தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பயன்பாட்டு மென்பொருள்

  • 5.3 பயன்பாட்டு மென்பொருள் (Application Software)

    தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு அரசுத் துறைகளிலும், பெரிய நிறுவனங்களிலும் பயன்படுத்தப் பட்டன. அதன்பின் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சிறு சிறு வணிக நிறுவனங்களுக்கும் பரவின. இன்றைக்கு வீடுகளிலும்கூட கணினிகள் உலா வருகின்றன. சொந்தக் கணினியின் வருகைக்குப்பின் உற்பத்தி பெருகியதும் கணினியின் விலை குறைந்ததும் இப்பரவலுக்குக் காரணம் ஆகும். வல்லுநர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களும் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் காரணமாய் மென்பொருள் உருவாக்கத்திலும் புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் நடைமுறைப் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க மென்பொருள்கள் உருவாக்கப் பட்டன. இவை பயன்பாட்டு மென்பொருள்கள் எனப்பட்டன.

    இணையத்தின் வருகைக்குப் பின், வீடுகளில் கணினியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. வீடுகளில் பெரியவர்களும் குழந்தைகளும் பயன்படுத்தும் பொழுதுபோக்கான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. வீடுகளில் அலுவலகங்களில், இன்றைய உலா மையங்களில் (Internet Browsing Centre) இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கூடியுள்ளது. இணையச் சேவைகளுக்கான பயன்பாட்டு மென்பொருள்களும் ஏராளமாய் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது பயன்பாட்டிலுள்ள பயன்பாட்டு மென்பொருள்களை வகைப்படுத்திக் காண்போம்

    5.3.1 வீட்டுப் பயன்பாடுகள் (Home Applications)

    வீட்டுப் பயன்பாடுகள் என்பவை பெரும்பாலும் பொழுதுபோக்கு மென்பொருள்களாகும். இன்றைக்கு, ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி இன்றிமையாத பொழுதுபோக்குச் சாதனமாக இடம் பெற்றுள்ளது. அதுபோலக் கணினியையும் வீட்டிலுள்ள குழந்தைகளும் பெரியவர்களும் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்துவதற்கு வழியுள்ளது. அதற்கான மென்பொருள் தொகுப்புகளைப் பார்ப்போம்.

    ஊடக இயக்கிகள் (Media Players)

    இந்த வகை மென்பொருள்கள் இசைப் பாடல்களைக் கேட்பதற்கும், நிழற்படக் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுகின்றன. தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் திரைப்படங்களைக் கணினியில் கண்டு களிக்க முடியும். இசைப்பாடல் ஆல்பங்கள், திரைப்பாடல் திரட்டுகள் கேட்பொலிக் குறுவட்டுகளில் (Audio CDs) கிடைக்கின்றன. திரைப்படங்கள் நிகழ்படக் குறுவட்டு (Video CD) மற்றும் துடிமப் பல்திறன் வட்டு (DVD) களில் கிடைக்கின்றன. அவற்றைக் கணினியிலுள்ள குறுவட்டு இயக்கத்தில் வைத்து இயக்க முடியும். ஊடக இயக்கி மென்பொருள் அவற்றை இயக்குகிறது. இன்றைக்கு விண்டோஸ் மீடியா பிளேயர், ரியல் பிளேயர், குவிக்டைம் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும் ஊடக இயக்கிகளாகும்.

    குரல் பதிவிகள் (Voice Recorder)

    பேசுவதையும் பாடுவதையும் கணினியில் பதிவுசெய்து, கோப்புகளாக வட்டுகளில் சேமிக்க முடியும். அந்தக் கோப்புகளை இயக்கிப் பேச்சையும் பாட்டையும் மீண்டும் கேட்டு மகிழ முடியும். குரல் பதிவி (Voice Recorder) மென்பொருள் இதற்குப் பயன்படுகிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒலிப்பதிவி (Sound Recorder) மென்பொருள் உள்ளிணைக்கப் பட்டுள்ளது.

    தூரிகைகள் (Painting)

    தூரிகை கொண்டு திரைச் சீலைகளில் ஓவியங்கள் தீட்டுவது போலக் கணினியிலும் ஓவியங்கள் தீட்டி மகிழ முடியும். பெயின்ட், பெயின்ட் பிரஸ் என்கிற மென்பொருள்கள் விண்டோஸ் இயக்க முறைமையில் உள்ளன.

