Primary tabs
-
3.5 கவிதையும் இலக்கியமும்
எல்லா மொழிகளிலும் தொடக்கத்தில் கவிதை நாடகங்கள் இருந்திருக்கின்றன. உரைநடை நாடகங்கள் பின்னரே தோன்றியுள்ளன. சங்க இலக்கிய அகப்பாடல்கள் நாடகத் தனிமொழி போலவே அமைந்திருக்கின்றன. பள்ளு, குறவஞ்சி, நொண்டி முதலான நாடக வகைகள் கவிதையாக எழுதப்பட்டதையும், தெருக்கூத்து நாடகங்களில் பாடல்களே இடம் பெற்றதையும் இராம நாடகக் கீர்த்தனையையும் நாடகங்களில் கவிதையின் செல்வாக்கிற்குச் சான்றாகக் கொள்ளலாம். சுந்தரம் பிள்ளை முதல் வரலாற்று நாடகத்தைக் கவிதையில்தான் எழுதினார். இதைத் தொடர்ந்து பல கவிதை நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. அதைப் போலப் பழைய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டும் நாடகங்கள் எழுதப்பட்டன.
த.அ.சுந்தரராசனின் வேங்கையின் வேந்தன் சோழ அரசர்களான விஜயாலயன், ஆதித்தன் முதலானோரின் வரலாற்றைக் கூறுகிறது. நா.கனகராசையர் விஜயநகரின் வீழ்ச்சியை மறைந்த மாநகர் என்னும் நாடகத்தில் காட்டுகிறார். நாயக்க அரசின் காலத்தில் சிறந்த வீரனாகத் திகழ்ந்த விசுவநாதன் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விசுவநாதம் என்ற நாடகமாகப் படைத்துள்ளார். இதே வரலாற்றை ம.கோபாலகிருஷ்ணன் விசுவநாதன் அல்லது கடமை முரண் என்ற நாடகமாகப் படைத்துள்ளார்.
சி.எஸ்.முத்துசாமி ஐயர் ராஜாதேசிங்கு வரலாற்றை ராஜா தேசிங்கு என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். தி.இலக்குவணப் பிள்ளை கேரளநாட்டு வீரர்களுள் ஒருவரான இரவிவர்மன் வரலாற்றை இரவிவர்மன் என்று நாடகமாக்கியுள்ளார். சிவகங்கை மன்னர்களான மருது சகோதர்களின் வரலாற்றைப் பாலசஞ்சீவி தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். நடராஜப்பிள்ளை புகழேந்தி என்ற கவிதை நாடகத்தை எழுதியுள்ளார். மறைமலை அடிகளாரின் அம்பிகாபதி அமராவதியும் கவிதை நாடகமே. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படைத்த கற்பனை நாடகமான மனோன்மணீயம் கவிதை நாடகமாக வெளியாயிற்று.
மனோன்மணீயம்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படைத்த நாடகமான மனோன்மணீயம் லார்டு லிட்டன் என்பவர் எழுதிய இரகசியவழி (Secret Way) என்ற ஆங்கிலக் கதைப்பாடலைத் தழுவி எழுதப்பட்டதாகும். பாண்டியருக்கும் சேரருக்கும் இடையே நாஞ்சில் நாடு என்ற பகுதியின் உரிமை குறித்து நிகழ்ந்த போர் பற்றியது இக்கற்பனை நாடகம். இந்நாடகம் மறைமுகமாக நாட்டு உரிமை உணர்வையும், அந்நியருக்கு அடிமைப்படக் கூடாது என்ற விடுதலை உணர்வையும், தமிழின் உணர்வையும் ஊக்குவிப்பதாக அமைந்தது. இது பல கவிதை நாடகங்களுக்கு முன்னோடியாகவும் அமைந்தது.
சங்க இலக்கியத்தில் காணும் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு சிலர் நாடகங்களைப் படைத்துள்ளனர். புலவர் ஆ.பழனியின் அனிச்ச அடி, செ.உலகநாதனின் அன்னி மிஞிலி, உத்திரங்கண்ணனின் கரிகால் வளவன் இவ்வாறு படைக்கப்பட்டுள்ளன. கு.ராசவேலுவின் அணை கடந்த வெள்ளம், கோவி.மணிசேகரனின் பிறவிப் பெருங்கடல் க.த.திருநாவுக்கரசுவின் அடிமை விலங்கு, பூவண்ணனின் வளவன் பரிசு முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.
ஐசக் அருமைநாதனின் முல்லை மாடம், நெடுமான் அஞ்சி முதலானவையும், கண்ணனின் தமிழ் வாழத் தலை கொடுத்தான், வ.சுப.மாணிக்கத்தின் மனைவியின் உரிமை, பா.கிருட்டினனின் வள்ளல் பேகன் முதலான நாடகங்கள் சங்க கால வள்ளல்களின் வரலாற்றைக் கூறுகின்றன. சிவ.குப்புசாமியின் சங்க கால வள்ளல்கள் நாடகமும் இத்தகையதே.
ஆர்.வெங்கடாசலம் சிலப்பதிகார வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை இமயத்தில் நாம் என்ற நாடகமாக எழுதியுள்ளார். ஏ.என்.பெருமாள் மணிமேகலைக் காப்பியச் செய்தியைக் கொண்டு பீலிவளை என்ற நாடகத்தை எழுதியுள்ளார். வி.எஸ்.வேங்கடராமன் எழுதிய நாகநாட்டு இளவரசி அல்லது பீலிவளை என்பதும் இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டது.