தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:5-வேளாண்மை (Agriculture)

  • 4.5 வேளாண்மை (Agriculture)

    வேளாண்மை என்பது நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழிலைக் குறிக்கும்.

     

     

    4.5.1 விவசாயம்
     

     

    கிராமங்கள் நிறைந்த நாடு இந்தியா. நன்செய் புன்செய் பயிர்கள் விளையும் விவசாய நாடாக விளங்கியது. விவசாயத் துறையிலும் அறிவியல் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார் பாரதி. பள்ளிப் பருவத்திலேயே மாணவச்செல்வங்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு, விவசாயத் தொழிலில் தகுந்த ஞானமும் அனுபவமும் பெற வழிகாட்ட வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் விவசாயம் செய்தால், தொழில் இல்லை என்று யாரும் சோம்பியிருக்க வேண்டியதில்லை என்றார். எல்லோரும் தொழில் செய்தால் இல்லை என்ற சொல்லே இல்லை என்று ஆகிவிடும் அல்லவா?

     

    4.5.2 தோட்டக்கலை (Horticulture)

    இந்தக் கலை, பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடி கொடிகளையும், மரங்களையும் பராமரிக்கும் முறையைக் குறிப்பது ஆகும். பாரதியார் தம் கட்டுரையில் இதைத் ‘தோட்டப் பயிற்சி’ (பக்:392) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். நன்செய் புன்செய்ப் பயிர் மட்டுமல்லாமல் தோட்டப் பயிர்களைப் பராமரித்து வளர்ப்பதிலும் மாணவர்கள் அனுபவம் பெற வேண்டும். என்று கூறுகிறார் பாரதியார். (பாரதியார் கட்டுரைகள், பக்: 392) விவசாயம் என்ற ஒன்றையே நம்பியிருப்பதை விட, உணவுப் பொருள்களாக விளங்கும் காய், கனி முதலியவற்றைப் பயிர் செய்து பலனடைய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினார் போலும். இக்காலத்து அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடி, பூ போன்றவற்றை வளர்த்து அதுவே ஒரு தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளதைக் காணலாம். நோயின்றி வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் எவை என்று கண்டறிந்து மாணவர்கள் அவற்றைப் பயிர் செய்து வளமுடன் வாழலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:28(இந்திய நேரம்)