Primary tabs
-
5.2 முறைமை மென்பொருள்
மென்பொருள்களில், கணினியின் இயக்கத்துக்கே அடிப்படையாக விளங்குவது முறைமை மென்பொருள். முறைமை மென்பொருள்களுள் முக்கியமாக விளங்குவது இயக்க முறைமை (Operating System) மென்பொருளாகும். இயக்க முறைமை என்றால் என்ன? கணினியின் செயல்பாட்டில் இயக்க முறைமையின் பணிகள் என்னென்ன? பயனர்கள் (Users) இயக்க முறைமையோடு தொடர்புகொண்டு ஆணைகளை நிறைவேற்ற இயக்க முறைமை வழங்கும் இடைமுகம் (Interface) எப்படிப் பட்டது? இன்றைக்குப் பயன்பாட்டில் உள்ள இயக்க முறைமைகள் எவை? அவை எந்த வகையைச் சேர்ந்தவை? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காண முயல்வோம். இறுதியில், இயக்க முறைமையின் திறம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்கும் முறைமைப் பயன்கூறுகள் (System Utilities) பற்றியும் படித்தறிவோம்.
5.2.1 இயக்க முறைமை (Operating System)
பாலமாக
பயனருக்கும் கணினிக்கும் இடையே பாலமாகச் செயல்படுவது இயக்க முறைமை ஆகும். கணினியின் மையச் செயலமாக இயங்குவது ஒரு நுண்செயலி (Micro processor) எனப் பார்த்தோம். நுண்செயலி என்பது ஒரு மின்னணுச் சில்லு (Electronic chip). சில்லு உட்பட எந்தவொரு மின்னணுச் சாதனத்துக்கும் புரிந்த மொழி மின்சாரம் மட்டுமே. ஒரு மின்னணுச் சில்லுவில் மின்சுற்றுகளால் (circuits) ஆன ஏராளமான மின்னணு உறுப்புகள் (மின்மப் பெருக்கி- Transistor; மின்தடுப்பி- Resistor போன்றவை) உட்பொதிக்கப்பட்டுள்ளன. இவை, உட்செலுத்தப்படும் மின்னழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுகின்றன. நுண்செயலி குறை மின்னழுத்தம் (Low Voltage), உயர் மின்னழுத்தம் (High Voltage) என்கிற இரு நிலைகளையே புரிந்து கொள்ள முடியும். இதுவே, குறியீடாக 0, 1 என உருவகப் படுத்தப்படுகிறது. ஆக, கணினியின் நுண்செயலிக்கு 0, 1 ஆகிய குறியீடுகளால் ஆன இரும மொழி (Binary Language) மட்டுமே புரியும். பயனரைப் பொறுத்தவரை, கணினிக்கு இரும மொழியில் கட்டளை தந்து, கணினி தரும் இரும மொழி விடைகளைப் புரிந்துகொள்வது இயலாது. பயனர் தனக்குப் புரியும் மொழியில் தரும் கட்டளைகளை கணினியால் புரிந்துகொள்ள இயலாது. இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்கவே இயக்க முறைமை தேவைப்படுகிறது.
பயனரின் கட்டளைகளை, இயக்க முறைமை, நுண்செயலிக்குப் புரிகிற மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லும். நுண்செயலி பணியை முடித்து விடையைத் தரும்போது, அதனைப் பயனருக்குப் புரியும் மொழியில், மொழிபெயர்த்துத் திரையில் காட்டுகிறது.
