தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A05122-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    தமிழ் மொழியில் இதுவரை கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர். இவரது காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. இதுவே தமிழ்மொழி வரலாற்றில் தொல்காப்பியர் காலம் எனக் கூறப்படுகிறது. இக்காலகட்டத் தமிழ்மொழியின் அமைப்பையும் வரலாற்றையும் அறிய உதவும் தலைசிறந்த சான்றாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. தமிழ் மொழி வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் இந்நூலையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரம், இலக்கியத்தில் பாடுவதற்கு உரிய பொருளாகிய பழந்தமிழரின் காதல் மற்றும் வீர வாழ்விற்கான இலக்கணத்தைப் பேசுகிறது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டும் தொல்காப்பியர் காலத் தமிழ்மொழியின் அமைப்பை நன்கு விளக்கிக் காட்டுகின்றன. எழுத்ததிகாரத்தில், தமிழ்மொழியின் ஒலியமைப்பு விரிவாகக் கூறப்படுகிறது. சொல்லதிகாரத்தில், சொல் அமைப்பு, தொடர் அமைப்பு ஆகியன விளக்கமாகக் கூறப்படுகின்றன. இந்த இரண்டு அதிகாரங்களிலும் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் இன்றைய மொழி நூலார் ஒரு மொழியின் அமைப்பை ஒலியனியல் (Phonetics), சொல்லியல் அல்லது உருபனியல் (Morphology), தொடரியல் (Syntax) என்று பிரித்து ஆராய்ந்து கூறும் கருத்துகளோடு பெரும்பாலும் ஒத்து அமைந்துள்ளன.

    இப்பாடத்தில் தொல்காப்பியத்தின் வழிநின்று, தொல்காப்பியர் காலத் தமிழின் ஒலியனியல் பற்றிக் கூறப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 14:03:41(இந்திய நேரம்)