தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4-4:4-பொருளறிவியல் (Physical Science)

  • 4.4 பொருளறிவியல் (Physical Science)

    இது பொருள்களின் இயல்பை விளக்கும் அறிவியல் துறையைக் குறிப்பிடும். இதன் கீழ் இயற்பியல், வேதியியல் ஆகிய இரு துறைகளும் அடங்கும்.

     

    4.4.1 இயற்பியல் (Physics)

    பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் ஆகும்.
     

    சக்தி (Energy)

    ஒரு செயலைச் செய்யக் கூடியதாக ஆக்கும் ஆற்றல், திறன் இவையே சக்தியாகும். இயற்கையில் காணும் பொருள்களினூடே சக்தி கலந்துள்ளது. இதனால் தான் பாரதி,
     

    இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர்
         இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்
    செய்கையின் சக்தியென்பார் - உயிர்த்
         தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்

    (சிவசக்தி - 1)

     

    என்று சக்தியை இயற்கை, ஐம்பூதம், தீ, அறிவு, கடவுள், வானம், பூமி, நான்கு திசைகள் ஆகிய அனைத்திலும் பார்க்கிறார். இந்தச் சக்தியானது, நிலை சக்தி, (potential energy) இயங்கு சக்தி (kinetic energy) என இரு நிலைகளில் காணப்படுகின்றது. சக்தி இல்லாவிடில் உலகில் எந்தச் செயலும் நிகழாது. இந்தச் சக்தியின் ஆற்றல் இக்காலத்தில் பல நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. நீரில் இருக்கும் சக்தி மின்சக்தியாகப் பயன்படுகிறது.

     

     

    காற்றின் வேகத்தால் காற்றாடி சுழல்வது இயந்திர சக்தி (Mechanical energy). அந்தச் சக்தி மின்சக்தியாகக் (Electrical energy) காற்றாலையில் மாற்றப்படுகிறது. இதுபோல் அணு(Atom)வும் அணு மின்சக்தி எடுக்கப் பயன்படுகிறது. இவற்றைக் கொண்டு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய இயலும். ஆகவே தான் பாரதி சக்தியை எல்லாவற்றிலும் கண்டு வணங்குகிறார், போற்றுகிறார்.

     

    புவி ஈர்ப்புவிசை (Gravitational force)

    பரம்பொருளின் அருளைப் பாடவந்த பாரதி அவரது கொடையாகப் புவிஈர்ப்பு விசையைக் கூறுகிறார். இந்த விசை சந்திரனில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறது. மேல் நோக்கிப் எறியப் படும் பொருள்கள் ஈர்ப்பு விசை இல்லையெனில் கீழே விழாது. ஈர்ப்பு விசையால் மண்ணுலக மக்கள் பெறும் நன்மையைப் பாருங்கள்.

     

    விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கி
         யிருக்கும் கடல்நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாக
    கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
    பராசக்தியின் ஆணை! . . . . .
    கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
    அவள் மண்ணிலே ஆகர்ஷ்ணத் திறமையை நிறுத்தினாள்
    அது பொருள்களை நிலைப்படுத்து கின்றது!

    (வசன கவிதை, கடல் -1)

     

    (சுழலும் = சுற்றும், சுழற்சி = சுழல்வது, ஆகர்ஷ்ணத்திறமை = இழுக்கும் சக்தி)
     

    இவ்வாறு சக்தியையும் புவிஈர்ப்பு விசையையும் பாடி அதன் ஆற்றலைக் கண்டு வியக்கிறார். பூமி உருண்டையானது அது தன்னைத் தானே சுற்றிவரும் போது, பூமியில் உள்ள கடல் நீர் தலைகீழாகக் கவிழ்ந்து ஆகாயத்தில் சிதறவில்லை. பூமியிலுள்ள கிணற்று நீர் சிந்தவில்லை. இந்தச் செயல்களெல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன என்று வியக்கிறார். உலகைத் தோற்றுவித்த அன்னையாகிய பராசக்தியே தம் கருணையால் கடல், மலை போன்றவற்றை அந்தந்த இடங்களில் நிலை பெயராது நிற்க ஆணையிட்டிருக்கிறாள் என்று நம்புகிறார்.

     

    4.4.2 வேதியியல் (Chemistry)
     

     

    பொருள்களின் மூலக் கூறுகளையும் அந்த மூலக் கூறுகள் எவ்வாறு எந்தச் சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று வினைபுரிகின்றன என்பதையும் குறிக்கும் அறிவியல் துறையாகும். வேதியியல் பற்றிய தெளிவான அறிவு பாரதிக்கு உண்டு. உலகில் உள்ள மூலப் பொருள்கள் எழுபது, மண்ணுலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தும், எழுபது மூலப் பொருள்களின் சேர்க்கையால் உள்ளன என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பாரதி கட்டுரைகள் பக்: 391)

    வழக்கத்திலுள்ள பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் ஆகியவை மட்டுமன்றி, பழக்கத்தில் இல்லாத குரோமியம், தித்தானியம், யுரேனியம் என்பனவற்றோடு, புதிதான ரேடியம், ஹீலியம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுப் பகுத்துக் காட்டும் அளவு அவருடைய வேதியியல் நூல் அறிவு விரிந்துள்ளது.
     

    திடநிலை, திரவநிலை, வாயு நிலை ஆகிய மூன்று நிலைகளில் காணப்படும் பொருள்களைப் பற்றிக் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார். இத்துடன் வேதியியல் மாற்றம், வேதியியல் சிதைவு போன்றவற்றையும், அணுவைப் பற்றியும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டிய பாடங்கள் என்றும் கூறுகிறார். (பாரதி கட்டுரைகள் பக்.392)

    தங்கம் முதலிய பொருள்களைப் பூமியிலிருந்து வெட்டியெடுக்க வேண்டுமென்றும் (பாரத தேசம் - 3). கல்லுக்குப் பட்டை தீட்டி வயிரமாக்குதல், செம்புக்கு முலாம் பூசித் தங்கமாக்குதல (electro plating) போன்ற அறிவியல் கலைகளில் இந்தியர் சிறந்து விளங்க வேண்டுமென்றும் அவர் விரும்பியிருக்கின்றார். அவர் பாடிய,
     

     

    கல்லை வயிர மணியாக்கல் - செம்பைக்
    கட்டித் தங்கமெனச் செய்தல்

    (வரம் கேட்டல் - 8)

    என்ற பாடல் அவர் எண்ணத்தைப் புலப்படுத்துகிறது.

    இவ்வாறு இயற்பியல், வேதியியல் பற்றிய முழு அறிவுத் தேவை என்பதை விரிவாகத் தம் கட்டுரையில் கூறுகிறார் பாரதி.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:25(இந்திய நேரம்)