Primary tabs
-
2.3 ஒலிகளின் ஒலிப்பு முறை
தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள், சார்பொலிகள் ஆகியவற்றை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் விரிவாக விளக்கிக் காட்டுகிறார். இதற்கெனவே அவர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். இவ்வியலில் அவர் கூறியுள்ள கருத்துகளில் பெரும்பாலானவை இன்றைய மொழி நூலார்க்கு உடன்பாடாக இருக்கின்றன.
இக்கால மொழி நூலார் ஒலியியலில் ஒலிப்பான்களையும் (Articulators) ஒலிப்பு முனைகளையும் (Point of articulation) ஒலிப்பு முறைகளையும் (Manners of articulation) அடிப்படையாகக் கொண்டு ஒலிகளின் உச்சரிப்பு முறையை விளக்குவர்.
தொல்காப்பியரும் பிறப்பியலில் இதே போலத் தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முறை பற்றிக் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும்.
உந்தியின் அடியாகத் தோன்றி எழுகின்ற காற்றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்று இடங்களில் நிலைபெறும். இவ்வாறு நிலைபெறும் காற்று, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளைப் பொருந்தி அமையும். வெவ்வேறு உறுப்புகள் ஒன்றோடு ஒன்று பொருந்தி அமைதலால் எழுத்துகள் வேறு வேறு வகையாகப் பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர்.
இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உந்தியின் அடியாகத் தோன்றி எழுகின்ற காற்று என்பதற்கு உந்தியால் (உதரவிதானத்தால்) உந்தித் தள்ளப்பட்டு நுரையீரலிலிருந்து வெளியேறும் காற்று எனப் பொருள் கொள்ள வேண்டும். இதுவே இக்கால அறிவியல், மொழியியல் உண்மைகளுக்குப் பொருந்துவது ஆகும்.
(உந்தி = நெஞ்சின் அடியே உள்ள வயிற்றுப் பகுதி (Diaphragm) இதனை உதரவிதானம் என்று கூறுவர்; மிடறு = தொண்டைப் பகுதியில் உள்ள குரல் வளை; அண்ணம் = மேல்வாய்; நெஞ்சு = நுரையீரல் (Lungs); தலை = பல், இதழ், நாக்கு, அண்ணம், மூக்கு ஆகிய உறுப்புகள் உள்ள பகுதி. (Buccal Cavity))
காற்று நுரையீரலில் (நெஞ்சில்) இருக்கும் போது அங்கே உயிர்க்கப்படுகிறது. உயிர்க்கப்பட்ட காற்று, தொண்டைப் பகுதியில் உள்ள குரல்வளை மடல்கள் (Vocal Cords) வழியே வரும் போது ஓசையாக (sound) மாறுகிறது ; தலைப்பகுதியில் உள்ள பல், நா, இதழ், அண்ணம் ஆகிய நான்கு ஒலியுறுப்புகளைக் கொண்ட வாய் வழியாகவும் மற்றும் மூக்கு வழியாகவும் வரும் போது எழுத்தொலியாக (Phone) மாறுகின்றது.
காற்று வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வரும் போது இதழ், நா ஆகிய உறுப்புகள் தம்முள் இயங்கியும், பல், அண்ணம் ஆகியவற்றைப் பொருந்தியும் வெவ்வேறு வகையாகச் செயல்படுவதால் வெவ்வேறு ஒலிகள் பிறக்கின்றன.
‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்கிறார் தொல்காப்பியர். மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வாயின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார். (Abercrombie, Elements of General Phonetics, p. 39.)
இக்கால மொழி நூலார் தமிழில் உள்ள உயிரொலிகளை அவற்றின் ஒலிப்புமுறை நோக்கி மூவகையாகப் பிரித்துள்ளனர். அவை வருமாறு:
இ, ஈ, எ, ஏ- முன் உயிர்(Front Vowels)அ, ஆ- நடு உயிர்(Central Vowels)உ, ஊ, ஒ, ஓ- பின் உயிர்(Back Vowels)இப்பாகுபாடு இவ்வெழுத்துகள் பிறக்கும்போது நாக்கு முறையே முன்னும், நடுவிலும், பின்னும் இருக்கும் நிலையை ஒட்டிச் செய்யப்பட்டது.
