தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.4-இருண்ட குடும்பம்

  • 6.4 இருண்ட குடும்பம்
     

    E

    ஒரு குடும்பம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்குக் குடும்ப விளக்கைப் படைத்தார் பாரதிதாசன். ஒரு குடும்பம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ‘இருண்ட வீடு’ என்று ஒரு தனி நூலைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.
     

    6.4.1 பொறுப்பில்லாத பெண்
     

    பொறுப்பு உணர்வு இல்லாத பெண் ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பம் எவ்வாறு பெருமையையும் பொருளையும் இழக்கும் என்பதைப் பாரதிதாசன் இருண்ட வீட்டில் எடுத்துக் காட்டியுள்ளார். அதிகாலையில் எழுந்து குடும்பக் கடமைகளைச் செய்வது நல்ல பெண்ணின் இயல்பு. அவ்வாறு காலையில் எழுந்திருக்காமல் தாமதமாகப் படுக்கையிலிருந்து எழுந்தாள் தலைவி. அவள் எழுந்த தன்மையை,
     

    பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
    எழுந்தாள். அவளோ பிழிந்து போட்ட
    கருப்பஞ்சக்கையின் கற்றைபோல் இருந்தாள்

    (இருண்ட வீடு: 4)
     

    என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.

    தாமதமாக எழுந்த அவள், செம்பில் இருந்தததைப் பால் என்று அறியாமல் அதில் சாணியைக் கரைத்து வாசல் தெளித்தாள். அப்போது அவளது கூந்தல் கலைந்திருந்த தன்மையையும் அவள் கோலம் போட்ட அலங்கோலத்தையும் பாரதிதாசன் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
     

    அவள் குழல்
    முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
    மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
    வால் இழந்து போன மந்தி முகத்தாள்
    கோலமிடவும் குனிந்தாள்; தாமரை
    போல எழுதப் போட்ட திட்டம்
    சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
    அவிழ்ந்து சிதறுமே அப்படி முடிந்தது

    (இருண்ட வீடு: 4)
     

    என்று பாடியுள்ளார். பொறுப்புடைய பெண்ணின் செயல்கள் யாவும் சிறப்பாக அமையும். பொறுப்பற்ற பெண்ணின் செயல்கள் யாவும் அலங்கோலமாக அமையும் என்பதற்கு அவள் கோலம் போட்ட தன்மையை எடுத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
     

    6.4.2 விருந்தோம்பல் பண்பு அறியாத பெண்
     

    குடும்பவிளக்கில் விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய தலைவியைக் காட்டினார் பாரதிதாசன். அவரே இருண்ட வீட்டின் தலைவி விருந்தோம்பிய தன்மையையும் பாடியுள்ளார் பாருங்கள்!

    தங்கை வீட்டுக்கு வந்திருந்தான் தலைவியின் அண்ணன். அவன் வந்து நெடுநேரம் ஆனபிறகும் அவனை உணவு உண்ண அழைக்கவில்லை தங்கை. உணவு உண்ண அழைக்காததை அறிந்த அண்ணன் அவனாகவே,
     

    சமையல் முடிந்ததா தங்கையே என்றான்

    (இருண்ட வீடு: 15)
     

    அப்போதுதான் சாப்பிட அழைக்காததை எண்ணிய தலைவி சாப்பிட அழைத்தாள். சாப்பிடுவதற்கு முன் குளிக்க நினைத்தான் தலைவியின் அண்ணன். எனவே,
     

    வெந்நீர் இருக்குமா? என்றான்.

    (இருண்ட வீடு: 15)
     

    அதுவரை அது பற்றி நினைக்காத தலைவி வெந்நீர் விரைவில் தருவதாகக் கூறினாள். வெந்நீர் விரைவில் தருவதாகத் தலைவி கூறியதைக் கேட்ட அவளின் அண்ணன், அதுவரை வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினான். வெற்றிலை இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டான்.

    வெற்றிலையைக் கொண்டு வந்து கொடுத்தாள் தலைவி. வெற்றிலை போட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அழைக்கவில்லை. பசியால் துடித்துப் போனான் தலைவியின் அண்ணன்.
     

    விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
    கிளம்பினேனா? கிளியனூரில்
    சிற்றுணவுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
    அகப்படவில்லை; அதற்குள் வண்டியும்
    புறப்பட்டதனால் பொசுக்கும் பசியுடன்
    ஏறினேன்; இங்கே இழிந்தேன்

    (இருண்ட வீடு: 16)
     

    (இழிந்தேன் = இறங்கினேன்)

    என்று, தான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்பதை எடுத்துக் கூறினான். அப்போதும் அதைப் புரிந்து கொள்ளாத தலைவி, தனது தமையன் ஏறி வந்த வண்டியைப் பற்றிப் பேசி மகிழ்ந்தாள்.

    அதற்கு மேலும் பசியைப் பொறுக்க இயலாது என்று எண்ணிய தமையன் உணவு விடுதிக்குச் சென்று உணவு உண்டான்.

    விருந்தோம்பும் பண்பு தெரியாத தலைவியால் அவளது அண்ணன் பசியால் வருந்தினான். இதை இருண்ட வீட்டில் காண முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:54:33(இந்திய நேரம்)