தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P10424-பாஞ்சாலி சபதம்

  • 3.1 பாஞ்சாலி சபதம்

    தமிழனுக்கு நாட்டுப்பற்று ஊட்ட வேண்டிய தேவையை அடிப்படையாக்கியும், ‘பெண்ணடிமை தீர்ந்தாலே நாடு விடுதலை அடையும்’ எனும் கருத்தினை வலியுறுத்தவுமே பாரதி பாஞ்சாலி சபதத்தை உருவாக்கியுள்ளார்.

    பல நாட்டு அரசர்கள் அமர்ந்திருக்கும் அவையில் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டி, ‘இன்னது செய்யாமல், ‘இன்னது நடக்காமல்’ அவிழ்க்கப்பட்ட என் கூந்தலை முடிக்க மாட்டேன் என்ற சபதம் செய்கிறாள். இக்காப்பியத்தில் வீமன், அருச்சுனன் ஆகியோரின் சபதம் இடம் பெற்றிருந்தும் அதனை விடுத்து, வீழ்ந்து கிடக்கும் பெண் சமூகத்திலிருந்து சபதம் மேற்கொள்ளும் ஒரு குரலாகப் பாஞ்சாலியின் சபதத்தை அமைத்திருப்பது மிகவும் சிறப்பானதாகிறது.

    பாரதப் போரின் முக்கியப் பாத்திரப் படைப்புகளான துரியோதனன், துச்சாதனன் ஆகிய இருவரின் உயிரிழப்பே பாஞ்சாலி சபதத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பெண் மூலமாக அதனைச் சாதித்துக் காட்டுகிற புதுமரபினைக் கையாண்டுள்ளார் பாரதியார்.

    மண்ணாசையை அடிப்படையாகக் கொண்டு கதை பின்னப் பட்டிருந்தாலும், பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியைப் பாரதியார் தேசியத்தின் கோபமாகக் காட்டிப் ‘பாஞ்சாலி சபதம்’ எனப் பெயர் வைத்துள்ளார்.

    3.1.1 ஆசிரியர் - பாரதியார்

    அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தைத் தமது பாட்டுத் திறத்தால் எழுச்சி பெறச் செய்தவர் பாரதியார்.

    11.12.1882 இல் எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சுப்பையா என்பது. தம் பதினோராம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். எட்டயபுர சமஸ்தானப் புலவர்களால் ‘பாரதி’ என்ற புகழைப் பெற்றவர். 1903 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டு வரை கவிதைகளை எழுதிக் குவித்தவர். இந்திய நாட்டு விடுதலைக்காகவே எழுதியதால் தேசியக்கவியாகத் திகழ்ந்தார்.

    1920 இல் சென்னையில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்து, திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து வரும் போது, கோயில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11 இல் இறந்தார். இவ்வாறு திருவல்லிக்கேணி யானையால் மென்று தின்னப்பட்ட தமிழ்க் கரும்பான பாரதியைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் ஏராளமான ஆய்வு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாரதியும் பாரதியின் எழுத்துகளும் காலத்தால் அழியாப் புகழ்பெற்ற தன்மை வாய்ந்தன என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

    3.1.2 நூலின் அமைப்பு

    பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஐந்து சருக்கங்களையும் கொண்டது.

    முதற்பாகம்

    அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என இரண்டு சருக்கங்களாகவும்,

    இரண்டாம்
    பாகம்

    அடிமைச் சருக்கம், துகில் உரியல் சருக்கம், சபதச் சருக்கம் என மூன்று சருக்கங்களாகவும், மொத்தம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.

    ஒவ்வொரு பாகமும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. பராசக்தி, வாணி ஆகிய தெய்வங்களைப் பற்றிய கவிதைகள் அவை.

    பாண்டவர்களின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், பாண்டவர்களை அழிக்கச் சகுனியின் சூழ்ச்சியுடன் திருதராட்டிரன் இசைவுடன் விதுரனை அனுப்பிப் பாண்டவர்களைச் சூதுக்கு அழைக்கின்றான்.

    சூதாட்டச் சருக்கத்தில், சகுனியின் சூழ்ச்சி, சூதுத்திறமை, தருமன் நாட்டை இழந்து விடுவது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அடிமைச் சருக்கத்தில், சூதாட்டத்தின் மதிமயக்கத்தில் தன்னை இழந்த தருமன், தன் தம்பியர் நால்வரையும் இழக்கும் நிலை சித்தரிக்கப்படுகிறது.

    துகிலுரிதல் சருக்கத்தில் தருமனிடத்தில் எதுவும் இல்லாத நிலையில் திரௌபதியைப் பகடைப் பொருளாக வைத்து இழக்கிறான். திரௌபதியை அடிமைப்பட்டவளாகக் கருதி, துரியோதனன் துச்சாதனனை அழைத்துத் திரௌபதியைச் சபையில் துகிலுரியுமாறு கட்டளையிடுவது காட்டப்படுகிறது.

    சபதச் சருக்கத்தில் திரௌபதி துகிலுரியப்படலும், கண்ணன் அவளைக் காத்தலும், பீமன், அர்ச்சுனன், திரௌபதி ஆகியோர் சபதம் மேற்கொள்ளுதலும் காட்டப்படுகின்றது. இவ்வாறு பாரதியார் கதையமைப்பினை வைத்து முடித்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 15:02:22(இந்திய நேரம்)