    விளையாட்டுகள் ( Games)

    கணினியின் தொடக்க காலம் தொட்டே, கணினியில் விளையாட்டு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டாஸ் இயக்க முறைமையின் செல்வாக்குக்கு, அதில் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு மென்பொருள்கள் ஏராளமாகக் கிடைத்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகும். பொழுதுபோக்குக்கான மிகவும் எளிய விளையாட்டுகள் மட்டுமன்றி, அறிவுக் கூர்மையோடு விளையாடும் விளையாட்டுகளும் உண்டு. கணினியோடு சதுரங்கள் விளையாடி, அவ்விளையாட்டில் திறனை வளர்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தம் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான விளையாட்டுகளும் உண்டு. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், டாஸில் விளையாடக் கூடிய ஏராளமான விளையாட்டுகள் பயனர்களுக்கு இலவசமாகவே கிடைத்தன. நெகிழ்வட்டுகளில் எளிதாக நகலெடுத்துப் பயன்படுத்த முடியும். இன்றைக்கு விண்டோஸில் சீட்டுக்கட்டு விளையாட்டுகள் செல்வாக்குப் பெற்றவை.

    கணிப்பி (Calculator)

    கூட்டல், பெருக்கல் என சிறு சிறு கணக்கீடுகளைச் செய்வதற்குக் கணிப்பியைப் பயன்படுத்துகிறோம். கணிப்பியைப் போலவே செயல்படும் மென்பொள் உள்ளது. விண்டோஸ் இயக்க முறைமையில் உள்ளிணைக்கப்பட்ட பயன்பாடாக இது உள்ளது. இந்த மென்பொருளின் பெயர் கால்குலேட்டர். பொறியியல் மாணவர்கள் பயன்படுத்தும் அறிவியல் கணிப்பி (Scientific Calculator) யும் இந்த மென்பொருளில் உள்ளடக்கம்.

    உரைத் தொகுப்பி (Text Editor)

    ஏதேனும் சுருக்கமான தகவல்களை, விவரங்களை, குறிப்புகளை மறந்துவிடாமல் இருக்க கணினியில் பதிவுசெய்து வைத்துக் கொள்ள எளிய உரைத் தொகுப்பி மென்பொருள்கள் உள்ளன. விண்டோஸ் இயக்க முறைமையில் நோட்பேடு (Notepad), வேர்டுபேடு ( Wordpad) போன்ற மென்பொருள்கள் உள்ளன.

    5.3.2 அலுவலகப் பயன்பாடுகள் (Office Applications)

    நாம் முன்பே அறிந்தபடி அலுவலகப் பயன்பாடுகள் பலவற்றுக்குமான மென்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அலுவலகக் கூட்டுத் தொகுப்பு (Office Suite) என்ற பெயரில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான எம்எஸ் ஆஃபீஸ் என்னும் கூட்டுத் தொகுப்பு உலகத்திலேயே மிகவும் அதிகமான கணினிகளில் பயன்படுத்தப் படுகிறது. வணிக நிறுவனம் மற்றும் வீட்டுக் கணினிகளும் கூட இவை இடம் பெற்றுள்ளன. ஸ்டோர் ஆஃபீஸ், ஓப்பன் ஆஃபீஸ், வேர்டு பெர்ஃபெக்ட், ஸ்மார்ட் சூட் என்கிற கூட்டுத் தொகுப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. அலுவலகக் கூட்டுத்தொகுப்பில் அங்கும் வகிக்கும் சில பயன்பாட்டு மென்பொருள்களைக் காண்போம்.

    சொல் செயலி (Word Processor)

    ஆவணங்களை உருவாக்கிக் கையாளப் பயன்படுகிறது. ஒருபக்கக் கடிதம் முதல் ஆயிரம் பக்கப் புத்தகம் உட்பட எப்படிப்பட்ட ஆவணங்களையும் உருவாக்கலாம். ஆவணங்களுக்கு அழகு சேர்த்தல், பத்திகளை மற்றும் பக்கங்களை வடிவமைத்தல், பக்க வாரியாக அச்சிடல் போன்ற வசதிகள் இருக்கும். சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் வசதி குறிப்பிடத் தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கடிதத்தை பலருக்கும் அவரவர் முகவரியிட்டு தனித்தனிக் கடிதமாகத் தயார் செய்து அச்சிடும் மெயில்ஜார்ஜ் என்னும் வசதி பெரும்பாலான சொல்செயலிகளில் உள்ளது.

