Primary tabs
-
‘வானவியல்’ என்பது விண்ணில் உள்ள விண்மீன்கள், கோள்கள் முதலியவற்றைப் பற்றிக் குறிப்பது ஆகும். பாரதியார், ‘பூமி சாஸ்திரம்’ என்ற கட்டுரையில் வானவியலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஞாயிறு, நிலா, காற்று இவை வானிலும் ஆகாயத்திலும் விளங்குபவை. இவை பற்றிய பாரதியின் எண்ணங்களைப் பார்ப்போமா?
‘ஸுர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’என்று தம் கட்டுரையில் (பக்: 382) வலியுறுத்துகிறார்.
பாரதியார் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு வானவியல் வெகுவாக முன்னேறி விட்டது. விண்ணில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றியே இயங்குகின்றன. ஆகவே, அது ‘சூரிய குடும்பம்’ என்று வழங்கப்படுகிறது. சூரியன் மிகவும் வெப்பமாக இருப்பதால் மனிதன் அங்குச் செல்ல இயலவில்லை. சூரியனிடமிருந்து ஒளிபெற்றுத் தண்ணொளி வீசும் நிலவில் 1969-இல் நீல் ஆம்ஸ்டிராங் என்னும் அமெரிக்க விண்வெளி வீரர் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தார். இக்காலத்து, மனிதர்கள் விண்வெளியில் பறக்கும் அளவு வானவியல் துறை முன்னேறி விட்டது. செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய்ந்து அறியும் நோக்கத்தில் விண்வெளிக் கலன்கள் அனுப்பப்படுகின்றன. ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த சாதனையாளர்கள் சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் தம்முடைய கடின உழைப்பால் சாதனை படைக்கின்றனர். ஆகையால் அறிவியல் கலையின் அனைத்துப் பிரிவையும் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் சேர்த்து உரிய முறையில் கற்பிக்க வேண்டும். முயற்சியும், உழைப்பும் கொண்ட மாணவர்கள் அந்த அறிவைப் பெற்றுப் பல புதிய உண்மைகளைக் கண்டறிய முயல்வர் என்று பாரதியார் கருதுகிறார். ஓய்வின்றி உழைத்தால் ஐரோப்பாக் கண்டம் போல் அறிவியல் துறையில் இந்தியா வளர்ந்து விடும் என்று பாரதியார் நம்பினார் எனக் கொள்ளலாம்.
பூமிக்கு மேல் தெரியும் கரிய நீல வெளி வானம் எனப்படும். நிலவில் மனிதன் காலடி வைத்தபோது பாரதி உயிரோடு இல்லை. ஆனால் அதற்கு முன்பே வானை அளந்து அதைப் பற்றி ஆராய வேண்டுமென்று பாடியிருக்கிறார். வான சாஸ்திரத்தில் சிறந்த அறிஞர்கள் சந்திர குப்த மன்னன் சபையில் இருந்ததாக வரலாறு காட்டுகிறது. ஆரியபட்டர் என்பவர் வானசாஸ்திரத்தில் வல்லவர். அவர்களோடு அந்தத் துறையின் வளர்ச்சி நின்று விடக் கூடாது, மேலும் தொடர வேண்டும் என்பது பாரதியின் விருப்பம். இந்த விருப்பத்தை,
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம் கற்போம்
வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்(பாரத தேசம் - 11)
என்ற பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார். அறிவியல் உண்மை மட்டும் தெரிந்தால் போதாது. அதைச் செயல்படுத்தும் திறமையும் தெரிந்திருக்க வேண்டும். அதன் உதவியால் வானை அளக்கலாம், கடல் மீனின் இயல்பை அறியலாம் என்று விளக்குகிறார்.கோள்கள்
சூரியனைப் போன்ற பெரு விண்மீனின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு அதைச் சுற்றி வரும் விண்வெளிப் பொருள்கள் கோள்கள் ஆகும்.
வானில் உள்ள விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவை எண்ணிலடங்காதன; அந்த அண்டங்கள் மிகுந்த வேகத்தில் இயங்கக் கூடியன; பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளன; ஒன்றிற்கொன்று மிகுந்த இடைவெளியில் இருக்கின்றன என்பன போன்ற அறிவியல் கருத்துகளைச் சொல்லோவியமாகத் தருகிறார் பாரதியார்.
விண்டுரைக்க, அறிய, அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை(மகாசக்தி வாழ்த்து - 1)
(அண்ட கோடிகள் = விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி எல்லை காணமுடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி. யோசனை = 9 மைல் தூரம், சமைத்தனை = படைத்தனை)
இந்தப் பாடல் அண்டங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆற்றலைப் பற்றியும் அவற்றின் இயக்கத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
இடைவிடா இயக்கம்
மேலும், கோள்கள் அனைத்தும் இயங்குவதால் அவை உயிருடையவை. அவை இடைவிடாமல் இயங்குகின்றன என்பதை,
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது! அகில முழுதும் சுழலுகிறது!
சந்திரன் சுழல்கின்றது, ஞாயிறு சுழல்கின்றது
. . . வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று
கொண்டே தான் இருக்கின்றன!(வசன கவிதை, காற்று - 13)
(விசை = வேகம், அகிலம் = உலகம்)
என்ற பாடல் வாயிலாக வெளியிடுகிறார். சுழல வேண்டுமென்றால் இயக்கமாகிய ஆற்றல் தேவை. இயங்குகிறது என்றால் அவை உயிருடையன என்று பொருள் ஆகிறது. உயிருள்ளவை என்று கருதப்படும் மனிதன், மரம், செடி, கொடி, விலங்குகள் மட்டுமல்லாமல் இந்த உலகிலுள்ள கோள்களையும் உயிருடையதாய்ப் பார்க்கிறார் பாரதி. கோள்களின் இயக்கம் எதை உணர்த்துகிறது? விண்ணிலுள்ள கோள்கள் கால நேரம் தவறாமல் தம் கடமைகளைச் செய்கின்றன. அவை முறையாக இயங்காவிடில் உலகில் இயக்கமே நின்றுவிடும். மனிதனும் அதுபோல் இமைப்பொழுதும் சோராமல் காலம் தவறாமல் உழைக்க வேண்டும் என்பதை அவை உணர்த்துகின்றன.