கணினியில் ஏராளமான பயன்பாட்டு மென்பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன எனப் பார்த்தோம். ஓர் ஆவணத்தில் தகவல்களை விசைப்பதிவு செய்து நிலைவட்டில் ஒரு கோப்பாக (File) சேமிக்கிறோம். அந்தக் கோப்பிலுள்ள தகவலை அச்சிடுகிறோம். இந்தப் பணிகளை ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் நிறைவேற்றுகிற போதிலும், உண்மையில் அப்பணிகளை, பயன்பாட்டுத் தொகுப்பின் கோரிக்கையின் பேரில் இயக்க முறைமையே நிறைவேற்றி வைக்கிறது. அதாவது, கணினியில் நடைபெறும் எத்தகைய உள்ளீடு/வெளியீட்டுப் பணிகளையும் இயக்க முறைமையே செய்து முடிக்கிறது. ஆக, இயக்க முறைமையானது பயனர் நேரடியாக இடும் கட்டளைகளையும், பயனர் பயன்பாட்டுத் தொகுப்புகளின் வழியாக இடும் பணிகளையும் செய்து முடிக்கிறது.
மேலாராக
கணினியின் உள்ளுறுப்புகளான மையச் செயலகம், நினைவகம், வட்டுச் சேமிப்பகம் ஆகியவற்றை இயக்க முறைமையே நிர்வகிக்கிறது. கணினியில் இணைக்கப்படும் திரையகம், விசைப் பலகை, சுட்டி, நெகிழ்வட்டு/குறுவட்டு இயக்கங்கள் மற்றும் அச்சுப்பொறி, இணக்கி (Modem) , ஒலிவாங்கி, ஒலி பெருக்கி போன்ற புறச்சாதனங்கள் ஆகியவற்றையும் இயக்க முறைமையே மேலாண்மை செய்கிறது. அந்த வகையில் பார்த்தால், இயக்க முறைமையை ஒரு நிறுவனத்தின் மேலாளருக்கு (Manager) ஒப்பிடலாம். நிறுவனத்தின் அனைத்துப் பணிகளுக்கும் மேலாளரே பொறுப்பு ஏற்கிறார். நிறுவனப் பணிகள் மேலாளரின் கட்டுப்பாட்டிலேயே (Control) நடைபெறுகின்றன. பணியாளர்களை நிர்வகிக்கிறார் (Administer). முன்வரையறுத்தபடி பணிகள் அனைத்தும் முறைப்படி நிறைவேற்றுப்படுகின்றனவா என்று கண்காணிக்கிறார் (Monitor) . பணிப்பிரிவுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களையும், பணி உறவுகளையும் மேற்பார்வை இடுகிறார் (supervise) . நிறுவனம் எவ்வித இக்கட்டிலும் சிக்கிக் கொள்ளாமல் செவ்வனே இயங்கிட ஒட்டுமொத்த மேலாண்மைப் பணியை (Management) மேற்கொள்ளுகிறார. இதுபோலவே இயக்க முறைமையும் பயனர் என்னும் முதலாளியின் விருப்பத்திற்கிணங்க, கணினி என்னும் நிறுவனத்தின் கட்டுப்பாடு, நிர்வாகம், கண்காணிப்பு, மேற்பார்வை போன்ற மேலாண்மைப் பணிகளையும் செய்யும் மேலாளராக விளங்குகிறது.
இயக்க முறைமை, கணினி அமைப்பின் மேலாளராக (Manager) செயல்படுகிறது என்று பொதுவாகப் பார்த்தோம். இயக்க முறைமையின் மேலாண்மைப் பணிகளை மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி, இனி விரிவாகப் படிப்போம்.
உள்ளீட்டு/வெளியீட்டு மேலாண்மை (Input/Output Management)
விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற உள்ளீட்டுச் சாதனங்களிலிருந்து பெறப்படும் உள்ளீடுகள் இடைநிலை நினைவகத்தில் (Buffer Memory) இருத்தி வைக்கப்படுகின்றன. பின் நினைவகத்தில் (RAM) பதிவு செய்யப்படுகிறது. பயனரின் கட்டளைப் படி, அவை வட்டுச் சாதனங்களுக்கு அனுப்பப்படலாம். பயனரின் விருப்பப்படி வட்டுக் கோப்புகளில் உள்ள தகவல் திரையகத்தில் காண்பிக்கப்படலாம். அல்லது அச்சுப்பொறி போன்ற புறநிலைச் சாதனங்களுக்கு அனுப்பப்படலாம். இந்தப் பணிகளை, அழியா நினைவகத்தின் (ROM) முக்கிய அங்கமாக விளங்கும், பயாஸ் (BIOS-Basic Input Output System) சில்லுவில் உட்பொதிக்கப்பட்ட நிரல்களின் உதவியுடன் மேலாண்மை செய்கிறது.