    விரிதாள் (Spread Sheet)

    நிதிக் கணக்கீடுகள் தொடர்பான அலுவலகப் பணிகளுக்கு மிகவும் உகந்தது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் - இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எத்தகைய கணக்கு வழக்குகளின் விடைகளையும் தானியங்கு முறையில் (Automatic) , உடனடியாக (Instantaneous) அறிந்து கொள்ள முடியும். அலுவலகப் பணியாளர்களின் சம்பளக் கணக்கு, வருமானவரிக் கணக்கு, வரவு-செலவுக் கணக்கு, லாப-நட்டக் கணக்கு அனைத்தையும் மிக விரைவாகவும், மிக எளிதாகவும் தயாரிக்க முடியும். இறுதி விடையைக் கணக்கிடுவதற்கான வாய்பாடுகளை (Formulas) ஒருமுறை வரையறுத்துவிட்டால் போதும். அதன் பிறகு, உள்ளீட்டுத் தரவுகளில் (Input date) மாற்றம் செய்தால், வெளியீட்டு விடை உடனடியாகத் தானாகவே மாற்றம் அடையும். பதிவு செய்து வைத்துள்ள தரவு மதிப்புகளின் அடிப்படையில் ஒரு சுட்டிச் சொடுக்கில் வரைபடங்களை (Graph/chart) உருவாக்க முடியும் என்பது இந்த மென்பொருளின் சிறப்புக் கூறு. அலுவலகங்களில் மட்டுமன்றி சிறிய, பெரிய வணிக நிறுவனங்களின் விற்பனை, நிதி, கணக்குப் பிரிவுகளில் மிகவும் பயன்படுகிறது.

    தரவுத்தளம் (Data base)

    அடிப்படையான தரவுகளைச் சேகரித்து, சேமித்து வைத்துக்கொண்டு, பின்னால் தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் விவரங்களை, விரும்புகின்ற வடிவமைப்பில் வெளியீடாகப் பெற்றுப் பயன்பெற இந்த மென்பொருள் உதவுகிறது. பணியாளர்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பால், இனம், கல்வித் தகுதி. பணிப்பொறுப்பு, பணியில் சேர்ந்த நாள், அடிப்படைச் சம்பளம் போன்ற விவரங்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டால், இந்த மாதம் பணி ஓய்வு பெறுபவர்களின் பட்டியல், பட்டமேற்படிப்பு முடித்த பெண் பணியாளர்களின் பட்டியல், குறிப்பிட்ட பணிப்பொறுப்பில் பதவி உயர்வுக்கான பணிமூப்புப் பட்டியல் (Seniority List) போன்ற எத்தகைய விவரங்களையும் ஒருசில சுட்டிச் சொடுக்கில் பெற்றுவிட முடியும். வணிக நிறுவனங்களில் மூலப்பொருள், கொள்முதல், உற்பத்தி, விற்பனை, சரக்கிருப்பு போன்ற தரவுகளை, உடனுக்குடன் பதிவு செய்து வைத்துக் கொண்டு, வணிக நடவடிக்கைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு (Decisions) உதவுகின்ற எத்தகைய அறிக்கைகளையும் உடனுக்குடன் பெற முடியும்.

    முன்வைப்பி (Presentation)

    ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த, மேலாளர் பணியாளர்களின் திட்டப்பணிகளை விளக்கிட, வணிகப் பிரதிநிதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்பொருள் (Product) பற்றி எடுத்துரைக்க, பேச்சாளர், தான் சொல்லவந்த கருத்தை முன்வைக்க இந்த மென்பொருள் உதவுகிறது. உரைவிளக்கம், புள்ளி விவரம், அட்டவணை, வரைபடம், ஒலி மற்றும் வரைகலைப் படங்கள் கொண்ட சிலைடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி விளக்கம் உரைக்க இது உதவுகிறது. அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கையாளும் வழிமுறைகளை அடுத்துவரும் பாடங்களில் (தொகுதி-2) விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

    5.3.3 வணிகமுறைப் பயன்பாடுகள் (Commercial Applications)

    பயன்பாட்டு மென்பொருள்களில் சில, ஒருவர் தொழில் செய்து வருமானம் பெறுவதற்கும் உதவுகின்றன. பெரிய நிறுவனங்கள் இவற்றைப் பரந்த அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய தொழிலாகவும் நடத்த முடியும். வீட்டில் ஒரேயொரு கணினியை வைத்துக் கொண்டு, சுயதொழில் போலவும் நடத்தி, வருமானம் ஈட்டலாம். பொழுது போக்காகப் பகுதிநேரத் தொழிலாகவும் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்த முடியும்.

