தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:1-புவியியல் (Geography)

  • 4.1 புவியியல் (Geography)

    பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியன பற்றி விவரிக்கும் பாடம் புவியியல் என அழைக்கப்படும்.

    4.1.1 தட்பவெப்பம்

    தட்பவெப்பம் என்பது ஓர் இடத்திலுள்ள குளிர்ச்சியையும் வெம்மையையும் குறிப்பது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்டது. ஒரு மாநிலத்திலுள்ள தட்பவெப்பம் மட்டும் அறிந்திருந்தால் போதாது; எல்லா மாநிலங்களிலும் உள்ள தட்பவெப்ப நிலையையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் பாரதியார். அப்போது தான் ஒரு மாணவன் தன் தாய்த்திரு நாட்டின் முழு விவரமும் அறிய முடியும் என்பது அவரது எண்ணம். அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலுள்ள தட்பவெப்ப நிலையை அறியும் உலக அறிவும் பெற முடியும் என்பது அவருடைய முடிவு.

    4.1.2 காற்று

    உலகில் வான வெளியெங்கும் நிறைந்திருப்பதும், உயிரினங்கள் உயிர் வாழச் சுவாசிப்பதும், உணரக்கூடியதுமான ஒன்றே காற்று. இயற்கையில் வீசும் காற்று, உடம்புக்கு உற்சாகமும் மனத்துக்கு மகிழ்ச்சியும் தரும். மெல்லிய தென்றல் காற்றாக இயங்கி வாழ்க்கைக்கு இன்பம் தருவதும் உண்டு; அதே காற்று, அனைத்து உயிர்களுக்கும் துன்பம் செய்யும் புயலாக உருவெடுத்து மக்களை அழிப்பதும் உண்டு. இந்தக் காற்றில் உயிர் வாழ உதவும் பிராணவாயு கலந்துள்ளது. பிராணவாயு இல்லாவிடில் உயிர்கள் இறந்துவிடும். அதுவே உடலை இயக்கும் ஆற்றல். அதன் ஆற்றலைப் பாருங்கள்.

    காற்றே வா,
    இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த
    ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு

    (வசன கவிதை. காற்று - 6)

    என்று அதன் செயலைப் பாரதியார் காட்டுகிறார். மரம், செடி, கொடி முதலியன ஒளிச் சேர்க்கையின் (photosynthesis) போது (காற்றிலுள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு சூரிய ஒளி, பச்சையம் (chlorophyll) இவற்றின் உதவியால்) உணவுப் பொருளைத் தயாரிக்கும். இந்தச் செயல் நடைபெறும் போது பிராணவாயுவை வெளிவிடும். காற்றானது இலைகளையும், நீரின் அலைகளையும் உராய்ந்து வருவதால் இலைகள் வெளியிடும் புத்தம் புது பிராணவாயு கலந்த குளிர்ந்த காற்று வீசும் என்று பாரதி பாடியதாகக் கொள்ளலாம். தமிழ்நாடு வெம்மை மிகுந்தது. ஆகையால், குளிர்ந்த காற்றை விரும்பிய பாரதி இவ்வாறு பாடினார் போலும். காற்றின் பல்வேறு நிலைகளை, செயல்முறைகளை விரித்துக் கூறுகின்றார் பாரதி.

     

    பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது.
         நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகி விடுகிறது.
    தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகி விடுகிறது.
         அத்திரவத்திலே சூடேற்றினால் ‘வாயு’ வாகின்றது

    (வசன கவிதை, காற்று - 12)

     

    இந்தப் பாடல் திடப்பொருளைச் சூடேற்றினால் அது திரவமாகவும், வாயுவாகவும் மாறுவதைத் தெளிவாகக் காட்டுகிறது.

     

    புயல்
     

    பெரும்புயல் தோன்றக் காரணம் காற்று. காற்றுப் புயலாக மாறும் நிலையை,

     


     

    காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி,
         நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத்
         தூளாக்கித் தூளை நீராக்கிச்சண்டமாருதம் செய்கின்றான்

    (வசன கவிதை, காற்று - 2)

    (சூறாவளி = மிகுந்த வேகத்துடன் வீசும் காற்று, மின் = மின்னல், சண்டமாருதம் = பெருங்காற்று) என்ற பாடல் விளக்குகிறது.
     

    வெம்மையும் காற்றும்
     

    வெப்பத்தால் காற்றின் எடை குறையும். அப்போது வெப்பம் குறைந்த இடத்தை நோக்கிக் காற்று செல்லும் என்ற உண்மையை அறிந்தவர் பாரதி. வெம்மை மிகுந்த பிரதேசங்களில் இருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடி வருகிறது. அவ்வாறு வரும்போது, அது மேகங்களை ஓட்டிக் கொண்டு வருகிறது. அதனால் மழை பெய்கிறது. மழை பெய்யக் கடலும் காற்றுமே காரணம் என்ற உண்மையை உணர்த்துகிறார். (வசன கவிதை, கடல் - 2).
     

    4.1.3 கடல்
     

     

    உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த அலைகள் எழும் பெரும் பரப்பு கடல். உலகில் மூன்று பாகம் கடலாக உள்ளது. காற்றைப் பரப்புவது கடலென்று காட்டுகிறார் பாரதி. புவிஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் கடல் நீர் வெளியில் சிதறவில்லை என்ற உண்மையைப் பாரதியார் உணர்த்துகிறார்.

    கடலின் மேற்பரப்புச் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது. அது குளிர்ச்சி அடையும் போது மழையாகப் பெய்கிறது. மழை இல்லாவிடில் உலகில் உயிர் வாழ இயலாது. ஆகையால், காற்றைப் பார்த்து, ‘உலகிலுள்ள உயிர்கள் வாழ நீர் கொடுக்கும் கடலில் இருந்து நீரைச் சுமந்து கொண்டு வா. எங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேறி உலகம் செழிப்புற்று விளங்க இன்பம் தரும் மழையைப் பொழியச் செய்’ என்கிறார் பாரதி. உயிர்கள் வாழ நீர் வழங்கும் மழையை ‘உயிர் மழை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

     

    காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
    மழை, கொண்டு வா . . . .
    எங்கள் தாபமெல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
    இன்ப மழை பெய்தல் வேண்டும்

    (வசன கவிதை, கடல் - 2)

    (தாபம் = விருப்பம், தீர்ந்து = நிறைவேறி, தழைக்கும் = செழிக்கும்)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:15(இந்திய நேரம்)