கணினியில் பொருத்தப்படும் வட்டு இயக்ககங்கள், புறச் சாதனங்களான அச்சுப்பொறி, வருடி, வரைவி, இணக்கி போன்றவற்றை பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஒவ்வொன்றும் தமக்கே உரிய மொழியில் பேசிக் கொள்பவை. இயக்க முறைமை, அனைத்து வகை புறச் சாதனங்களின் மொழிகளையும் முன்கூட்டியே அறிந்திருக்க இயலாது. எனவே, புறநிலைச் சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களே அவை, குறிப்பிட்ட இயக்க முறைமையோடு தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் நிரல்களை வழங்குகின்றன. இந்த நிரல்கள் சாதன இயக்கிகள் (Device Drivers) என்றழைக்கப்படுகின்றன. இத்தகைய இயக்கி நிரல்களின் துணையோடு இயக்க முறைமை புறநிலைச் சாதனங்களோடு தகவல் பரிமாற்றம் செய்கிறது.
கோப்பு மேலாண்மை (File Management)
கணினியில் தகவல்களைச் சேமித்து வைக்க வட்டுகள், நாடாக்களைப் பயன்படுத்துகிறோம். இந்த சேமிப்பு சாதனங்களில் எந்தவொரு தகவலும் கோப்பு (File) வடிவிலேயே சேமிக்கப்படுகின்றன. ஒரு நபரின் தொலைபேசி எண்ணை மட்டும் ஒரு வட்டில் சேமிக்க வேண்டும் என்றாலும், ஒரு கோப்பினை உருவாக்கி, அந்தக் கோப்பில்தான் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, கணினியில் (அதாவது வட்டு போன்ற சேமிப்பகங்களில்) பயனர் உருவாக்கும் ஏராளமான கோப்புகள் சேமித்து வைக்கப்படுகின்றன.
கணினிச் சேமிப்பகத்தில் கோப்புகளை அடுக்கி வைக்கும் முறை, நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கு ஒப்பாகும். நூல்களின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் என வகைப்படுத்தப்பட்டு தனித் தனி அலமாரிகளில் அடுக்கி வைக்கப் படுகின்றன. இலக்கியம் என்பது புராணம், காப்பியம், நாடகம், புதினம், சிறுகதை, கவிதை, உரைநடை என உட்பிரிவுகளாக வகைப்படுத்தி அடுக்கப் பட்டிருக்கும். அதுபோலவே, கணினியிலும் கோப்புகள் வகைப்படுத்தப்பட்டு போப்பகம் (Directory) , உட்கோப்பகங்களில் (Sub-Directory) பிரித்து அடுக்கி வைக்கப்படுகின்றன. இவற்றை கோப்புறை (Folder) , உட்போப்புறை (Sub-folder) என்றும் கூறுவர். கோப்பு, கோப்பகம்/கோப்புறை ஆகியவற்றை பயனரே ஒரு பெயரிட்டு உருவாக்குகிறார்.
கோப்பு மற்றும் கோப்பகங்கள் உருவாக்கப்பட்ட தேதி, அவற்றின் கொள்ளவு ஆகியவற்றை இயக்க முறைமை குறித்து வைக்கிறது. கோப்புகளைத் திருத்திச் சேமிக்கும்போது, கடைசியாகத் திருத்தப்பட்ட தேதி குறித்து வைக்கப்படுகிறது. தேவையற்ற கோப்புகளை அழிக்கலாம். மீண்டும் தேவையெனில் மீட்டெடுக்கலாம். கவனக் குறைவாகத் திருத்திவிடாமல் இருக்க படிக்க மட்டும் (Read Only) எனப் பாதுகாக்கலாம். கவனக் குறைவாக அழித்துவிடாமல் இருக்க மறைத்து வைக்கலாம். இவ்வாறு பயனரின் விருப்பப்படி கோப்பு மற்றும் கோப்பகங்களைப் பராமரித்து மேலாண்மை செய்யும் பொறுப்பு இயக்க முறைமைக்கு உரியதாகும்.
