Primary tabs
-
3.2 கதைச்சுருக்கம்
பாரதி, பிரமனையும் வாணியையும் வணங்கிய பின்பு, அஸ்தினாபுரத்தின் பெருமைகளைக் குறிப்பிடுவதோடு கதை தொடங்குகிறது.
- பொறாமை
- சகுனியின் சூழ்ச்சி
- சூதாட்டமும் இழப்பும்
- பாஞ்சாலியின் சபதம்
பாண்டவர்களின் புகழையும் செல்வப் பெருக்கையும் கண்டு பொறாமைப் பட்ட துரியோதனன், சகுனியின் துணைகொண்டு பாண்டவர்களை அழிக்க நினைக்கிறான். துரியோதனன் தந்தை திருதராட்டிரன் இதற்கு முதலில் இணங்கவில்லையாயினும், பாண்டவர்களைச் சூதுக்கு அழைக்க இணங்குகின்றான். இதன்படி திருதராட்டிரன், பாண்டவர்களை அழைத்து வர விதுரனை அனுப்பப் பாண்டவர்கள் அஸ்தினாபுரிக்கு வருகின்றனர்.
அஸ்தினாபுரியில் பாண்டவர்களைச் சகுனி சூதுக்கு அழைக்கிறான். முதலில் மறுத்த தருமன், சகுனியின் சூழ்ச்சியில் விழுகிறான். இது ‘விதியின் செயல்’ என்று நினைத்துச் சம்மதிக்கிறான். அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுகின்றான்; பின்னர், சகுனி தருமனைப் பார்த்து ‘நாடுகளை இழக்கவில்லை’ - தருமா, நாட்டை வைத்து ஆடினால் இழந்த செல்வங்களைப் பெற்று விடலாம் என்கிறான். சபையில் இருந்த விதுரன் இதற்கு உடன்படாமல் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லித் திருதராட்டிரனை வேண்டுகிறான்.
திருதராட்டிரனோ பதில் சொல்ல முடியாமல் வீற்றிருக்கிறான். துரியோதனன் பதில் பேசுகிறான். விதுரனைத் திட்டுகிறான்; பழிக்கிறான். இதனால் விதுரனும் வாய்மூடித் தலைகுனிந்து அமர்கிறான். தருமன் தன் நாட்டைப் பணயமாக வைத்து இழக்கிறான். மீண்டும் சகுனி, தருமனைப் பார்த்துத், தம்பியர் நால்வரையும் பணயமாக வைத்துச் சூதாடினால், இழந்த அனைத்தையும் பெற்றுவிடலாம் என்று சொல்ல, தருமன் அவ்வாறே தம்பியரைப் பணயப் பொருளாக்கி விளையாட அதுவும் தோல்வியையே தருகிறது தருமனுக்கு. அவன் தன்னையும் இழந்த பின்னர், பாஞ்சாலியையும் பணயமாக வைத்து இழந்து விடுகிறான். தனது ஆசையை நிறைவேற்றிய மாமன் சகுனியைக் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியால் துரியோதனன் கூத்தாடினான்.
பாண்டவர்கள் கடுந்துயரத்தில் மூழ்கினர். இந்நிலையில் துரியோதனன் பாஞ்சாலியை மன்றத்துக்கு அழைத்துவரச் சொல்லித் தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவள் வர மறுக்கிறாள். பின்பு, துச்சாதனனை அனுப்பி இழுத்து வரும்படி சொன்னான் துரியோதனன். துச்சாதனன் சென்று பாஞ்சாலியை அழைத்தான். கடும் கோபத்துடன் பேசினாள். உடனே கூந்தலைப் பற்றி இழுத்து வந்தான். சபையில் நின்றிருந்த ஐவரையும் பார்த்துக் கடுமையாகப் பேசினாள் பாஞ்சாலி. அந்நேரத்தில், பாஞ்சாலியின் சேலையைப் பற்றி இழுக்குமாறு கர்ணன் துச்சாதனனுக்குச் சொல்ல, துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையைக் களைந்தான். பாஞ்சாலி, கண்ணனிடம் வேண்ட, கண்ணனின் அருளால் பாஞ்சாலியின் துகில் வளர்ந்து கொண்டே போகத் துச்சாதனன் மயங்கிக் கீழே சாய்ந்தான். துரியோதனனும் தலை கவிழ்ந்தான். இதனையடுத்து, கடுங்கோபங்கொண்ட வீமன், துரியோதனனையும், துச்சாதனனையும் போர்க்களத்தில் கொல்வேன் என்று சபதம் செய்தான். வீமனைத் தொடர்ந்து, அருச்சுனனும், பாதகனான கர்ணனைப் போரில் வெல்வேன் என்று சபதம் மேற்கொண்டான். இறுதியில் பாஞ்சாலி, துச்சாதனனின் இரத்தத்தையும் துரியோதனனின் இரத்தத்தையும் கலந்து அவிழ்க்கப்பட்ட என் கூந்தலில் எண்ணெயாகப் பூசி முடிப்பேன். அது நிகழாத வரைக்கும் என் கூந்தலை முடியேன் என்று சபதம் செய்தாள். இந்நேரத்தில் ஐம்பெரும் பூதங்கள், இப்புவி தருமனுக்கே எனச் சாட்சியளிக்கும்படி பேரொலி எழுந்தது. இவ்வாறு பாஞ்சாலி சபதத்தின் கதை முடிகிறது.