தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியச் சிறப்பு

  • 3.7 காப்பியச் சிறப்பு

    காப்பியங்களில் வருணனை ஓர் இன்றியமையாத கூறாகும். பாஞ்சாலி சபதத்திலும் வருணனை சிறந்த இடத்தைப் பெறுகிறது. அது காப்பியத்தின் சிறப்புக்குரிய ஒன்றாகவும் திகழ்கிறது.

    3.7.1 வருணனை

    இயல்பாகவே இயற்கையின் மீது காதல் கொண்ட கவிஞர், பாஞ்சாலி சபதத்திலும் இயற்கையின் வருணனையை அதிகமாகவே வழங்கியுள்ளார்.

    பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்குப் போகும் வழியில் மாலை நேரத்து வருணனை அழகாகப் பேசப்பட்டுள்ளது. அந்த மாலை நேரத்தின் அழகினைப் பாஞ்சாலியிடம் அருச்சுனன் சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    ‘பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
    என்னடி இந்த வன்னத் தியல்புகள்!
    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்! -- செழும்பொன் காய்ச்சி
    விட்ட ஓடைகள்! -- வெம்மை தோன்றாமே
    எரிந்திடுந் தங்கத் தீவுகள்! -- பாரடி!
    நீலப் பொய்கைகள்! -- அடடா, நீல
    வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
    எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
    எத்தனை! -- கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கருஞ் சிகரங்கள்! -- காணடி, ஆங்கு
    தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
    இருட்கடல்! -- ஆஹா! எங்குநோக்கிடினும்
    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

    சூரியனைச் சூழ்ந்து நிற்கும் மேகங்கள் சிவப்பு நிறமானவையாக இருப்பதனால் அவை தீப்பட்டு எரிவன போல் தோன்றுகின்றன. நல்ல பொன்னைக் காய்ச்சி உருக்கி விட்டாற்போல், தங்கத்தீவுகள் போன்று மேகங்கள் உள்ளன என்று வருணித்துள்ளதைக் காணலாம். அதுபோலவே,

    நீலநிறமான பொய்கையில் மிதக்கும் தங்கத் தோணி போல, நீல நிறமான மேகத்திரளின் நடுவே தங்கமயமான சூரியன் மிதந்து கொண்டிருக்கிறது என்கிறார் கவிஞர்.

    என்னைப் பாவப்படுத்துதல் தகுமோ? பெண்பாவம் பொல்லாதாதலால் உமக்கு இழிவு அன்றோ? என்று அவையில் வீடுமனிடத்திலும் சாத்திரம் கற்றோர்களிடத்திலும் பாஞ்சாலி வேண்டுகோள் விடுக்கிறாள். அந்த வேண்டுகோளைப் பாரதி இவ்வாறு வருணிக்கிறார்:

    அம்புபட்ட மான்போல் அழுது துடித்தாள்
    வம்பு மலர்க் கூந்தல் மண்மேல் புரண்டுவிழத்
    தேவி கரைந்திடும்

    என அவலத்தோடு வருணிப்பதைக் காணலாம்.

    • அஸ்தினாபுரத்தின் பெருமைகள்
    • துரியோதனனின் நகரமான அஸ்தினாபுரத்திற்கு நிகரான ஊர் எதுவுமில்லை. உயர்ந்த, நீளமான தெருக்களும், நகரைச் சுற்றி அகழியுமாகக் கொண்டு விளங்குகிறது. நகரத்தின் மதில்கள், மாளிகைகள் நட்சத்திர மண்டலத்தில்கூட இதுபோலக் காணமுடியாது என்று நகரின் பெருமைகள் பேசுகிறார் பாரதியார்.

      ஆகாயத்தில் மிக உயரத்தில் நெருங்கி அசைந்து, சூரிய கிரணங்களையும் உள்ளே புகாதபடி மறைத்து விளங்குகின்ற வெண்மையான கொடிச்சீலைகள், வெண்ணிறமான ஆகாய கங்கையின் அசைகின்ற குளிர்ந்த அலைகளைப் போலத் தோற்றம் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

      பசுமையான பாக்குமரங்கள் நிறைந்த சோலை, இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான சுவர்க்கலோகமோ? குபேரனது அளகாபுரியோ என்பது போல மாடமாளிகைகள் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

      நெடுந்தேர்களும் யானைகளும், மற்ற சேனைகளும் வீதிகளில் ஒன்றோடொன்று எதிரெதிரில் நெருங்கியிருத்தலால், இடம்பற்றாமல் இருப்பதால் ‘போங்கள், போங்கள்’ என்று பிறரைப் பார்த்துச் சொல்லும் ஒலிகளே கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.

      எல்லா மலைகளிலும் எல்லாக் காடுகளிலும், கடல்களிலும் உண்டாகிற பொருள்கள் குவித்து வைத்திருக்கும் கடைவீதிகளை அஸ்தினாபுரத்தில் காணலாம். பல நடனப் பெண்களின் நடனம், தொழில் உணர்ந்த கலைஞர்களின் ஓவியங்கள் என அஸ்தினாபுரத்தின் பெருமைகள் பற்றிப் ‘பாஞ்சாலி சபதம்’ குறிப்பிடுகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 18:43:42(இந்திய நேரம்)