நினைவக மேலாண்மை (Memory Management)
இயக்க முறைமை, கணினியில் பொருத்தப்பட்டுள்ள நினைவகத்¬£த (RAM) பரிசோதித்து அதன் கொள்ளளவை அறிந்து புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. நினைவகத்தில் இயக்க முறைமையின் நிரல்கள் தங்கும் இடம், சாதன இயக்கி, நிரல்கள் தங்கும் இடம், ஏனைய பயன்பாட்டுத் தொகுப்பின் நிரல்கள் இருத்தப்படும் இடம், பயனர், வட்டிலுள்ள கோப்புகளைத் திறந்து படிக்க விரும்பும்போது, அதன் விவரங்களை நினைவகத்தில் இருத்த வேண்டிய இடம் ஆகிய அனைத்தையும் இயக்க முறைமையே தீர்மானிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை ஒரே நேரத்தில் இயக்கும்போது, அவற்றைத் தனித்தனியே நினைவகத்தில் இருத்தி, குழப்பமின்றி மேலாண்மை செய்யும் பணியை இயக்க முறைமையே கவனித்துக் கொள்கிறது. பிழையான நிரல்கள் பாதுகாப்பான நினைவகப் பகுதிகளில் அத்துமீறி நுழைய முயலும்போது, பயனருக்கு அதனை அறிவித்து, அந்த நிரலை முடித்து வைக்க ஆணையிடுகிறது.
5.2.3 பயனர் இடைமுகம் (User Interface)
கணினியை இயக்கியவுடன், கணினியின் செயலுறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு, இயக்க முறைமையின் மேலாண்மை நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப் படுகின்றன. இந்த நிகழ்வு தொடங்கல் (Booting) என அழைக்கப்படுகிறது. கணினியின் உறுப்புகளில் படுத்திருந்தாலோ, தொடங்கல் பணியில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலோ பயனருக்கு அறிவிக்கப்படும். தொடங்கல் பணி சிக்கலின்றி நிறைவு பெற்றதெனில், பயனர் பணியாற்றத் தொடங்கலாம் என்பதை, குறிப்பிட்ட முறையில் இயக்க முறைமை, கணினித் திரையில் தெரியப்படுத்தும். பயனரின் உள்ளீடுகள் அனைத்தும் திரையில் இடம்பெறும். சரிபார்த்துத் திருத்திக் கொள்ள முடியும். கணினியிடமிருந்து பயனர் எதிர்பார்க்கும் விடையும் திரையில் வெளியிடப்படுகிறது. ஆக, கணினியுடன் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தின் ஊடகம்போல கணினித் திரை அமைகிறது.
தொடக்க காலங்களில், உள்ளீடும் வெளியீடும் கருப்புநிறத் திரையில் வெள்ளை எழுத்துகிள் பளிச்சிடும். COPY, RENAME, DELETE, FORMAT, SEND, SORT, PRINT என்பது போன்ற இயக்க முமைமைக் கட்டளைகளை விசைப்பதிவு (Type) செய்து நிறைவேற்றச் செய்ய வேண்டும். கோப்பு மற்றும் கோப்பகங்கள், நிரல்கள் இவை எல்லாமே பட்டியலிலுள்ள பெயர்களாகவே காட்டப்படும். நிரல்களின் விடையும், எச்சரிக்கை மற்றும் பிழை சுட்டும் செய்தியும், பணி நிறைவேற்றி முடிக்கப்பட்ட தகவலும் சொல் மற்றும் சொல் தொடராகவே திரையில் காட்டப்படும். ஆக, பயனருக்கும் கணினிக்கும் இடையே, தகவல் பரிமாற்றத்துக்கான இடைமுகம் (Interface) எழுத்துகளை (Characters) அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே இத்தகைய இடைமுகம் எழுத்துமுறைப் பயனர் இடைமுகம் (Character User Interface) எனப்பட்டது. அந்தக் காலத்து இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தையே வழங்கின.
