Primary tabs
-
2.6 தொகுப்புரை
தொல்காப்பியர் காலத் தமிழில் உயிரும் மெய்யுமாகிய முப்பது எழுத்துகளே அடிப்படை ஒலிகளாக வழங்கின. இவற்றைச் சார்ந்து குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துகள் வழங்கின. குற்றியலுகரமும், ஆய்தமும் தாம் சார்ந்து வரும் வல்லின எழுத்துகளின் கடினமான ஒலியமைப்பை எளிமைப்படுத்தவே வழங்கியுள்ளன. எனவே இவை தொல்காப்பியர் காலத் தமிழ் ஒலியியலில் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள் ஒவ்வொன்றையும் உச்சரிக்க வேண்டிய முறை பற்றித் தொல்காப்பியர் மிகவும் திறம்படக் கூறியுள்ளார். அவர் கூறி உள்ள கருத்துகள் பெரும்பாலானவை இக்கால மொழிநூலார்க்கு உடன்பாடாக உள்ளன. பண்டைத் தமிழில் மெய்யெழுத்துகள், எகர ஒகரக் குறில் உயிர்கள், சார்பெழுத்துகள் முதலிய எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்ட இயல்பினைத் தொல்காப்பியர் தெரிவிக்கிறார். அவருடைய காலத்தில் சொற்களின் முதலில் எந்தெந்த எழுத்துகள் வந்தன எந்தெந்த எழுத்துகள் வரவில்லை என்பன பற்றித் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறார். சொல்லுக்கு இடையில் நிகழும் மெய்ம்மயக்கம் பற்றி விரிவான விதிகளைக் கூறியுள்ளார். இவ்விதிகள் அவரது காலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பினை நன்கு காட்டுகின்றன. மேலும் இவ்விதிகள் அவர் காலத்திற்குப் பின்பு பல நூற்றாண்டுகள் வரையிலும் தமிழின் ஒலியமைப்பைச் சிதைந்து விடாது காத்துள்ளன. இவற்றையெல்லாம் இப்பாடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.
8.தங்கம், கற்பு, சுக்கு, நுட்பம், எழுத்து, சால்பு, காப்பியம், கொம்பு, அண்ணம், கொற்றன் - இவற்றில் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும், உடனிலை மெய்ம்மயக்கமாகவும் அமைந்த சொற்களைப் பிரித்துக் காட்டுக.