தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10243-3.3 தேசிய இயக்க நாடகங்கள்

  • 3.3 தேசிய இயக்க நாடகங்கள்

    1919 ஆம் ஆண்டு நேர்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி தமிழ் நாடகங்களின் உள்ளடக்கத்தில் தேசிய அலையை ஏற்படுத்தியது. சத்தியமூர்த்தி முதலானவர்கள் முயற்சியால் நாடகக் கலைஞர்கள் தேசிய உணர்வு பெற்றனர். சுப்பிரமணிய சிவா தேசிங்கு ராஜன், சிவாஜி முதலான தேசிய வீரர்களின் கதைகளை நாடகமாக்கினார். இந்நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்துச் சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி வாதிட்டார். இதையடுத்துப் பலர் தேசிய உணர்வு சார்ந்த வரலாற்று நாடகங்களைப் படைத்தார்கள்.

    3.3.1 பாணபுரத்து வீரன்

    சாமிநாத சர்மா பாணபுரத்து வீரன் என்ற கற்பனை வரலாற்று நாடகத்தைப் படைத்தார். இதில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஈசானபுரம் என்று பெயரிட்டும், பாரத நாட்டைப் பாணபுரம் என்று பெயரிட்டும் உருவக நாடகமாக எழுதியிருந்தார். பாணபுரத்து வீரன் வாலீசன் அரசத் துரோகக் குற்றச்சாட்டில் தூக்கில் இடப்படுகிறான். அவ்வேளையில் அவன் மக்களிடம் சுதந்திரக் கனல் கக்கும் வகையில் பேசுகிறான். “நாட்டுக்கு உழைப்பதே ஒருவனது பிறவிப் பயன். தேசபக்தி என்னும் சுடர் இல்லாவிட்டால் மனிதன் தீய பண்புகளுக்கு அடிமையாவான். தேசபக்தி குற்றமானால் விடுதலை தந்தாலும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வதே கடன்” என்று பேசுகிறான். பின் தூக்கிலிடப்படுகிறான்.

    பாணபுரத்திற்கும் ஈசான புரத்திற்கும் போர் மூள்கிறது. பாணபுரத்தின் அடுத்த தலைவனான புரேசன் தோல்வியுற்றுத் தலைமறைவாக இருக்கிறான். அப்போது சிலந்தி பலமுறை முயன்று கூடுகட்டி முடிப்பதைப் பார்க்கிறான். உற்சாகம் கொண்டு வீரர்களைத் திரட்டிப் போர்க்களம் செல்கிறான். புரேசனும் வீரவுரை ஆற்றுகிறான். பாணபுரம் வெற்றிபெறுகிறது.

    இந்நாடகத்தில் பாரதியாரின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’, ‘விடுதலை விடுதலை விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ முதலான பாடல்கள் பாடப்பட்டன. நாடகம் தடை செய்யப்பட்டது. அப்போது தேசபக்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடிக்கப்பட்டது. இதில் காந்தியடிகள் வில்லுப்பாட்டு சேர்க்கப்பட்டது. வாலீசன் தூக்கில் இடப்படும் காட்சியில் அவன் பகத்சிங் போல உடையணிந்திருப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டது. பகத்சிங் வாழ்க என்ற முழக்கமும் நாடகத்தில் எழுப்பப்பட்டது.

    3.3.2 கவியின் கனவு

    நாடு விடுதலை பெறவேண்டும் என்று கவிஞன் கண்ட கனவு பலிப்பதாக எஸ்.டி.சுந்தரம் நாடகம் படைத்தார். சர்வாதிகாரியின் கொடுமைகள் நீக்கப்படுவதாகக் கவியின் கனவு நாடகத்தில் காட்டி வெள்ளையர் ஆட்சி நீக்கப்படவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்தினார். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.டி.சுந்தரம் சிறைச்சாலையில் இந்நாடகத்தை ஆக்கினார்.

    அரசன் ஆத்ம நாதன் இறந்த பிறகு அவன் தம்பி வீரசிம்மன் அரசனாகின்றான். ராஜகுருவின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. ஆத்ம நாதனின் நண்பர் கவிஞர் ஆனந்தன் இதை எதிர்த்தார். மக்களிடையே சுதந்திர உணர்வைப் பரப்பினார். ராஜகுரு, கவிஞரைச் சிறையில் அடைத்தான். அங்கு ஆனந்தன் ஒரு நாடகத்தைப் படைத்தார். அந்நாடகத்தின் பெயர் கவியின் கனவு என்பதாகும். 15 ஆண்டுகள் கழித்து இளவரசியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கவியின் கனவு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அரசி ஊர்வசி, கவிஞரின் மனைவி வாணியைக் கொன்ற நிகழ்ச்சி அந்நாடகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ராஜகுருவின் சதிகள் வெளிப்படுகின்றன. ஆத்மநாதனின் மகன் அரசை ஏற்கிறான்.