இயக்க முறைமையின் எளிய கட்டணச் சொற்களை நினைவி வைத்துக் கொண்டு கணினியில் பணியாற்றுவதே நாளடைவில் சுமையாக கருதப்பட்டது. கட்டளைகளை நினைவில் வைத்திருந்து, அவற்றை எழுத்துப்பிழையில்லாமல் உள்ளீடு செய்யத் தேவை இன்றி, கணினியைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கண்டறிய முயற்சிகள் நடைபெற்றன. பெரிதும் அனுபவம் இல்லாதவர்களும் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியதே இம்முயற்சிக்கு மூலகாரணம் எனலாம். இம்முயற்சியின் பலனாக குறும்படச் சின்னங்களை (Icons) அடிப்படையாகக் கொண்ட வரைகலைப் பயனர் இடைமுகம் (Graphics User Interface -GUI) உருவாகியது. கோப்புகள், கோப்புறைகள், நிரல்கள் அனைத்துமே வண்ணத் திரையில் சின்னங்களாகத் தோற்றமளிக்கும். சுட்டியின் (Mouse) மூலம் சின்னங்களின் மீது ஒருமுறை அல்லது இருமுறை சொடுக்கினால் போதும். கோப்பு/கோப்புறை திறக்கப்பட்டு உள்ளடக்கம் விரியும். நிரல் எனில் அது இயக்கப்படும்.
நினைவுத் திறன் மற்றும் அறிவுத் திறனுக்கு அதிகம் வேலை இல்லாமல், கணினிக்கும் தரும் கட்டளைச் சொற்களை நினைவில் கொள்ளத் தேவையின்றி சுட்டியின் சொடுக்குகள் மூலமே கணினியில் எப்படிப்பட்ட பணியையும் நிறைவேற்றிக் கொள்ள இன்றைய வரைகலை இடைமுகம் வழிவகை செய்துள்ளது.
உள்ளங்கைக் கணினி (Palmtop) முதல், பெமுகக் கணினி (Mainframe) வரை கணினியில் பல்வேறு வகைகள் உள்ளன என்பதை முந்தைய பாடத்தில் படித்தோம். கணினியில் பல்வேறு வகைகள் உள்ளன போன்றே அவற்றை இயக்கும் இயக்க முறைமையிலும் பல்வேறு வகைகள் உள்ளன. என்றாலும், இயக்க முறைமைகளை ஒற்றைப் பயனர் இயக்க முறைமை, பல்பயனர் இயக்க முறைமை, பல்பணி இயக்க முறைமை, பிணைய இயக்க முறைமை என்னும் நான்கு பெரும் பிரிவுகளில் வகைப்படுத்த முடியும்.
ஒற்றைப் பயனர் இயக்க முறைமை (Single user Operation System)
ஒரு கணினியில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்ற முடியும். பல கிளைக் கணினிகளை மையக் கணினியுடன் இணைத்து, ஒரே நேரத்தில் பலர் பணியாற்ற இடந்தராது. ஒருவர் பணியாற்றி முடித்தபின் இன்னொருவர் பயன்படுத்தலாம். ஆனாலும், கணினியில் (கோப்புகளில்) சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தம் என்கிற அமைப்பு முறைதான் இருக்கும். அதாவது, அக்கணினியைப் பயன்படுத்தும் பல பயனர்கள் தத்தமக்கு உரிய தகவல்களைப் பிறர் அணுகமுடியாதவாறு தனித்தனியே பாதுகாப்புடன் சேமித்து வைத்துக் கையாள வழியில்லை.