    கணினிப் பதிப்பகம் (Desktop Publishing -DTP)

    முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதில் பலருடைய உழைப்பு தேவையாக இருந்தது. வார்ப்பு எழுத்துருக்களைக் கொண்டு ஒருவர் அச்சுக் கோக்க வேண்டும். அச்சிட்ட நகல் பக்கங்களை ஒருவர் பிழைதிருத்த வேண்டும். அதனடிப்படையில் அச்சக் கோப்பை மாற்றியமைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு பக்கமாக அச்சிட்டு எடுக்க வேண்டும். ஒரு புத்தகம் அச்சிட்டு முடித்த பிறகே அடுத்த புத்தகம் அச்சிட முடியும். ஏனெனில் எழுத்து அச்சுக்கள் போதா. ஒரு பதிப்பு வெளியிட்ட பின் அதில் திருத்தம் செய்து அடுத்த பதிப்பு வெளியிட வேண்டுமெனில், ஒரு புதிய புத்தகம் அச்சிடுவதுபோல அனைத்துப் பணிகளையும் மீண்டும் செய்திட வேண்டும்.

    கணினிப் பதிப்பக மென்பொருளில் ஒரு புத்தகம் அச்சிடுவதற்குரிய முன்னோடிப் பணிகள் அனைத்தையும் ஒருவரே செய்து முடிக்க முடியும். ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்களுக்கும் அச்சு நகல் தயாரிக்க முடியும். அடுத்தடுத்த பதிப்புகளை மிக எளிதாகத் திருத்தி வெளியிட முடியும். உரைப் பகுதிகளை விசைப் பதிவிடல் (Typing) பக்க ஓரம், பத்தி, தலைப்புகளை வடிவமைத்தல், பக்கங்கள், அத்தியாயங்களை ஒழுங்கமைத்தல், இடையிடையே அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் வரைகலைப் படங்களைச் சேர்த்தல், பக்க எண், பக்க முகப்பி (Header) , முடிப்பி (Footer) , அடிக்குறிப்பு ஆகியவற்றை மிக எளிதாக அமைக்க முடியும். பேஜ் மேக்கர் (Page maker) என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினிப் பதிப்பக மென்பொருளாகும்.

    ஒளிப்படத் திருத்தி (Photo Editing)

    திருமணம் போன்ற விழாக்களில் எடுக்கப்படும் ஒளிப்படங்களை அழகுற அமைத்து ஆல்பங்கள் தயாரிக்க இந்த மென்பொருள்களைப் பயன்படுத்த முடியும். கோரல்டிரா, போட்டா ஷாப் போன்றவை இந்த வகை மென்பொருளாகும். பெரும்பாலான ஒளிப்பட நிலையங்கள் (Photo studios) இந்த மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றன.

    வரைகலை/அசைவூட்டும் (Graphics/Animation)

    திரைப்படங்களில் கற்பனைக் காட்சிகளை அமைப்பதில் வரைகலைத் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த வகை மென்பொருள்களின் உதவியுடன் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு முழுத் திரைப்படத்தையே உருவாக்கி விட முடியும். மிகவும் புகழ்பெற்ற ஸு ராசி பார்க், ஸ்பைடர் மேன், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் நம்ப முடியாத காட்சிகளை உருவாக்க வரைகலை/அசைவூட்ட மென்பொருள்கள் பயன்பட்டுள்ளன. மாயா என்பது இந்த வகை மென்பொருளாகும்.

