Primary tabs
-
தம் மக்கள் உரிய பருவம் அடைந்ததும், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தல் பெற்றோர் கடமை. அவ்வாறு திருமணம் செய்தவர்களைத் தனி வீட்டில் குடிவைத்தலும் அக்கால மரபு ஆகும். இந்த மரபுக்குச் சற்றும் குறைவு ஏற்படாமல், குடும்ப விளக்கு எனும் நூலில் பெற்றோர் தமது மகனுக்குத் திருமணம் செய்வித்துத் தனிவாழ்வு வாழச் செய்கிறார்கள். அத்துடன் அல்லாமல் கணவன் மனைவியிடையே நடக்கும் இல்லற வாழ்வுக்குத் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்கிறார்கள்.
மகனுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மகன் வீட்டிலேயே தங்கி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்கின்ற அவர்கள் தங்கள் மகள் வீட்டிற்குச் செல்ல விரும்பிச் செல்கிறார்கள். சில நாள் அங்கே இருந்துவிட்டுத் திரும்பியவர்கள் அங்கே கிடைத்த அரிய பொருள்களைப் பார்த்து வாங்கி வருகிறார்கள். அந்தப் பொருள்களின் பட்டியலைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார் பாருங்கள்! கும்பகோணத்துக் கூசா, மஞ்சள், குங்குமம், கண்ணாடி, மை வைத்த தகரப் பெட்டி, செஞ்சாந்தின் சீசா, செம்பு, வெற்றிலைச் சீவல் பெட்டி, இஞ்சி மூட்டை ஒன்று, ஒரு கோணிப்பை நிறைய எலுமிச்சை, நான்கு புதிய தவலைகள், பொம்மைகள், இரும்புப் பெட்டி, மிதியடிக் கட்டை, பிள்ளை விளையாட மரச் சாமான்கள், நெல் குத்து மரக்குந்தாணி இரண்டு, தலையணை, மெத்தைக்கட்டு, சல்லடை, புது முறங்கள், எலிப்பொறி, தாழம்பாய்கள், இலுப்பை எண்ணெய், கொடுவாய்க் கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்படம் இல்லாத நல்லெண்ணெய், கைத்தடி, செந்தாழம்பூ, முக்காலி, பச்சரிசி மாங்காய், விளக்குமாறு, பாதாளச் சுரடு, தேங்காய், குடை, மூக்குக் கண்ணாடி முதலிய பொருட்களுடன் பெற்றோர் வந்தனர்.
தலைவனின் பெற்றோர் வண்டியிலிருந்து இறக்கிய பொருட்களைப் பார்த்த தலைவி தனது மாமியாரைப் பார்த்து, ‘இவை எல்லாம் வண்டிக்குள் இருந்தன என்றால் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டாள். அதற்கு மாமியார்,
இவைகளின் உச்சி மீதில்
குன்று மேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என் தலை நிமிர, வண்டி
மூடி மேல் பொத்தலிட்டார்
உன் மாமன் நடந்து வந்தார்(குடும்ப விளக்கு I - ‘மாமி விடை’)
என்று கூறினார். இவ்வாறு கூறும்போது, தான் வண்டியில் பொருள்களின் மேல் அமர்ந்து வந்ததை நினைத்து அவர் கவலைப்படவில்லை. தன் கணவரின் பொறுப்பை உணர்த்துவதாகவே பாரதிதாசன் தெரிவித்து உள்ளார்.
தலைவியின் மாமனாரைத் தன்னலம் கருதாதவராகப் பாரதிதாசன் படைத்துள்ளார். மாமனார் வண்டியில் ஏறாமல் நடந்தே வந்தார். அதை மாமியார் கூறியதைக் கேட்ட மருமகள், தனது மாமனாரின் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் தோன்றிய பரிவையும் கனிவையும் கண்ட மாமனார்,
பாரம்மா பழுத்த நல்ல
பச்சை வாழைப் பழங்கள்
நேரிலே இதனையும் பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை
வண்டியில் எவ்விடத்தில் வைப்பது?(குடும்ப விளக்கு I - ‘மாமன் பேச்சு’)
(மொந்தை = பெரிய செம்பு)
என்று கேட்டார். வாழைப்பழம் நைந்து போகாமல் இருக்கவும், நெய் சிந்தாமல் இருக்கவும் அவற்றைக் கையில் வைத்துக் கொண்டு தான் நடந்து வந்ததாகத் தெரிவித்தார். இச்செயலின் வாயிலாக அவர், குடும்பத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தையும் கடமை உணர்வையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.