சொந்தக் கணினி (Personal Computer-PC) வகைகளில் பெரும்பாலும் இந்த வகை இயக்க முறைமையே பயன்படுத்தப் படுகிறது. சிபீ/எம் (CP/M-Control Program for Mircocomputer) என்பதே சொந்தக் கணினியில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட இயக்க முறைமை. அடுத்து ஐபிஎம் பீசிகளில் இடம்பெற்ற டாஸ் (Dos-Disk Operating System) இயக்க முறைமை. ஒட்டுமொத்த இயக்க முறைமை மென்பொருளும் ஒரு சிறிய நெகிழ்வட்டில் (Floppy Disk) அடங்கிவிடும் என்பதால் இப்பெயர். 1980க்குப் பிறகு ஏற்பட்ட கணினிப் புரட்சியில் ஐபிஎம் பீசிகளுக்கும் டாஸ் இயக்க முறைமைக்கும் பெரும்பங்கு உண்டு. டாஸை அடியொற்றி வரைகலைப் பணிச் சூழலுடன் வெளியிடப்பட்ட ‘விண்டோஸ்’ (Windows 95/98/ME) இயக்க முமைமையும் இந்த வகையைச் சார்ந்ததே.
பல் பயனர் இயக்க முறைமை (Multi-User Operating System)
ஒரு மையக் கணினியுடன், முனையங்கள் (Terminals) எனப்படும் தனித்தியங்கும் திறனில்லாத கிளைக் கணினிகளை நூற்றுக் கணக்கில் இணைத்து ஒரே நேரத்தில் ஏராளமானோர் பணியாற்ற முடியும். தொலைவிடங்களிலுள்ள முனையங்களில், பயனர்கள் ஒரே நேரத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முடியும். கட்டளை தந்து, வேண்டிய தகவல்களைப் பெற முடியும். அனைத்துப் பயனர்களின் உள்ளீடு/ வெளியீடுகளுக்கான கோரிக்கைகளையும், அனைவரின் தகவல் கோப்புகளையும் மையக் கணினியிலுள்ள பல்பயனர் இயக்க முமை¬யே கவனித்துக் கொள்கிறது. பயனர்கள் தத்தமக்கே உரிய தனிப்பட்ட தகவல்களைப் பிறர் தலையீடின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
தொடக்க கால பெருமுக (Mainframe) , குறுமுகக் (mini) கணினிகளில் இந்த வகை இயக்க முறைமையே பயன்படுத்தப்பட்டது. 1970 களிலிருந்து இன்றுவரை செல்வாக்குடன் விளங்கும் யூனிக்ஸ் (UNIX) பல்பயனர் இயக்க முறைமை ஆகும். இன்றைக்கு வெளியிடப்படும் யூனிக்ஸ் இயக்க முறைமையை மேசைக் கணினி, மடிக் கணினி போன்ற சொந்தக் கணினியிலும் நிறுவ முடியும். ஒற்றைக் கணினியில் நிறுவினாலும், ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் தத்தமக்குரிய தனிப்பட்ட கணினி போலவே (பிறர் தலையிட முடியாத பாதுகாப்பான தனிப்பட்ட தகவல் சேமிப்புடன்) பயன்படுத்த முடியும். யூனிக்ஸின் புதிய வடிவமாக லினக்ஸ் (LINUX) இயக்க முறைமை 1990-களின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு இன்றைக்குச் செல்வாக்குப்பெற்று விளங்குகிறது. இதுவும் பல்பயனம் இயக்க முறைமையே.
