தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்திக் களங்கள்

  • 3.1 செய்திக் களங்கள்

    செய்தியாளர் (Reporter) செய்தியை இனங்கண்டு கொண்ட பின்னர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். செய்தியைப் பெறுதல் (getting the information) என்பது துப்பறிதல் போன்றதாகும். என்ன? ஏன்? எப்பொழுது? எப்படி? எங்கே? யார்? என்ற ஆறு கேள்விகளுக்கும் சரியான, முழுமையான விடைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதென்பது, கடலில் மூழ்கி முத்துக் குளிப்பது போன்ற அரிய பணியாகும்.

    சில செய்தியாளர்களுக்குச் செய்தி திரட்டுவதற்குச் சில இடங்களை வரையறுத்துக் குறிப்பிட்டிருப்பார்கள். இதனை ஆங்கிலத்தில் பீட் (Beat) என்பார்கள். தமிழில் செய்திக் களங்கள் என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு செய்தியாளருக்கும் எந்தெந்த இடங்கள் அல்லது அலுவலகங்கள் என்பதை ஒதுக்கி இருப்பார்கள். அவர்கள் நாள்தோறும் அந்த இடங்களுக்குச் சென்று செய்திகளைத் திரட்டுவார்கள்.

    3.1.1 ஒதுக்கீட்டுப் பணிகள் (Assignments)

    செய்திகள் எங்கு எப்பொழுது வெடித்துக் கிளம்பும் என்று கூற முடியாது. ஓரிடத்தில் விபத்து என்று தெரிந்தவுடன் செய்தியாளர் ஒருவரை, செய்தித்தாளின் செய்தி ஆசிரியர் அந்த இடத்திற்கு அனுப்புவார். தலைமை அமைச்சரின் சுற்றுப் பயணத்தில் செய்திகளைத் திரட்ட ஒருவரை அனுப்பலாம். எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு செய்தியாளர்கள் ஒவ்வொரு நாளிதழ் அலுவலகத்திலும் காத்திருப்பார்கள். அவர்களைத் தேவைக்கு ஏற்ப, செய்தி ஆசிரியரோ தலைமைச் செய்தியாளரோ பயன்படுத்திக் கொள்வர். ஒதுக்கீட்டுப் பணிகளைச் செய்கின்ற செய்தியாளர்கள் தனித்திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 12:18:24(இந்திய நேரம்)