிட்டுப் பிறகு பாத்திரத்தை அறிமுகப் படுத்துதல்.

    (3)

    ஒரு பாத்திரத்தின் பெயரைச் சுட்டாமல் நாவலில் ஓரிடத்தில் நேரடியாகப் பங்கேற்கச் செய்து, பிறகு அப்பாத்திரம் பின்னொரு முறை நாவலில் வெளிப்படும் பொழுது அப்பாத்திரத்தின் பெயர், பிற பாத்திரங்களுக்கும், அதற்கும் உள்ள தொடர்பு போன்றவை விளக்கப்படுதல்.

    மேற்கூறிய மூன்று முறைகளும் பாத்திரத்தைப் பற்றி நேரடியாகவே அறிந்து கொள்கிற முறையாகும். ப.சிங்காரத்தின், புயலில் ஒரு தோணி எனும் நாவலில் கதைத் தலைவன் பாண்டியன் அறிமுகப்படுத்தப்படுகிற முறையைப் பார்க்கலாம்.

    ‘பாண்டியன் வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும் வெள்ளைச் சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.’

    இவ்வாறு அறிமுகப்படுத்தும் போது பாத்திரத்தைப் பற்றி ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

    இரண்டாவது வகையில், பாத்திரத்தைப் பற்றி அப்பாத்திரமோ, இன்னொரு பாத்திரமோ முன்னர்க் கூறி அறிமுகப்படுத்துதல் ஆகும். அற்பஜீவி என்ற நாவலில் (தெலுங்கு நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு) சுப்பையா என்ற தலைமைப் பாத்திரத்தை நாவலாசிரியர் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறார்.

    ‘சுப்பையா அழகானவன் அல்ல; இது சுப்பையாவின் அபிப்பிராயம். சுப்பையா சுத்த உதவாக்கரை; இதுவும் சுப்பையாவின் அபிப்பிராயமே. சுப்பையாவுக்கு ஜாமின்தாரி எதுவுமில்லை; இது அவன் மனைவி சாவித்திரியின் கோபத்திற்குக் காரணம். சுப்பையா வெறும் கெக்கேப்பிக்கே, இப்படிச் சாவித்திரியின் அண்ணன் வெங்கட்ராவ் சொல்வதுண்டு’

    இந்த அறிமுக முறையால் சுப்பையாவைப் பற்றி, நாவலின் தொடக்கத்திலேயே நமக்குப் புலனாகின்றது.

    மூன்றாவது வகை அறிமுகம், பாத்திரத்தை முழுமையாக முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு பாத்திரத்தின் பெயர், பண்பு, பிற பாத்திரங்களுடன் உள்ள உறவு நிலையை விளக்குவது.

    பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கு அடியானைக் கல்கி இவ்வாறுதான் அறிமுகப் படுத்துகிறார். மூன்று பேர் ஒரு பெரிய விவாதம் நடத்திக் கொண்டிருப்பதைக் கூறிய கல்கி,

    ‘வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்தவ புண்டரகமாகச் சந்தனம் அணிந்து, தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும், குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார்’

    என்று கூறிவிட்டு, பிறகு இன்னொரு பாத்திரம் மூலம் அவன் பெயர் ஆழ்வார்க்கு அடியான் என்பதைக் கூறுகிறார்.

    நாவலில் இப்படிப்பட்ட பாத்திர அறிமுகம், பாத்திரத்தின் பண்பினை, முதலிலேயே அதன் புறத்தோற்றம் மூலம் விளக்கி விடுகிறது. வைணவத்தில் மிகப் பெரிய ஈடுபாடுடைய ஒருவர் பிற சமயத்தைச் சார்ந்தவரோடு வாதம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். பிறகுதான் அவர் பெயர் ஆழ்வார்க்கு அடியான் நம்பி என நமக்குத் தெரிகிறது.

    இளம் படைப்பாளிகள் இம் மூன்று முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பாத்திர அறிமுகம் நிகழ்த்தினால் வாசகருக்கு நாவலில் ஈடுபாடு உண்டாகும்.

    பாத்திர வளர்ச்சியின் அடிப்படையில்தான் நாவலும் வளர்கின்றது. பாத்திரத்தின் செயல்பாடு, சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பாத்திரம் பிறரோடு உரையாடும் உரையாடல் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மேலும் பாத்திரம் நல்லவனா, கெட்டவனா என்பதை அறியவும் வழி ஏற்படுகின்றது.

    தொடக்க கால நாவல்களில் முழுமையாக நல்லவர்களும், தீயவர்களும் பாத்திரங்களாக வருவர். தீயவரிடம் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற நல்லவர் முயன்று இறுதியில் வெற்றியோ, தோல்வியோ அடைவது நாவலில் வழக்கமாக இருந்திருக்கிறது.

