தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:3-உயிரியல் (Biology)

  • 4.3 உயிரியல் (Biology)

    இது உயிர் வாழ்வன பற்றிய அறிவியல் ஆகும். இதன் கீழ்த் தாவரங்களைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறையும் (Botany) விலங்குகள் குறித்து விவரிக்கும் அறிவியல் துறையும் (Zoology) அடங்கும்.

     

    4.3.1 தாவரவியல் (Botany)

    தாவரங்கள் இல்லையென்றால் உலகில் வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது. தாவரங்கள் குறித்தும் மாணவர்கள் கற்க வேண்டும் என்று விரும்புகிறார் பாரதி. உலகில் புல் பூண்டு, செடி கொடிகள் முளைக்க மழை தேவை. மழை பெறக் காடுகள் தேவை என்பதை உணர்த்த பாரதி,

     

     

    காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்

    (பாரத தேசம் - 12)

    என்று குறிப்பிடுகிறார். காட்டின் இன்றியமையாமையை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பாடியிருக்கிறார்.

     

    ஜகதீச சந்திர வஸு - ஜகதீச சந்திர போஸ் சாதனை

     

    (பொதுவாக ஜகதீச சந்திர போஸ் என்ற பெயரை ஜகதீச சந்திர வஸு என்று எழுதுகிறார் பாரதியார்.)

    ஜகதீச சந்திர வஸு

    'ஐந்துக் (விலங்கு)களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து, மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ப்ராண சக்தி இருக்கிறது’

    (பாரதி கட்டுரைகள் - பக்.50)

    என்று கூறியிருப்பது செடிகளுக்கு உயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்ததைக் காட்டுகிறது. இதையெல்லாம் பாரதி ஏன் கூறுகிறார்?

    ஜகதீச சந்திர போஸைப் போல் பல அறிஞர்கள் உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் கூறுகிறார்.
     

    ‘செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைப் போடுகிறது. மறுபடி தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் . . . . . பார்க்கும் போது, செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பது ருஜுவாகிறது (நிரூபணமாகிறது)’

    (பாரதி கட்டுரைகள், பக்: 50,51)

     

    என்று பாரதி எழுதியிருப்பது மனிதரைப் போல் செடிக்கும் நாடியுணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்த ஜகதீச சந்திர போஸின் அறிவைப் போற்றும் நிலையில் உள்ளது.

     

    4.3.2 விலங்கியல் (Zoology)

     

     

    உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய தெளிவான அறிவு மாணவர்களுக்குத் தேவை என்று பாரதி எண்ணினார். இந்த உலகம் முழுவதிலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் உள்ளன. அவை கண்ணுக்குத் தெரிபவை, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் (microscopic forms) என்று இருவகைப்படும். உயிரினங்கள் பற்றி பாரதி,

     

    உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்?
    நீ கண் கண்ட தெய்வம்.
    எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
    எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
    உயிரே.
    நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
    தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.
    பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு,
         இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற
         உலகங்களிலுள்ள எண்ணே யில்லாத உயிர்த் தொகைகள்

    (வசன கவிதை, காற்று - 15)

     

    என்று பாடுகிறார். காற்றில் ஒரு சதுர அடி இடத்திற்குள் இலட்சக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. பெரிய உயிரின் உடலுக்குள் பல சிறிய உயிர்களும், சிறிய உயிர்களுள் அதைவிடச் சிறிய உயிர்களும் வாழ்கின்றன. பெரிது சிறிது என்னும் இருவேறு நிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளதை விளக்குகின்றார் பாரதியார்.

     

    4.3.3 மருத்துவம்

    கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகளினால் விஷக் கிருமிகள், நோய்கள் உண்டாகின்றன. இவை தண்ணீர், காற்று முதலியவற்றின் மூலமாகப் பரவுகின்றன, என்று ஐரோப்பியர் கூறியதைப் பாரதி முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மனம் மகிழ்ச்சியாகவும் இரத்தம் சுத்தமாகவும் இருப்பவர்களைப் பூச்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பது பாரதியார் எண்ணம். நோயை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கினால்(resisting power) பூச்சிகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீரும், காற்றும், நிலமும் இல்லாமல் உயிர் வாழ முடியாது. ஐரோப்பியர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால் இவை மூன்றையும் கண்டு அஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய எண்ணம் மாணவர் மனத்தில் சிறுவயதில் அழுத்தமாகப் பதிந்து விடும். அவர்கள் அதைக் கண்டு அஞ்சுவர். அவ்வாறு அச்ச மேற்படுத்துவதை, பாரதி விரும்பவில்லை. ஆகையால், நோய் வருமுன்பு உடலைப் பேண வேண்டும் என்று கூறுகிறார். மனிதர்கள் பூச்சியால் சாகமாட்டார். கவலையாலும், பயத்தாலுமே சாகிறார்கள் என்று எண்ணுகிறார்.

    இரத்தம் சுத்தமாக இருந்தால் நலமுடன் வாழ முடியும் என்ற உண்மையை இங்கு உணர்த்துகிறார் பாரதி.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    மேலை நாடுகளில் உள்ள தட்ப வெப்ப நிலையை இந்திய மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏன்?

    2.

    காற்று இலைகளையும் நீரின் அலைகளையும் உராய்வதால் என்ன கிடைக்கும்?

    3.

    அறிவியல் கலை சார்ந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று பாரதி கூறக் காரணம் என்ன?

    4.
    ஞாயிற்றினிடமிருந்து ஒளிபெறும் கோள்கள் யாவை?
    5.
    தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர் யார்?
    6.
    நோய் நெருங்காதிருக்க என்ன செய்ய வேண்டும்?
புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 18:57:17(இந்திய நேரம்)