தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்தியாளர் வகைகள்

  • 2.3 செய்தியாளர் வகைகள்

    செய்தியாளர்களை அவர்கள் செய்கின்ற பணியின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தலாம்.

    2.3.1 நகரச் செய்தியாளர்கள் (City Reporters)

    செய்தித்தாள் வெளிவருகிற இடத்தில் (நகரில்) இருந்துகொண்டு செய்திகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களை நகர அல்லது உள்ளூர்ச் (Local) செய்தியாளர்கள் என்கின்றனர். இவர்கள், அந்த வட்டாரத்து மக்கள் விரும்பிப் படிக்கும் சுவையான செய்திகளைச் சேகரித்துத் தருகின்றனர். இது போன்ற உள்ளூர்ச் செய்திகள் மதுரையிலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழில் மதுரை நகர் என்ற தலைப்பில் மூன்றாம் பக்கத்தில் வெளிவருகின்றன. இதே போல THE HINDU நாளிதழ் CITY என்று மூன்றாம் பக்கத்தில் அவ்வூர்ச் செய்திகளை அச்சிடுகின்றது.

    • புறநகர்ச் செய்தியாளர் (Mofussil Reporters)

    மாநிலத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இருந்துகொண்டு சுற்றுப்புற ஊர்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்புகின்றவர்களைப் புறநகர்ச் செய்தியாளர்கள் என்று கூறலாம்.

    2.3.2 வெளிநாட்டுச் செய்தியாளர்கள் (Foreign Correspondents)

    வெளிநாடுகளில் தங்கி உலகச் செய்திகளைத் திரட்டிக்கொடுக்கும் பணியைச் செய்யும் செய்தியாளர்கள் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனுப்பும் செய்திகள் மதுரைத் தினமணி நாளிதழில் 12ஆம் பக்கத்தில் உலகம் என்ற பிரிவில் வெளிவருகின்றன. THE HINDU இவர்கள் கொடுக்கும் செய்திகளை International என்ற பிரிவில் 12ஆம் பக்கத்தில் வெளியிடுகின்றது. இதைப் போலவே, பிற ஊர்களிலிருந்து வெளியாகும் நாளிதழ்களும், உள்நாட்டுச் செய்திகள் என்றும் வெளிநாட்டு அல்லது அயல்நாட்டுச் செய்திகள் என்றும் தனித்தனியே வெளியிடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றன.

    2.3.3 பிற பிரிவினர்

    ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல் அனுப்புகின்ற செய்திகளின் அளவிற்கு ஏற்ப ஊதியம் பெறுகின்றவர் பகுதிநேரச் செய்தியாளர் (Reporter) என்று அழைக்கப்படுகின்றார்.

    ஒரு செய்தித்தாளின் முழுநேர ஊழியராக இருந்து செய்தி திரட்டுபவரைச் செய்தியாளர் (Correspondent) என்று குறிப்பிடுகின்றனர்.

    நாடாளுமன்ற, சட்டமன்றச் செய்திகளைத் தொகுத்துத் தருபவர்கள் மன்றச் செய்தியாளர்கள் (Lobby Correspondents) என்று அழைக்கப் படுகின்றனர்.

    ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றியோ அல்லது வெளிநாடு செல்லும் முக்கியத் தலைவர்களைத் தொடர்ந்து சென்று அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளையோ அல்லது எல்லாரும் அறிய விரும்பும் நாட்டு நடப்புகளையோ திரட்டிச் செய்தியாகத் தருபவர்கள் சிறப்புச் செய்தியாளர்கள் (Special correspondent) எனப் பெயர் பெறுகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 11:42:50(இந்திய நேரம்)