    நாவலில் எதார்த்தம் மிகுதியாக வந்ததற்குப் பிறகு இந்தத் தொடக்க கால முறை ஓரளவு செல்வாக்கு இழந்துவிட்டது. மனிதர்களில் முழு நல்லவர்களோ, முழுக் கெட்டவர்களோ இல்லை. அதனால் நாவலில் நல்லோர், தீயோரை அறுதியிட்டுக் கூறினால் நாவலின் ஓட்டம் குறைவுபடக்கூடும் என்பதை,

    ‘குற்றங்களே இல்லாத உயரிய பாத்திரப் படைப்புகள், குற்றங்களின் மொத்த வடிவமாகத் திகழும் மிகக் கொடுமையான பாத்திரப் படைப்புகள் ஆகிய இரண்டு வகையான பாத்திரப் படைப்புகளும் வாசகருக்கு நிறைவு அளிக்காமல் போவதுடன், நாவலின் ஓட்டத்தை மந்தப்படுத்திவிடும்.’

    என்று கூறுகிறார் சி.இ.மறைமலை.

    உலகத்தில் மிகச் சாதாரணமாக நிலவும் பாத்திரங்களை நாவலில் உலவ விட்டால் நாவல் சிறக்குமே தவிர, முற்காலக் காப்பிய இலக்கணம் கூறியது போன்று தன்னேரில்லாத் தலைவனையும், தலைவியையும் உலவ விட்டால் நாவலின் சுவை குன்றி, அது வாழ்வியலில் இருந்து விலகிச் சென்றுவிடும். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் மிகச்சிறந்த நாவலில் இடம் பெறும் பிரதாப முதலியாரை விட, ஆர்.சண்முக சுந்தரத்தின் நாவலில் இடம் பெறும் நாகம்மாள் பாத்திரம் வாழ்வியலோடு ஒட்டி நிற்பதை நாம் அறியலாம்.

    எனவே, படைப்பாளிகள் உண்மையான மனிதனைப் படைக்க வேண்டுமே அன்றி, அவனை முழு நல்லவனாகவோ, முழுக் கெட்டவனாகவோ படைக்கக் கூடாது. அவ்வாறு படைத்தால் அது நடப்பியலுக்கு மாறானதாக இருக்கும்.

    பாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாத உத்தியாக விளங்குகின்றது. பாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான் பாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.

    பாத்திரத்தின் முடிவு திருமணம், குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம். இல்லையேல் மரணம், குறிக்கோளில் தோல்வி போன்ற துன்பமுடிவாக இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.

    நாவலாசிரியரே வலிந்து தாமே ஒரு முடிவை, பாத்திரத்திற்குத் தம் விருப்பு, வெறுப்பிற்கேற்ப உருவாக்குவாரேயானால் அம்முடிவு செயற்கையானதாக, நாவலின் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியதாக ஆகிவிடும்.

    ‘எந்த முடிவை நாவலாசிரியர் அமைத்தாலும் அந்த முடிவைத் தவிர வேறு முடிவு அப்பாத்திரத்திற்குப் பொருத்தமானது அன்று எனப் படிப்போர் நம்பும்படியாக இருக்கவேண்டும்.’

    என்பார் கரு.முத்தையா.

    பொன்னியின் செல்வன் எனும் நாவலின் கதை பொன்னியின் செல்வனாகிய ராஜராஜ சோழன்  பதவியேற்பதற்கு முன்பே முடிவடைந்து விடுகிறது. எனவே, அந்நாவலின் கதை முழுமையடையாமல் முடிந்து விட்டதாகவும், கதை மாந்தர்களின் பிற்கால வாழ்வு எவ்வாறு அமைந்தது என்பதைக் கேட்டும் வாசகர் பலர் கடிதம் எழுதியதாகக் கல்கி கூறுகிறார். எனவே நாவலுக்கு முடிவுரை ஒன்றை எழுதி, கதை முடிவிற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.

    ‘முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லோருக்கும் கதை ஆசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்துகொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்கு மேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதையில் வரும் மற்ற பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம். ஆனால் சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும் ஆகாது...’

    கதையின் பாத்திரங்களின் பிற்கால வாழ்க்கை என்ன வாயிற்று என்பதை, ஒன்பது வினாக்களுக்கு விடை அளிக்கும் விதமாகக் கல்கி வரலாற்று அடிப்படையில் விளக்குகிறார்.

    எனவே, நாவலின் முடிவு அல்லது பாத்திரத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டிய கதை முடிவு என்பது மக்களின் ஆர்வத்தை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.



    1.

    பாத்திரப் படைப்பின் இன்றியமையாமையைக் குறிப்பிடுக.

    2.

    பாத்திர எண்ணிக்கை பற்றிக் கூறுக.

    3.

    பாத்திர முன்மாதிரி என்றால் என்ன?

    4.

    பாத்திரப் பெயர் எவ்வாறு அமைய வேண்டும்?

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 12:15:46(இந்திய நேரம்)