பூமிக்கு இன்றியமையாத வெப்பத்தையும், ஒளியையும் கொடுத்து உதவும் விண்மீன் ஞாயிறு (சூரியன்) ஆகும்.
பாரதியார் விநாயகரையும், பராசக்தியையும் அனைத்துமாய்ப் பார்த்துப் பரவசமடைந்தது போல் ஞாயிற்றையும் பார்த்து,
நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து
உயிர் தருகின்றாய்! உடல் தருகின்றாய்,
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்(வசன கவிதை, ஞாயிறு - 2)
என்று பாடி, அது எல்லாவற்றிலும் கலந்திருப்பதாகக் காட்டுகிறார். இது மாணிக்கவாசகர் பாடிய,
வான்ஆகி மண்ஆகி வளிஆகி ஒளிஆகி
ஊன்ஆகி உயிர்ஆகி உண்மையும்ஆய் இன்மையும்ஆய்(திருவாசகம் , அறிவுறுத்தல் - 4)
என்ற பாடலை நினைவூட்டுவதைக் காணலாம். ஞாயிறு, கடலில், மின்னலில், இரத்தினத்தின் ஒளியில், நெருப்பில், தீக் கொழுந்தில், இன்னும் பிறவற்றில் நிறைந்து இருப்பதாகப் பாரதியார் பாடுகிறார். ஒளிவிடும் அனைத்திலும் இருப்பது ஞாயிறே என்பது அவர் எண்ணம். அது உடலையும், உயிரையும் வளர்க்கிறது; நீர் தருகிறது; காற்றாக வீசுகிறது - என அது எல்லாமாக விளங்குவதாகக் காட்டுகிறார். இதில் வானவியல் கருத்துகள் பொதிந்துள்ளன.
ஒரு கணத்தில் பத்தாயிரம் மைல் வேகத்தில் இயங்கும் ஆற்றல் உடைய ஞாயிற்றின் இயல்பை,
காத மாயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகியோடும் கதிரினம்(சூரிய தரிசனம் - 2)
(காதம் = 10 மைல் தூரம், கணம் = மிகக் குறைந்த காலம், கடுகி = விரைந்து)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி முதலிய கோள்கள் ஞாயிற்றில் இருந்து ஒளிபெற்று ஒளிரும் என்ற அறிவியல் உண்மையை வசனகவிதையில் (ஞாயிறு - 10) தெரிவிக்கிறார்.
கோள்களை அவர் ‘வீடு’ என்று சொல்கிறார். பூலோகம், மண்ணுலகில் உள்ள உயிர்களுக்கு வீடாக விளங்குகிறது. கோள்கள் எல்லாம் தீப்பந்தத்திலிருந்து பொறிகள் வீசுவது போல, ஞாயிற்றினிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்று குறிப்பிடுகிறார். கோள்கள் மட்டுமா சூரியனிடமிருந்து ஒளி பெறுகின்றன? மனிதனும் ஒளி பெறுகிறான். மனிதனுக்கு இருப்பது ஊனக்கண். ஒளியின் உதவியின்றி அவனால் எதையும் பார்க்க இயலாது.
ஞாயிற்றின் வித்தை
ஞாயிற்றின் வெப்பத்தால் கடலின் மேற்பரப்புச் சூடாகிறது, பின்பு ஆவியாகி மேலே செல்கிறது. மேலே சென்ற நீராவி குளிர்ச்சியடைந்து மீண்டும் மழையாகப் பெய்கிறது. மழைக்குக் காரணம் ஞாயிறு என்ற அறிவியல் உண்மையை பாரதி,
ஞாயிறு வித்தை காட்டுகிறான்
கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகிறான்
மழை இனிமையுறப் பெய்கின்றது(வசன கவிதை - 11)
(ஞாயிறு = சூரியன்)
என்று காட்டுகிறார்.
ஞாயிறு இருளை நீக்கும் நிலையைப் பாரதியார்,
ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?(வசன கவிதை, ஞாயிறு - 5)
(முன்னும் பின்னும் = பகலும் இரவும்)
என்று பாடுகிறார். இப்பாடலில் ஞாயிற்றையும் இரவையும் பார்த்து நீவிர் ஒரு தாயின் குழந்தைகளா? பகலிலும் இரவிலுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் அன்னை ஆணையிட்டிருக்கிறாளா? என்று அவர் பாடியிருப்பது சுவையாக உள்ளது.
நிலவு ஞாயிற்றினிடமிருந்து ஒளி பெற்று இரவில் தண்ணொளியாக வீசுகிறது. அறிவியல் ஆய்வு வளர்ச்சியினால் மனிதன் நிலவை அடைந்தான். முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் இதை ‘மனித குலத்தின் ராட்சச முன்னேற்றம்’ (Giant leap of Mankind) என்று கூறினார். பாரதியும் நிலவின் தன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டு, சந்திர மண்டலத்தின் இயல்பை அறிய முற்படவேண்டும் என்ற கருத்தில்,
‘சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்’
(பாரத தேசம் - 11)
என்று பாடியிருக்கிறார்.