தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    வன்பொருளும் மென்பொருளும் இணைந்த மின்னணுக் கணிப்புப் பொறியே கணினி ஆகும். உடலின் உள்ளிருந்து இயக்கும் உயிர்போல, கணினியின் வன்பொருள்களுக்கு உயிரூட்டி அவற்றை இயக்குவிப்பது மென்பொருளே ஆகும். கணினி மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துப் பணிகளும் மென்பொருளின் துணைகொண்டே செய்யப்படுகின்றன. மென்பொருளின் பல்வேறு வகைகள் உள்ளன. கணினியில் இருந்தே ஆகவேண்டிய, உயிர்நாடியான மென்பொருள் என்றும், தேவைக்கு ஏற்ப, விருப்பப்படி, கூடுதலாக வைத்துக் கொள்ளக் கூடிய மென்பொருள் என்றும பொதுவாகப் பாகுபடுத்தலாம்.

    கணினியின் இயக்கத்துக்கு இன்றியமையாத மென்பொருள் முறைமை மென்பொருள் என்றும், வெவ்வேறு பயன்பாடுகளுக்குத் தேவையான மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன. முறைமை மென்பொருளின் முக்கிய அங்கமாக விளங்குவது இயக்க முறைமை ஆகும். இன்றைக்குக் கணினியில் பல்வேறு வகைப்பட்ட இயக்க முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல, பயன்பாட்டு மென்பொருளையும் வீட்டிலுள்ளோர் பயன்படுத்தக் கூடியவை, அலுவலகத்தில் பயன்படுத்தப் படுபவை, நிறுவனச் செயல்பாட்டுப் பயன்படக் கூடியவை எனப் பாகுபடுத்த முடியும். அனைத்துத் தரப்பினரும் இணையத்தில் பயன்படுத்தும் மென்பொருள்களும் ஏராளமாய் உள்ளன.

    மேற்கண்ட இருவகை மென்பொருள்களையும் உருவாக்க உதவுபவை கணினி மொழிகளாகும். மனிதர்கள் உரையாடிக் கொள்ள மொழி தேவை. அதுபோல, கணினி வன்பொருள்களுக்கு, நாம் செய்து முடிக்க விரும்பும் பணியை அறிவுறுத்தி ஆணையிட கணினி மொழி தேவைப்படுகிறது. கணினியின் வரலாற்றுப் போக்கில் மேலும் மேலும் திறன்பெற்ற, நவீன தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய, புதிய புதிய மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    கணினி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு, இன்றுவரை, கணினியில் பயன்படுத்தப்பட்டு வரும் இயக்க முறைமைகள், பயன்பாட்டு மென்பொருள்கள், கணினி மொழிகள் ஆகியவற்றின் பொதுவான வரையறுப்புகளும் குறிப்பான வகைப்பாடுகளும் இப்பாடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:49:06(இந்திய நேரம்)