(ஐ, ஒள என்பன கூட்டொலிகள் ஆதலால் அவற்றை மொழி நூலார் குறிப்பிடவில்லை). தொல்காப்பியரும் மிகப் பழங்காலத்தில் உயிரொலிகளை மூவகையாகப் பிரித்துப் பிறப்பிலக்கணம் கூறியுள்ளார்.
அ, ஆ : வாயை அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும்.
இ,ஈ,எ,ஏ,ஐ : வாயை அங்காந்து கூறும் முயற்சியோடன்றி, மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.
உ, ஊ, ஒ, ஓ, ஒள : இதழ் குவி முயற்சியால் பிறக்கும்.
இப்பாகுபாடு ஒலியுறுப்புகளின் முயற்சி அடிப்படையில் செய்யப்பட்டது. ஆயினும் நாம் இங்குக் கவனிக்க வேண்டியது, தொல்காப்பியர் பகுத்துக் காட்டிய அதே ஒலிகளையே மொழியியலாரும் பகுத்துக் காட்டியுள்ளனர் என்பது தான்.
உள்ளே இருந்து வரும் காற்று வாய்வழியாகச் செல்லும்போது எங்கேயாவது ஓர் இடத்தில் நா, இதழ் ஆகிய ஒலிப்பான்களால் தடைப்படுத்தப்படுவதால் பிறக்கும் ஒலிகளே மெய்யொலிகள் ஆகும்.
- வல்லின மெல்லின ஒலிகளின் பிறப்பு
- இடையின ஒலிகளின் பிறப்பு
தொல்காப்பியர் ஒவ்வொரு வல்லின எழுத்தையும், அதற்கு இனமான மெல்லின எழுத்தையும் சேர்த்து இரண்டு எழுத்துகளுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். இடையின எழுத்துகளுக்குத் தனியே பிறப்பு முறை கூறுகிறார்.
இவ்வாறு ஒரு வல்லின எழுத்துப் பிறக்கும் இடத்திலேயே அதற்கு இனமான மெல்லின எழுத்தும் பிறக்கிறது. இரண்டு எழுத்துகளுக்கும் பிறப்பு முயற்சியும் ஒன்றே. அவ்வாறாயின் ஒன்றை வல்லினம் என்றும், மற்றொன்றை மெல்லினம் என்றும் தொல்காப்பியர் வேறுபடுத்திப் பாகுபாடு செய்தது ஏன்? வல்லின ஒலிகளை ஒலிக்கும்போது காற்று வாய் வழியாக மட்டுமே வருகிறது. ஆனால் மெல்லின ஒலிகளை ஒலிக்கும் போது காற்று வாய் வழியாக வருவதோடன்றி, மூக்கின் வழியாகவும் வருகிறது; ஒலிகள் மென்மையாகிவிடுகின்றன. இதனாலேயே மொழிநூலார் இவற்றை மூக்கொலிகள் என்று அழைக்கின்றனர்.
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற சார்பொலிகள் மூன்றும் முதலெழுத்துகளைச் சார்ந்தே வரும். அவை தாமே தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதவை. இவை மூன்றும் முதலெழுத்துகளில் எந்த மெய்யெழுத்துகளைச் சார்ந்து வருகின்றனவோ அவை பிறக்கும் இடத்திலேயே பிறக்கும் என்கிறார் தொல்காப்பியர். இம் மூன்று சார்பொலிகளும் பெரும்பாலும் வல்லின ஒலிகளைச் சார்ந்து வழங்குவதால் அவை பிறக்குமிடத்திலேயே பிறக்கும் என்பது தொல்காப்பியர் கருத்து எனலாம்.