Primary tabs
-
இரவு ஒரு மணி. பசி மயக்கத்தில் தூங்கியும் தூங்காமலும் தலைவர் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் ஒரு திருடன் புகுந்தான்; எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான். பின்னர், பெட்டியின் மேலிருந்த சாவியை எடுத்து அலமாரியைத் திறந்தான். அப்போது ‘கிலுக்’ என்ற ஓசை எழுந்தது. அதைக் கேட்ட வீட்டு நாய் குரைத்தது.
நாய் குரைத்த சத்தத்தைக் கேட்டு, தலைவர், தலைவி, பெரிய மகன் மூவரும் விழித்தனர். ‘தெருவில் எதையோ பார்த்துவிட்டு நாய் குரைக்கிறது’ என்று கருதினார்கள். எனவே மூவரும் மீண்டும் தூங்கினார்கள்.
திருடன் அலமாரியில் இருந்த பணம் அனைத்தையும் பையில் போட்டுக் கட்டினான். அந்தப் பையில் பொத்தல் இருந்தது. அந்தப் பொத்தல் வழியாகக் காசுகள் கீழே விழுந்தன. காசுகள் விழுந்த சத்தம் தலைவர், தலைவி, மகன் மூவர் காதுகளிலும் கேட்டது. அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தூங்கினார்கள் என்பதைப் பாரதிதாசன் பின்வரும் வரிகளில் விளக்கியுள்ளார்.
தலைவர் எதையோ தடவுகின்றார்
என்று தலைவி எண்ணி யிருந்தாள்
தலைவி பாக்குத் தடவினாள் என்று
தலைவர் நினைத்துச் ‘சரி’ என்றிருந்தார்
பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்(இருண்ட வீடு: 28)
என்னும் பகுதியில் அவரவர் நிலைக்கு ஏற்ப அவர்கள் எண்ணிய தன்மையைக் காணமுடிகிறது. நள்ளிரவில் எழுந்து பார்ப்பதற்குச் சலிப்பு ஏற்பட்டதால் மூவரும் அதற்கு ஒவ்வொரு காரணத்தைக் கற்பித்துக் கொண்ட தன்மையையும் நாம் உணர முடிகிறது.
பொத்தல் பையை மாற்ற நினைத்த திருடன் அங்கும் இங்கும் தேடி ஒரு துணியை எடுத்தான். அதில் பொத்தல் பையைப் போட்டு மூட்டையாகக் கட்டினான். அதைத் தனது தோளில் போட்டுக் கொண்டு இடது கையால் பிடித்துக் கொண்டான். வலது கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டான்.
வெளியேறுவதற்கு அவன் காலை எடுத்து வைத்தான். அப்போது அவனது காலைத் தேள் கடித்தது. உடனே அவன் காலை உதறினான். அவனது கால் அருகிலிருந்த தகரப் பெட்டியில் பட்டது; சத்தம் கேட்டது; திருடன் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
தலைவர் விரைந்து எழுந்து விளக்கை ஏற்றினார். விளக்கு வெளிச்சம் கதவின் இடுக்கின் வழியாகத் திருடன் மேல் பட்டது. வீட்டில் திருடன் நுழைந்திருப்பதைத் தலைவர் அறிந்தார்.
தலைவியின் தமையன் வாங்கி வந்திருந்த விளையாட்டுத் துப்பாக்கி தகரப் பெட்டியின் மேல் இருந்ததைத் தலைவர் கண்டார்; அதைத் தமது கையில் எடுத்துக் கொண்டார். விளையாட்டுத் துப்பாக்கி என்றாலும் திருடனுக்கு அச்சத்தைக் கொடுக்க அது உதவும் என்று அவர் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தார்.
துப்பாக்கியைக் கண்ட திருடன் என்னைச் சுடாதீர்கள்! என்று பயந்து நடுங்கினான். பண மூட்டையைப் போட்டு விட்டு ஓட நினைத்தான். அந்த வேளையில் பெரிய பையன் விழித்து எழுந்தான். ‘தனது தந்தையார், விளையாட்டுத் துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி’ என்று தவறாக நினைத்ததாகக் கருதினான். திருடனைப் பயமுறுத்துவதற்குத் தான் அந்தத் துப்பாக்கியைத் தலைவர் பயன்படுத்துகிறார் என்று அறியாத அவனது செயலைப் பாரதிதாசன் பின்வரும் வரிகளில் விளக்கியுள்ளார்.
எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம்
சுடுவேன் பாரடா சுடுவேன் என்று
கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர்.
அது கேட்டுப் பெரியவன் ‘அப்பா! அப்பா!
அத்துப்பாக்கி பொய்த் துப்பாக்கி
தக்கை வெடிப்பது தானே!’ என்றான்(இருண்ட வீடு: 30)
அந்தத் துப்பாக்கி, பொய்த் துப்பாக்கி என்பதை அறிந்த திருடன் பயப்படாமல் வெளியேறினான். அவ்வாறு வெளியேறும் போது,
இதுவா தெருவுக்கு - ஏற்ற வழி என்று
கேட்டுச் சென்று மறைந்தான்(இருண்ட வீடு: 30)
என்பதை நகைச்சுவையாகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
திருடன் வெளியேறியதும் தலைவருக்கு கோபம் ஏற்பட்டது. தம்மிடமிருந்த துப்பாக்கியைக் கண்டு பயந்த திருடனுக்கு ‘அது பொய்த் துப்பாக்கி’ என்று புரிய வைத்த மகன் மேல் கடுங்கோபம் கொண்டார். ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் செயல்படத் தொடங்கினார்.
சந்தனம் அரைப்பதற்குப் பயன்படுத்தும் கல் அருகில் கிடந்தது. அதை எடுத்து, பெரிய மகனை நோக்கி எறிந்தார் தலைவர். அது குறி தவறிப் போய், தலைவியின் மார்பின் மேல் விழுந்தது. “ஆ” என்று அலறிய தலைவி இறந்தாள்.
தலைவரின் கோபம் அடங்கவில்லை. மகனின் மேல் எறிந்த சந்தனக் கல் குறி தவறியதை அறிந்தார். அருகிலிருந்த முக்காலியை எடுத்து மகன்மேல் எறிந்தார். அது அவனது தலையில் பட்டது. கோபம் சற்றும் குறையாத தலைவர் மீண்டும் விறகுக் கட்டை ஒன்றை எடுத்து மகன் மேல் எறிந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவன் இறந்து விட்டான்.
நோயால் துன்பப்பட்டிருந்த குழந்தை முன்பே இறந்துவிட்டதை யாரும் அறியவில்லை. அப்போது அங்கே எரிந்து கொண்டிந்த விளக்கு அணைந்ததைப் பாரதிதாசன் ஓர் உவமை மூலம் காட்டியுள்ளார்.
அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
எண்ணெய் சிறிதும் இல்லாது அவிந்தது(இருண்ட வீடு:32)
என்று தெரிவித்துள்ளார்.
அண்டை வீட்டார்கள் சத்தம் கேட்டு வந்தார்கள். தலைவியை விளக்கேற்றும்படி தலைவர் கூறினார். பதில் ஏதும் வரவில்லை. மகனை அழைத்தார். அவனிடமிருந்தும் பதில் வரவில்லை. பக்கத்து வீட்டார் விளக்கு ஏற்றினார்கள். குழந்தை இறந்து கிடந்ததைக் கிழவி ஒருத்தி கண்டாள். தலைவியும், பெரிய மகனும் இறந்ததையும் அறிந்தார்கள். காவலர்கள் வந்து நடந்தவற்றை ஆராய்ந்தார்கள்.
கல்வி அறிவு இல்லாத தலைவியின் செயலாலும் கோபக்காரத் தலைவரின் செயலாலும் குடும்பமே அழிந்ததை ‘இருண்ட வீடு’ காவியத்தின் வழியாகப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.
(இருண்ட வீடு: 33)
என்னும் வரிகளில், கல்வி ஒரு குடும்பத்திற்குக் கட்டாயத் தேவை என்பதைப் பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.