    5.3.4 இணையப் பயன்பாடுகள் (Internet Applications)

    இணையத்தின் வருகைக்குப் பின் மனிதர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைதூர நாடுகளில் வாழும் உறவினர்களுக்குக் கடிதம் எழுதிப் பதில்பெற மாதங்கள், வாரங்கள் ஆகும் காலங்கள் மாறிவிட்டன. எவ்வளவு தொலைவான நாடாயினும் மடல் அனுப்பிய மறு நிமிடமே பதில்பெற இணையம் வழிவகை செய்துள்ளது. இணையத்தின் வழியே இரு வேறு நாடுகளில் உள்ளோர் நேருக்கு நேர் உரையாடிக் கொள்ளவும் வசதி உள்ளது. இது போன்று பல்வேறு பயன்பாடுகளுக்கான மென்பொருள்கள் இணையத்தில் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

    தேடுபொறி (Search Engine)

    இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடித் தருவதற்கென தேடுபொறிகள் உள்ளன. தேடுபொறி என்பது ஒரு கருவியன்று. அது ஒரு மென்பொருளாகும். ஒரு சொல்லையோ சொல்தொடரையோ தந்து, அது பற்றிய தகவல்களைத் தேடித் தருமாறு ஆணையிட்டால், உலகம் முழுவதிலும் பல்வேறு கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அலசி, ஆய்ந்து, அச்சொல் அல்லது சொல் தொடர் தொடர்புடைய ஆவணங்களைச் சில நொடிகளில் பட்டியலிட்டுக் காட்டும். அவற்றுள் தேவையானவற்றை விரித்துப் படித்துப் பார்க்கலாம் ; அச்சிட்டுக் கொள்ளலாம் ; அல்லது நமது கணினியில் பதிவிறக்கிக் (download) கொள்ளலாம். யாகூ (yahoo!) , கூகிள் (Google) , எம்எஸ்என் (MSN) ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் தேடுபொறி மென்பொருள் களாகும்.

    மின்னஞ்சல் (Email)

    மரபு வழிப்பட்ட அஞ்சல் போக்குவரத்து முறையை நத்தை அஞ்சல் (Snail Mail) என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவது உண்டு. அதன் வேகம் அப்படிப்பட்டது. இணையம் வழி நடைபெறும் மின்னஞ்சல் போக்குவரத்து அக்குறையைப் போக்கிவிட்டது. மின்னஞ்சலின் சிறப்புக்கூறு அதன் முகவரியாகும். [email protected] என்றும் மூன்று சொல் முகவரி உலகில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டும். ஒருவர் வீடுமாறினாலும், ஊர் மாறினாலும், நாடே மாறிச் சென்றாலும் இந்த முகவரியில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. இந்த முகவரிக்கு வரும் மடல்களை அவர் உலகில் எந்த மூலையில் இருந்துகொண்டும் படித்தறியலாம். அடுத்த நொடியே பதிலும் அனுப்பி விடலாம். மின்னஞ்சலுடன் வேறு ஆவணங்கள், படங்கள், குரல்பதிவு, நிகழ்படக் காட்சிகளையும் கூட உடனிணைப்பாக (Attachment) அனுப்பி வைக்க முடியும். இணையத்தில் இத்தகைய மின்னஞ்சல் சேவையை பல நிறுவனங்கள் இலவசமாகவே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஹாட்மெயில்(மைக்ரோசாஃப்ட்), யாகூ மெயில், ஜி மெயில் (கூகிள்), ரீடிஃப்மெயில் ஆகியவை அவற்றுள் சில.

    இணைய விளையாட்டுகள் (Internet Games)

    கணினியில் பொழுதுபோக்கான விளையாட்டுகள் உள்ளன எனப் பார்த்தோம். அந்த விளையாட்டுகளில் போட்டியாளராகக் கணினியே இருக்கும். ஆனால் இணைய விளையாட்டுகளில் நம்மைப் போன்றே இன்னொரு மனிதருடன் விளையாட முடியும். இணையத்தில் நுழைந்தபின், சதுரங்க விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். உங்களைப் போன்றே உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்னொருவரும் அதே நேரத்தில் சதுரங்கம் விளையாடத் தேர்ந்தெடுக்கிறார் எனில் அவரும் நீங்களும் சதுரங்கம் விளையாடலாம். எவ்வளவு இனிமையான அனுபவம் ! விண்டோஸ் எக்ஸ்பீ இயக்க முறைமையில் ஐந்து இணைய விளையாட்டுகள் உள்ளிணைக்கப் பட்டுள்ளன. மேலும், பல இணையப் பயன்பாடுகள் பற்றி மூன்றாம் தொகுதியில் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:49:24(இந்திய நேரம்)