பல்பணி இயக்க முறைமை (Multic-Tasking Operating System)
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை இயக்கவல்லது. இவை ஒற்றைப் பயனர் இயக்க முறையாகவும் இருக்கலாம். பல்பயனர் இயக்க முறையாகவும் இருக்கலாம். தொடக்க கால ஒற்றைப் பயனர் இயக்க முறைமைகள் பெரும்பாலும் ஒற்றைப்பணி (single Task) இயக்க முறைமையாகவே இருந்தன. எடுத்துக்காட்டாக, டாஸ் இயக்க முறைமை ஒற்றைப் பயனர்-ஒற்றைப் பணி (Single User- Single Task) இயக்க முறைமை ஆகும். டாஸில் ஒரு நேரத்தில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை மட்டுமே இயக்க முடியும். இன்னொன்றை இயக்க விரும்பினால், முந்தையதை மூடி விட்ட பிறகே இயக்க முடியும். பல்பணி இயக்க முறைமையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளைத் திறந்து பணியாற்ற முடியும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, மிகவும எளிதாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
ஐபிஎம் நிறுவனத்தின் ஓஎஸ்/2 மற்றும் மைக்ரோசாஃப்டின் (95/98/எம்இ/எக்ஸ்பீ) ஆகியவை ஒற்றைப் பயனர் -பல்பணி (Single User-multi tasking) இயக்க முறைமைகள் ஆகும். பல்பயனர் இயக்க முறைகள் பெரும்பாலும் பல்பணி இயக்க முறைமைகளாகத் தாம் இருக்கும். பல பயனர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றும்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு பயன்பாடுகளில் பணியாற்ற முடியும் அல்லவா?
பிணைய இயக்க முறைமை (Network Operating System-NOS)
பல கணினிகளை ஒன்றாக இணைத்து அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு கணினி அமைப்பைப் பிணையம் (Network) என்கிறோம். பிணையம் பற்றிப் பின்னால் வரும் பாடத்தில் விரிவாகப் படிக்க இருக்கிறோம். ஓர் அலுவலகத்தில் பல்வேறு பணிப்பிரிவுகளில் செயல்படும் கணினிகளை ஒருங்கிணைத்து பிணையத்தைக் கட்டமைக்க முடியும். ஒரு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் கிளைகளில் செயல்படும் கணினிகளை ஒருங்கிணைத்து ஒரு பிணையததை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் பல்வேறு நகரங்களில் இயங்கும் கணினிகளை ஒன்றாக இணைத்தும் பிணையத்தை அமைக்க முடியும். ஓர் அலுவலகம் அல்லது நிறுவனத்தின் கணினிப் பிணையத்தில் ஒரு மையக் கணினி இருக்கும். அதனை வழங்கி (Server) என்கிறோம். கிளைக் கணினிகளின் கோரிக்கை அடிப்படையில் அவற்றுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதால் வழங்கி ஆயிற்று. நூற்றுக்கணக்கான கிளைக் கணினிகளைக் கண்காணித்து அவற்றின் தேவைகளை நிறைவேற்றும் திறன்பெற்ற பிணைய இயக்க முறைமை வழங்கிக் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்.
கிளைக் கணினிகள் தனித்து இயங்கிக் கொள்ளும் திறன் பெற்றவையாக இருக்க வேண்டியதில்லை. அவை, மையக் கணினியின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொள்ளலாம். இத்தகைய அமைப்பு முறை கோப்பு வழங்கி / கணுக்கள் (File server/Nodes) அமைப்புமுறை எனப்படும். இதுபோன்ற பிணைய அமைப்பில் நாவெல் நெட்வேர் (Nobell Netware) என்னும் பிணைய இயக்க முறைமை மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. கிளைக் கணினிகள் தனித்து இயங்கும் திறன் பெற்று, தேவையானபோது வழங்கியுடன் தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பிணைய அமைப்புமுறை நுகர்வி/வழங்கிப் பிணையம் (Client/Server Network) எனப்படுகிறது. விண்டோஸ் என்டீ இயக்க முறைமை, முதல் நுகர்வி/வழங்கிப் பிணைய இயக்கமுறைமை ஆகும். அதுவே விண்டோஸ் 2000 செர்வர் எனவும் பின்னர் விண்டோஸ் 2003 செர்வர் எனவும் மேம்படுத்தப்பட்டது. தற்போதுள்ள பிணைய இயக்க முறைமைகள் பெரும்பாலும் நுகர்வி/வழங்கி அமைப்பைக் கொண்டவையே.