    இந்நாடகத்தின் உரையாடல்களில் விடுதலை வேட்கை புலப்படுத்தப்பட்டது. சுகவீரன் என்பவன் பேசுகையில் “மக்களாய்ப் பிறந்தோம். மடிவது திண்ணம், தாய்த் திருநாட்டைத் தகர்த்திடும் எதிரிகள் மாய்ந்திடும் வரை நாம் மறப்போம் சுகத்தை... தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி நாயென வாழ்வதை விழைவது நன்றோ?” என்று விடுதலையுணர்வை வெளிப்படுத்துகிறான். கவிஞர் பேசுகையில், “சுதந்திரம் நம் வாழ்வின் ஜீவன்! நாகரிகத்தின் சின்னம்! சுயமரியாதையின் ஆத்மா! வீரத்தியாகிகளின் வெற்றிப் பரிசு! இதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பது நம் கடமை” என்று சுதந்திரத்தைப் போற்றுகிறார். கவியின் கனவு நாடகம் 2000 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் இந்நாடகம் நடத்தப்பட்ட போது தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இதற்கெனத் தனி ரயில் விடப்பட்டது. அதற்குக் கவியின் கனவு ஸ்பெஷல் என்றே பெயரிடப்பட்டது.

    3.3.3 பிற நாடகங்கள்

    எஸ்.டி. சுந்தரம் எழுதிய வீரசுதந்திரம் என்னும் நாடகம் வாஞ்சி, லஜபதி, பகத்சிங், குமரன் முதலான விடுதலை வீரர்களின் வாழ்க்கையைச் சித்திரித்தது. சக்தி கிருஷ்ணசாமியின் வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழ்வாணனின் புலித்தேவன், டி.கே.எஸ்.குழுவினரின் செக்கிழுத்த சிதம்பரனார், பாலசஞ்சீவியின் தண்ணீர் விட்டா வளர்த்தோம், தே.ப.பெருமாளின் சுதந்திர தீபம் முதலானவையும் விடுதலை வரலாற்றை வெளிப்படுத்திய நாடகங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. கோவை அய்யாமுத்து எழுதிய இன்பசாகரன் நாடகம் பாண்டிய அரசனை எதிர்க்கும் ஈழ மக்கள் உண்ணாவிரதம் இருப்பதாகக் காட்டிக் காந்தியின் போராட்ட முறையைப் புலப்படுத்தியது. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி தேசபக்தி அல்லது சகோதர துரோகம் என்ற நாடகத்தை நடத்தியது. மராட்டியர் முகலாயர் போரை மையமாகக் கொண்ட கதை என்பதால் வேற்றவர் ஆட்சி பற்றிய கண்டனங்கள் நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டன.

    பாவலரின் நாடகங்கள்

    தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் வரலாறுகளை நாடகமாக்கித் தேசிய உணர்வை ஊட்டினார். கிருஷ்ண தேவராயர், ஹைதர்அலி, தேசிங்கு ராஜா, நெப்போலியன் முதலானவர்களின் வரலாறுகளை நாடகமாகப் படைத்துத் தம் கருத்தைப் புலப்படுத்தினார்.

    டி.கே.எஸ். குழுவினரின் நாடகங்கள்

    தேசிய உணர்வு கொண்ட டி.கே.எஸ்.சகோதரர்கள் ஊமைத்துரை, கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி சண்டை, மருதுபாண்டியர் முதலான நாடகங்களை நடத்தினர். இந்நாடகங்கள் தடை செய்யப்பட்டன. தமிழரின் பெருமையை உணர்த்தும் வகையில் ராஜராஜ சோழன் நாடகத்தை நடத்தினர். தமிழரின் வீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்திற்காக ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலுக்குச் சென்று ஓவியங்கள் எழுதி அரங்கு(set) போட்டு மேடையில் நடித்தனர்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    எவற்றை அடிப்படையாகக் கொண்டு, மூவேந்தர்கள் பற்றிய நாடகங்கள் அமைத்தனர்?

    2.

    அரு.ராமநாதன் சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படைத்த நாடகம் எது?

    3.

    ஆறு.அழகப்பன் நாயக்கர் வரலாறு குறித்து எழுதிய நாடகம் எது?

    4.

    இளங்கோ என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?

    5.

    மனோகரா என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?

    6.

    தேசிய நாடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துச் சட்டமன்றத்தில் வாதாடிய தலைவர் யார்?

    7.

    கவியின் கனவு நாடகத்தை மக்கள் மிகவும் ரசித்தமைக்கான சான்றுகள் எவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 29-08-2017 16:42:07(இந்திய நேரம்)