மற்றும் பிற
கையடக்க மற்றும் உள்ளங்கைக் கணினிகளுக்கென தனிச்சிறப்பான இயக்க முறைமைகளும் உள்ளன. விண்டோஸ் சிஇ, சிம்பியன், பாம் (Palm) ஆகியவை அவற்றுள் சில. செல்பேசி, கைக்கடிகாரம், துவைக்கும் எந்திரம், நுண்ணலை அடுப்பு (Microwave overn) விளையாட்டுக் கருவி (Game cousole) - இவற்றிலெல்லாம் கூட இயக்க முறைமையை நிறுவிக் கொள்ள முடியும். மேற்கண்ட மின்னணு சாதனங்களில் பொருத்தப்பட்டுள்ள நுண்செயலிச் சில்லுக்குள்ளேயே இயக்க முறைமையை உட்பொதித்து விட முடியும். இத்தகு இயக்கமுறைமை உட்பொதி இயக்க முறைமை (Embeded OS) என்றழைக்கப்படும். உட்பொதி லினக்ஸ், உட்பொதி ஜாவா, உட்பொதி விண்டோஸ் ஆகிய இயக்க முறைமைகள் வெகுவிரைவில் உலாவரக் காணலாம்.
5.2.5 முறைமைப் பயன்கூறுகள் (System Utilities)
இவை இயக்க முறைமையின் செயல்பாட்டு எல்லையை விரிவு படுத்துபவை. இயக்க முறைமை மென்பொருளிலேயே கூடுதல் வசதிகளாக உள்ளிணைக்கப்பட்டவை.
-
வட்டுச் சேமிப்பகத்தில் குப்பையாகச் சேர்ந்துள்ள, தேவையற்ற கோப்புகளைக் கண்டறிந்து நீக்குகின்ற வட்டுத் தூய்மையாக்கி (Disk Cleanup).
-
வட்டில் சேமிக்கப்பட்டுள்ள கோப்பகம் மற்றும் கோப்புகளின் வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள பிழைகளைச் சரிசெய்து, வட்டிலுள்ள பழுதான பகுதிகளைக் (Bad Sectors) கண்டறிந்து அவற்றில் தகவல் எழுதப்படாதவாறு ஒதுக்கி வைக்கும் வட்டு பழுதாய்வி (Check Disk /Scan disk)
-
புதிதாக வட்டு நிறுவப்பட்டதும் அதனை தகவல் எழுதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கவும், வட்டில் பழுதேற்படும் போது அதிலுள்ள தகவல்கள் அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக வடிவமைக்கவும் பயன்படும் வட்டு வடிவமைப்பி (Format)
-
வட்டிலுள்ள முக்கியமான தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக நகலெடுத்து வைத்துக் கொள்ள உதவும காப்பு நகலாக்கி (Back up).
-
கோப்புகளைப் பாதிக்கும் நச்சு நிரல்களைக் கண்காணிக்கவும், வெளியாட்கள் நம்மை யறியாமல் நமது கணினியில் அத்துமீறிப் புகுந்து தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும் உதவும் தீச்சுவர்கள். (Firewall).
இதுபோன்ற முறைமைப் பயன்கூறுகள் பலவும் இன்றைய நவீன இயக்க முறைமைகளில் பெரும்பாலும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் இவற்றைத் தனியாகவும் விற்பனை செய்கின்றன. அவற்றை வாங்கி, கணினியில் நிறுவிக் கொள்ளவும் முடியும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.ஒரு கணினியில் கட்டாயமாக இருக்க வேண்டிய மென்பொருள் எது?2.கணினி மென்பொருளின் முப்பெரும் பிரிவுகள் எவை?3.பயனருக்கும் கணினிக்கும் இடையே இயக்க முறைமை எவ்வாறு செயல்படுகிறது?4.இயக்க முறைமையின் முக்கியமான மேலாண்மைப் பணிகள் எவை?5.வரைகலை இடைமுகத்தின் பயன் யாது?6.இயக்க முறைமைகளின் நான்கு பெரும்பிரிவுகள் எவை? எடுத்துக்காட்டுகள் தருக.7.சில முறைமைப் பயன்கூறுகளைக் குறிப்பிடுக. -